Skip to main content

பெரியார் பல்கலைக்குள் காவியை நுழைக்கும் பாஜக! பெயரை மாற்றவும் தீவிரம்!! 

Published on 07/11/2019 | Edited on 07/11/2019

சேலத்தை அடுத்த ஓமலூர் அருகே, 1997ம் ஆண்டு பெரியார் பிறந்த நாளான செப். 17ம் தேதியன்று, சேலம் பெரியார் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய பின்தங்கிய மாவட்டங்களில் உயர்கல்வியை வளர்த்தெடுக்கும் நோக்கில் அப்போதைய முதல்வர் கலைஞர், அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோரின் பெரு முயற்சியால் இப்பல்கலை தொடங்கப்பட்டது.

salem periyar university bjp leader h raja entry


பேராசிரியர் நியமனங்களில் ஊ-ழல், மாஜி பதிவாளரின் மர்மமான தற்கொலை என தொடர்ந்து சர்ச்சைகளில் அடிபட்டுக் கொண்டிருக்கும், சேலம் பெரியார் பல்கலைக்கழகம், இப்போது காவி கும்பலின் கைப்பாவையாகவும் மாறி இருப்பது கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.


''சமூகத்தில் புரையோடி, கெட்டித்தட்டிப் போயிருக்கும் சாதிய கட்டமைப்பையும், மதங்களின் பேரால் அரங்கேறும் காட்டுமிராண்டித் தனங்களையும் ஒழிக்க வேண்டும் என்று மூத்திரச்சட்டியைத் தூக்கிக்கொண்டு வாழ்நாளெல்லாம் போராடினார் தந்தை பெரியார். அந்தப் பெரியாரின் சித்தாந்தத்திற்கு பங்கம் ஏற்படுத்தும் எல்லா வேலைகளையும் பழுதில்லாமல் செய்து வருகிறது, இப்போதுள்ள பாஜகவின் விசுவாசியான அதிமுக அரசு. அதுவும் அண்ணாவின் பெயரில் கட்சியை வைத்துக்கொண்டு, இயன்ற வகைகளில் எல்லாம் பகுத்தறிவுக் கொள்கைகளை சிதைத்து வருகிறது ஆளும்தரப்பு,'' என்று பல்கலை பேராசிரியர்கள் வட்டாரத்திலேயே கண்டனக்குரல்கள் எழுந்துள்ளன.


இப்போதைய துணைவேந்தரும், அவருடைய பரிவாரங்களும் சேர்ந்து கொண்டு, சந்திரமுகி படத்தில், கங்கா மெல்ல மெல்ல சந்திரமுகியாக மாறி வருவதுபோல், பெரியார் பல்கலையை மெல்ல மெல்ல காவி கூடாரமாக உருமாற்றி வருவதாகச் சொல்கிறார்கள் பல்கலை வட்டாரங்களில்.


என்னதான் நடந்தது என்று நாமும் தீவிர விசாரணையில் இறங்கினோம். 


கடந்த செப். 24ம் தேதியன்று, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, தர்மபுரியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சேலம் வழியாக காரில் சென்றார். செல்லும் வழியில், திடீரென்று பெரியார் பல்கலைக்குள் காரை திருப்பிவிடச் சொன்ன அவர், அங்குள்ள புவியமைப்பியல் இணை பேராசிரியர் ராம்குமார் என்பவருடன் உரையாடினார். அங்கேயே மதிய உணவையும் முடித்துக்கொண்டு, கிளம்பிச் சென்றார். ஒன்றரை மணி நேரம் இந்த சந்திப்பு நடந்துள்ளது. இத்தனைக்கும் அன்று, துணைவேந்தர் ஊரில் இல்லை. அவருடைய அறையில் கதவுகளை மூடிக்கொண்டு ரகசியமாக ஆலோசனை நடத்தியுள்ளனர்.

