Skip to main content

முக்கிய சட்ட மசோதாக்களை பேரவையில் தாக்கல் செய்த அமைச்சர்கள்... ரூபாய் 14 ஆயிரம் கோடிக்கு துணை பட்ஜெட்டை தாக்கல் செய்த துணை முதல்வர்!

Published on 16/09/2020 | Edited on 16/09/2020

 

tamilnadu assembly session deputy cm paneer selvam

 

 

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று (16/09/2020) பேரவையில் காரசாரமான விவாதம் நடைபெற்றது.

 

பல்வேறு முக்கிய சட்ட மசோதாக்களை அந்ததந்த துறையைச் சேர்ந்த அமைச்சர்கள் தாக்கல் செய்தனர். அதன்படி, ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை அரசுடைமையாக்க சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவையும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை அமைப்பதற்கான மசோதாவையும் பேரவையில் அமைச்சர் கடம்பூர் ராஜு தாக்கல் செய்தார்.  அவசர சட்டம் மூலம் அரசுடைமையாக்கப்பட்ட நிலையில், சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

உள்ளாட்சி அமைப்புகளில் தனி அலுவலர்களில் பதவிக்காலம் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் வரை நீட்டிப்பு செய்வதற்கான சட்ட மசோதாவை தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

 

அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதற்கான சட்ட மசோதாவை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதா மூலம் அண்ணா பல்கலைக்கழகம், அண்ணா தொழிநுட்பம் - ஆராய்ச்சி நிறுவனம் என்ற பெயரில் பிரிக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளை அண்ணா பல்கலைக்கழகம் நிர்வகிக்கும். அண்ணா தொழில்நுட்பம் - ஆராய்ச்சி நிறுவனம் சென்னையில் தனியாக செயல்படும்.

 

திருமணங்கள் பதிவு செய்தல் சட்டத்திருத்த மசோதா தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யபட்டது. இனி மணமகன் அல்லது மணமகளின் சொந்த ஊரில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்துக்கொள்ளலாம். திருமணம் நடக்கும் இடத்தில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில்தான் பதிவு செய்யமுடியும் என்பதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்கள் அனைத்தும் பேரவையில் நிறைவேறியது.

 

அதைத்தொடர்ந்து, தமிழகத்தில் ரூபாய் 14 ஆயிரம் கோடிக்கு துணை பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

 

‘கரோனா நோயாளிகளுக்கான உணவு மற்றும் மருத்துவ செலவுகளுக்காக ரூபாய் 3,359.12 கோடி கூடுதல் தொகை மதிப்பீடுகளில் சேர்ப்பு. கரோனா காலத்தில் குடும்ப அட்டைதாரர்கள், நலவாரிய உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட ரூபாய் 4,218.20 கோடி துணை மதிப்பீடுகளில் சேர்க்கப்பட்டுள்ளது. தொற்று மருந்துகள், நோய் கண்டறியும் சாதனங்கள், ஆக்ஸிஜன் வசதிக்கொண்ட படுக்கை வசதி உள்ளிட்டவைகளுக்கு ரூபாய் 1,109 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ், பல்வேறு திட்டங்களை செயல்படுத்திட வேளாண்துறைக்கு ரூபாய் 107.40 கோடி அனுமதி. விவசாயிகள் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யும் திட்டத்தினைச் செயல்படுத்த மாநில அரசின் மானியமாக ரூபாய் 316.80 கோடி வழங்கப்பட்டுள்ளது.

 

தமிழ்நாடு மின்விசை மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கியின் மூலதன கோட்பாட்டை பின்பற்ற ரூபாய் 437 கோடி, தேனி, திருப்பூர் மாவட்டங்களில் கால்நடை மருத்துவக்கல்லூரி, ஆராய்ச்சி நிலையங்கள் அமைக்க ரூபாய் 82.60 கோடி, தனியார் கரும்பு உற்பத்தி ஆலைகள், விவசாயிகளுக்கு நியாயமான மற்றும் ஆதார விலைக்கான நிலுவைத்தொகை வழங்க ரூபாய் 170.28 கோடி, 5 புதிய மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலகங்கள், அரசு அலுவலகங்கள் கட்டுவதற்கு ரூபாய் 646.26 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” இவ்வாறு துணை நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

Next Story

சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல்

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
Chennai Corporation budget tabled today

இந்த ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று முன்தினம்(19.02.2024) காலை 10 மணியளவில் தாக்கல் செய்தார். அதன்படி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு புதிய திட்டங்களை அறிவித்தார். 

இதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் நேற்று (20-02-24) 2024 - 2025ஆம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டை தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்த நிலையில், சென்னை மாநகராட்சியின் 2024 - 2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று (21-02-24) தாக்கல் செய்யப்படவுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 2023 - 2024ஆம் ஆண்டுக்கான விரிவான பட்ஜெட்டை மேயர் பிரியா தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டில், ‘மக்களை தேடி மேயர்’ உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், சென்னை மாநகராட்சியின் 2024 - 2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் இன்று (21-02-24) காலை 10 மணிக்கு மேயர் பிரியா தாக்கல் செய்கிறார். 

இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில், பள்ளி, கல்வி, விளையாட்டு, திறன் மேம்பாடு உள்ளிட்ட பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனிடையே, இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் மீதான விவாதம் நாளை (22-02-24) நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“உழவர்களை உயிராக நினைக்கிறது தி.மு.க அரசு” - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
Tamil Nadu Chief Minister M. K. Stalin pridely says the DMK government considers the farmers alive

இந்த ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று (19.02.2024) காலை 10 மணியளவில் தாக்கல் செய்தார். அதன்படி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு புதிய திட்டங்களை அறிவித்தார். இதனை தொடர்ந்து, சட்டப்பேரவையில் இன்று (20-02-24) காலை 11 மணிக்கு 2024 - 2025ஆம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டை, தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,  தாக்கல் செய்து பேசினார்.

இந்த நிலையில், வேளாண் பட்ஜெட் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், ‘மண்ணும் செழித்தது! மக்களும் செழித்தார்கள்! இதனைக் கண்முன்னால் கண்டு வருகிறோம். இந்த வரிசையில் நான்காவது முறையாக வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்றைய தினம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இரண்டு மணிநேரம் அவரால் வாசிக்கப்பட்ட இந்த நிதிநிலை அறிக்கையானது இயற்கை வளத்தை மேம்படுத்திக் காட்டும் ஈடு இணையற்ற அறிக்கையாக அமைந்துள்ளது. வேளாண்மையை உணவுத் தேவைக்காக மட்டுமோ அல்லது, அதனைத் தொழிலாக மட்டுமோ கருதுபவர்கள் அல்ல நாம். நமது தமிழ்ப் பண்பாட்டுடன் கலந்ததுதான் வேளாண்மையாகும். அதனால்தான் அதற்கெனத் தனி நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யும் கடமை நமக்கு உண்டு. மொழிக்கு இலக்கணம் வகுத்ததுபோல நிலத்துக்கும். மண்ணுக்கும் இலக்கணம் வகுத்த நம் முன்னோர் வழியில் நாம் செயல்பட்டு வருகிறோம் என்பதற்கு அழுத்தமான சாட்சியமாக 2024 -25ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மண் வளம் பேணிக் காக்கவும், மக்கள் நலன் காக்கவும் உயிர்ம வேளாண்மை போன்ற அனைத்து வேளாண் செயல்முறைகளையும் ஊக்கப்படுத்திட 'முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்' அமைந்துள்ளது. இராசயன உரங்களை அதிகம் பயன்படுத்துவதால் மண்ணிலுள்ள நுண்ணியிர்களின் எண்ணிக்கை குறைந்து மண் வளம் குறைந்து வருகிறது. எனவே மண் வளத்தை மீட்டெடுக்க அனைத்து முயற்சிகளையும் அரசு எடுத்து வருகிறது. இரசாயன உரங்களைக் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நெற்பயிரில் இரசாயன மருந்துகளைக் குறைத்தலுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டமானது 2400-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளை உயர்த்தப் போகிறது.

