






கரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக அரசு மற்றும் தனியார் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. அரசுப் பேருந்துகள் பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தனியார் பேருந்துகள் ஷெட்டுகளில் நிறுத்தி வைக்கப்பட்டன. சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் ஆம்னி பேருந்து நிலையத்தில் தனியார் ஆம்னி பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இங்கு இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் தீயை போராடி அணைத்தனர். இந்த தீ விபத்தில் மூன்று பேருந்துகள் முற்றிலும் எரிந்து நாசமானது.
தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நீண்ட நாட்களாக பேருந்தகள் ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பேருந்துகளை பராமரிப்பதிலும் அலட்சியத்தோடு இருந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.. பேருந்துகளை பராமரிக்காமல் விட்டதனால் தீ விபத்து ஏற்பட்டுள்ளதா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை கோயம்பேட்டில் ஆம்னி பேருந்துகள் எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.