இந்த சந்திப்புக்குப் பிறகு வெளியே வந்த ஹெச்.ராஜா, இங்கே புரபசராக இருக்கும் தனது நண்பரை பார்க்க வந்தேன் என்று சொன்னாரே தவிர, யாரை சந்தித்தார், என்ன பேசினார் என்றெல்லாம் அப்போது வெளிப்படையாக ஊடகங்களிடம் பகிர்ந்து கொள்ளவில்லை.

salem periyar university bjp leader h raja entry


இந்த நிலையில்தான், கடந்த அக். 24ம் தேதியன்று பல்கலையில் பட்டமளிப்பு விழா நடந்துள்ளது. அதையொட்டி, பல்கலை முகப்பில் கம்பீரமாய் நின்றிருக்கும் பெரியார் சிலையை மூடி மறைக்கும் வகையில் டிஜிட்டல் பலகை பொருத்தப்பட்டு இருந்தது. அந்தப் பலகையில் இந்து மத அடையாளங்களை குறிக்கும் வகையில் விநாயகர், ஓம், திரிசூலம் ஆகிய படங்கள் எல்இடி விளக்குகளால் ஒளிரச் செய்யப்பட்டிருந்தன. 


பல்கலையில் எவ்வளவோ இடங்கள் இருந்தும் பெரியார் சிலையைச் சுற்றிலும் கடவுள் படமும், இந்து மத சின்னங்களையும் பொருத்தி இருப்பதில் ஆர்எஸ்எஸ், பாஜகவின் தலையீடும், உள்நோக்கமும் இருப்பதாகவே நடுநிலையாளர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. பாஜக, திட்டமிட்டே பெரியாரை அவமதிப்பதும், அதன்மூலம் சர்ச்சையை உருவாக்கி அரசியல் செய்யவும் முனைகிறது என்றும் சொல்கிறார்கள்.

salem periyar university bjp leader h raja entry

 

அதேநேரம் பெரியார் பல்கலை காவி மயமாகி வருவது ஒரு நாளில் நடந்தது அல்ல என்கிறார்கள் பல்கலை பேராசிரியர்கள். நாம் பேராசிரியர்கள் சிலரிடம் பேசினோம்.


''சார்... இந்தப் பல்கலைக்கழகம், பெரியாரின் தத்துவத்திற்கு எதிராகவும், சமூக நல்லிணக்கத்தை உருக்குலைக்கும் வகையிலும் அண்மைக் காலமாக செயல்பட்டு வருகிறது. சாதிகளே கூடாது என்றார் பெரியார். ஆனால், இந்தப் பல்கலையில் துணை வேந்தர், பதிவாளர், என்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளர், ஆர்ஆர்சி ஒருங்கிணைப்பாளர், ஆடை வடிவமைப்புத்துறைத் தலைவர், உணவு அறிவியல் துறை தொலைநிலைக் கல்வித்திட்ட துணை இயக்குநர் என முக்கிய பொறுப்புகளில் எல்லாம் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவர்கள் தான் கோலோச்சுகின்றனர். 

salem periyar university bjp leader h raja entry



உணவு அறிவியல் துறைத்தலைவராக உள்ள பூங்கொடி விஜயகுமார், ஆளுநரின் நியமனமாக (கவர்னர் நாமினி) சிண்டிகேட் உறுப்பினராகி இருக்கிறார். அவரும் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர். அவர்கள் எடுக்கும் முடிவுகள்தான் இங்கே அமல்படுத்தப்படுகிறது. இங்கே எல்லாமே 'ஜி ஃபேக்டர்'தான். (கவுண்டர்கள் என்பதை அவர்கள் 'ஜி ஃபேக்டர்' என்கிறார்கள்).


துணைவேந்தர் லஞ்ச குற்றச்சாட்டுகளில் சிக்காவிட்டாலும், அவரும் ஆர்எஸ்எஸ் பின்புலம் உள்ளவர்தான். பாஜகவின் ஆசிகள் இருந்ததால்தான், துணைவேந்தர் பதவிக்கான நேர்காணலில் 8வது இடத்தில் இருந்த அவரால், இந்தப் பதவிக்கு வர முடிந்தது. அடுத்து, பாஜக, சங்கப்பரிவாரங்களின் கிளையாக செயல்படும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பைச் சேர்ந்த உதவி பேராசிரியர்களும் இங்கே ஆதிக்கம் செலுத்துகின்றனர். 

salem periyar university bjp leader h raja entry


கடந்த ஆண்டு, விவேகானந்தர் ரத யாத்திரையை பெரியார் பல்கலையில் இருந்தே தொடங்கினர். அந்த நிகழ்ச்சியில் பாஜக தலைவர் வானதி சீனிவாசனும் கலந்து கொண்டார். பெரியார் பல்கலை புவியமைப்பியல் துறை இணை பேராசிரியராக உள்ள ராம்குமார்தான் அதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். இந்த ராம்குமாரைத்தான் கடந்த மாதம் ஹெச்.ராஜா சந்தித்து ரகசியமாக உரையாடிவிட்டுப் போயிருக்கிறார். அந்த சந்திப்பின் தொடர்ச்சிதான், பட்டமளிப்பு விழாவின்போது பெரியார் சிலையைச் சுற்றிலும் இந்து மத அடையாளங்கள் பொருத்தப்பட்டுள்ளது.