Tamil Nadu Chief Minister M. K. Stalin pridely says the DMK government considers the farmers alive

மரபுசார் நெல் இரகங்களை ஊக்குவிக்கப் போகிறோம். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் சிவன் சம்பா நெல் ரகம் அதிகம் பயிரிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களின் வாய்க்கால்களைத் தூர்வாரும் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நெல் உலர்த்தும் இயந்திரங்கள் மானியத்தில் வழங்கப்பட உள்ளன. வேளாண் இயந்திரங்கள் வாடகைக்குக் கிடைக்கும் மையங்களை உருவாக்க இருக்கிறோம். இயற்கைச் சீற்றங்களால் உழவர்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பில் இருந்து அவர்களை மீட்கப் பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அந்தத் திட்டத்துக்கு மட்டும் 1,775 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 'ஒரு கிராமம் ஒரு பயிர்' என்ற திட்டம் 15 ஆயிரத்து 280 கிராமங்களில் செயல்படுத்தப்பட இருக்கிறது.

பத்து ஆண்டுகளாகப் பாசன மின் இணைப்புக்கான விண்ணப்பங்களை அ.தி.மு.க. அரசு கிடப்பில் போட்டு வைத்திருந்தது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் மட்டும் 1.50 லட்சம் பேருக்கு இலவச மின் இணைப்புகளை கழக அரசு வழங்கி உள்ளது. இந்த ஆண்டில் மேலும் 50 ஆயிரம் பேருக்கு இலவச மின்சார இணைப்பு வழங்க இருக்கிறோம். நெல்லுக்குச் சிறப்பு ஊக்கத்தொகை வழங்க 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கரும்பு விவசாயிகளுக்குச் சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு 215 ரூபாய் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. தொழில் துறை சார்பில் நடைபெறுவதைப் போல வேளாண்மைத் துறை சார்பில் கண்காட்சி. திருவிழா. சங்கமம் போன்றவற்றை நடத்தி வேளாண்மை மீதான ஆர்வத்தைத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து உருவாக்கி வருகிறது. 'உழவர்கள்' மட்டும்தான் வேளாண்மை செய்ய வேண்டும் என்று இல்லை. தொழில் துறையைப் போல அனைவரையும் வேளாண்மையை நோக்கி ஈர்க்க வைக்கும் முயற்சித் திட்டங்களை இந்த நிதிநிலை அறிக்கை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டு இருப்பதை அனைவரும் உணரலாம். முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா மலர்க் கண்காட்சியானது சென்னையில் நடைபெற்று வருகிறது. நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானவர்கள் அதனைப் பார்த்து வருகிறார்கள். இவை போன்ற முயற்சிகள், வேளாண்மையை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செலுத்தும்.

மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்து, உழவர் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது ஒன்றிய பா.ஜ.க. அரசு. ஒன்றரை ஆண்டுகள் தலைநகர் டெல்லியில் தங்கிப்போராடினார்கள் உழவர்கள். அவர்களது எதிர்ப்பினால் பின்வாங்கியது பா.ஜ.க. அரசு. இப்போது மீண்டும் டெல்லியில் உழவர்கள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.  அவர்கள் மீது இரக்கமற்ற வகையில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. பசிப்பிணி போக்கும் மருத்துவர்களாம் வேளாண் பெருமக்களது கோரிக்கைகளுக்குச் செவிமடுக்கக்கூட மனமில்லாத வகையில் ஒன்றிய அரசு உள்ளது. உழவர்களைத் தடுக்கச் சாலைகளில் ஆணியைப் புதைக்கும் அரசாக பா.ஜ.க. அரசு உள்ளது. அதேநேரத்தில் உழவர் பெருமக்களது வாழ்வுக்கும் மேன்மைக்குமான அனைத்துத் திட்டங்களையும் தீட்டி வழங்கும் அரசாகத் தி.மு.க. அரசு உள்ளது. இதன் மூலமாக உழவர் பெருமக்களை உயிராக நினைக்கிறோம் என்பதை அனைவரும் அறியலாம்’ என்று தெரிவித்துள்ளார்.