அதேபோல் செப். 5ம் தேதி, ஆசிரியர் தினத்தன்று, பல்கலையில் செயல்படும் ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் மற்ற மாணவர்களை கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று துணைவேந்தருக்கு வாழ்த்துச் சொல்ல வைத்துள்ளனர். இப்படி சாதியும், காவி வர்ணமும் பல்கலைக்குள் துளித்துளி விஷமாக படிப்படியாக பரப்பி வருகிறார்கள். அதற்கு பல்கலை நிர்வாகம் எல்லா வகையிலும் ஒத்துழைக்கிறது. இதையெல்லாம் எதிர்த்துக் கேள்வி கேட்டால், பாஜக எப்படி தேசத்துரோகி என்கிறதோ, அதேபோல் பல்கலையும் எங்களை நிர்வாகத்துக்கு எதிராக செயல்படுகிறார் என்று சொல்லி சஸ்பெண்டு நடவடிக்கை எடுக்கிறது,'' என்கிறார்கள் பேராசிரியர்கள்.


யார் அந்த ராம்குமார்? அவருடன் ஹெச்.ராஜா என்னதான் பேசினார்? அதையும் ஆர்எஸ்எஸ் வட்டாரங்களில் விசாரித்தோம்.


''செப். 24ம் தேதி, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறித்த பரப்புரை கூட்டம் தர்மபுரியில் நடந்தது. அதில் பேசுவதற்காக ஹெச்.ராஜா வந்திருந்தார். பெரியார் பல்கலையில் புவியமைப்பியல் துறை இணை பேராசிரியராக உள்ள ராம்குமார், அடிப்படையில் ஒரு ஆர்எஸ்எஸ்காரர். கீழடி அகழ்வாராய்ச்சியிலும் அரசுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். அதனால், பெரியார் பல்கலையில் புவியமைப்பியலையும் தொல்லியலையும் ஒருங்கிணைத்து 'ஜியோஆர்க்' என்ற புதிய படிப்பைத் தொடங்கலாம் என்று ஏற்கனவே சிண்டிகேட்டில் ஒரு தீர்மானம் கொண்டு வந்திருந்தார். 

salem periyar university bjp leader h raja entry


மேலும், சேலத்தில் தொல்லியல் துறை சார்பில் ஒரு ஆய்வு மையம் அமைக்கவும் பாஜக வட்டாரங்களில் பேசி வருகிறார். இது தொடர்பாக ஏற்கனவே ஹெச்.ராஜாவிடம் அவர் பேசியிருந்தார். அதனால் அவர் சேலம் வரும்போது சந்திப்பதாக ஒருமுறை சொல்லி இருந்தார். ஹெச்.ராஜா, பாஜகவின் தேசிய செயலாளர் மற்றும் மத்திய பாஜக அரசிலும் அவருக்கு செல்வாக்கு இருக்கிறது. 


அதன்பேரில்தான் புரபசர் ராம்குமார், தொல்லியல் ஆய்வு மையம் குறித்த கோரிக்கையை அவரிடம் கூறியிருந்தார். இதை முன்னிட்டே, அவர்கள் இருவரின் சந்திப்பும் பெரியார் பல்கலையில் நடந்தது. துணைவேந்தர் அறையில் ராம்குமார், கீழடி அகழாய்வு சம்பந்தமான சில வீடியோ காட்சிகளை பவர் பாயிண்ட் மூலம் போட்டுக் காட்டினார். 


சொல்லப்போனால் அன்றைய தினம் ஹெச்.ராஜாவின் பயணத்திட்டத்தில் பெரியார் பல்கலைக்குச் செல்லும் நிகழ்ச்சி நிரலே இல்லை. வரும் வழியில் அவருக்கு அப்படி ஒரு யோசனை தோன்றி இருக்கிறது. அதை உடனே சேலத்தில் உள்ள ஆர்எஸ்எஸ், பாஜக நிர்வாகிகளுக்கு தெரிவித்தார். அதன்பேரில்தான் நாங்களும் பல்கலைக்குச் செல்ல நேர்ந்தது. இதில் துளிகூட அரசியல் கிடையாது,'' என்கிறார்கள் ஆர்எஸ்எஸ்காரர்கள்.

salem periyar university bjp leader h raja entry


எது எப்படி இருப்பினும், பெரியார் பல்கலையின் மீது படர்ந்து வரும் காவி வர்ணம், அரசியல் களத்திலும் சூட்டைக் கிளப்பி இருப்பது என்னவோ உண்மைதான். திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பல்கலையை கடுமையாக சாடியுள்ளார். நாம் அவரிடம் பேசினோம்.


''பெரியார் பல்கலை துணைவேந்தர் குழந்தைவேல் அப்பட்டமான பாஜக ஆதரவாளர். அக்கட்சியின் ஆதரவோடுதான் அவர் இங்கே துணைவேந்தர் பதவிக்கே வந்திருக்கிறார். அதனால்தான் அவர் தொடர்ந்து பெரியாரின் சிந்தனைகளுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். பட்டமளிப்பு விழா அழைப்பிதழில்கூட பெரியாரின் படத்தை புறக்கணித்து விட்டனர். அவருடைய சிலையைச் சுற்றிலும் இந்துத்துவ சின்னங்களை ஒளிரச் செய்திருப்பதும் தற்செயலானது அல்ல. 


ஓர் அரசு விழாவில், பார்ப்பன, இந்துத்துவ அடையாளச் சின்னங்களை திட்டமிட்டே, அதுவும் காலம் முழுவதும் சனாதன இந்துத்துவத்திற்கு எதிராக தன் வாழ்நாளெல்லாம் உழைத்த அறிவாசான் பெரியார் சிலையின் பின்புலத்தில் இப்படிச் செய்வது அயோக்கியத்தனம். துணைவேந்தர் ஆதரவுடன் சட்ட விரோத, இந்துத்துவ திணிப்புகள் நடந்து வருகின்றன. பல்கலையைக் கண்டித்து விரைவில் மாணவர்களைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும்,'' என காட்டமாகவே கூறினார், கொளத்தூர் மணி.


பெரியார் பல்கலை துணைவேந்தர் குழந்தைவேலிடம் இதுகுறித்து கேட்டபோது, ''ஹெச்.ராஜாவும், இணை பேராசிரியர் ராம்குமாரும் நண்பர்கள். அதனால் அவர், பல்கலைக்கழகத்திற்கு நேரில் வந்து சந்தித்துள்ளார். அன்றைய தினம் நான் வெளியூரில் இருந்தேன். ஹெச்.ராஜா இங்கு வந்த பிறகுதான், அவருடைய வருகை குறித்தும், என் அறையைப் பயன்படுத்திக் கொள்வது குறித்தும் தகவல் அளித்தனர். 

salem periyar university bjp leader h raja entry


என் அனுமதியுடன்தான் துணைவேந்தர் அறையில் அவர்களின் சந்திப்பு நடந்தது. அப்போது கட்சிக்காரர்கள் சிலரும் அங்கே வந்தது குறித்து ஹெச்.ராஜாவும் கண்டித்து இருக்கிறார்.


பெரியார் சிலை பின்னணியில் இந்துமத அடையாளங்களை ஒளிரவிடப்பட்டது குறித்து ஆட்சேபணை எழுந்திருக்கிறது. இதுகுறித்து விசாரிப்பதற்காக ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது. அந்த கமிட்டி முடிவின்படி, அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மற்றபடி, பல்கலைக்கழகம் என்பது பொது நிறுவனம். யார் வேண்டுமானாலும் வரலாம்... போகலாம். இதில் தப்பு ஒன்றும் இல்லை,'' என்றார்.


மாநில அரசின் உயர்கல்வித்துறையை கைக்குள் வைத்துக்கொண்டு நினைத்ததை நினைத்த மாத்திரத்தில் சாதித்து வருகிறது பாஜக மற்றும் சங்கப்பரிவாரங்கள் தரப்பு என்பதும் மறுக்க முடியாத உண்மை.