Skip to main content

20 லட்சம் கோடி நிதி தொகுப்பு!  எடப்பாடிக்கு அதிர்ச்சியைக் கொடுத்த அதிகாரிகள்! 

Published on 16/05/2020 | Edited on 16/05/2020

 

eps


மோடியின் ஆலோசனைப்படி இருபது லட்சம் கோடிக்கான நிதி தொகுப்பை அறிவித்திருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த நிதி தொகுப்பு குறித்து ஆதரவும் எதிர்ப்பும் இருந்து வருகிறது. பொருளாதார வல்லுநர்கள் மத்தியில் கடுமையாக விமர்சிக்கப்படும் நிலையில், தமிழக நிதித்துறை அதிகாரிகளுடன் விவாதித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. 
                        


அந்த ஆலோசனையில், நடப்பு நிதியாண்டுக்கான மத்திய அரசின் மொத்த பட்ஜெட்டே 30.42 லட்சம் கோடிதான். மொத்த பட்ஜெட்டே 30 லட்சம் கோடி என்கிற போது இதில் 20 லட்சம் கோடிக்கான நிதி தொகுப்புக்கு எங்கிருந்து பணம் வரும்? மேலும், மத்திய அரசுக்கான வருவாய் இனங்களிலிருந்து மொத்த பட்ஜெட்டுக்கான  தொகையை முழுமையாகப் பெற முடியாத நிலையில் சுமார் 8 லட்சம் கோடி கடன் பெற வேண்டியதிருக்கிறது. அப்படியிருக்க, தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் 20 லட்சம் கோடிக்கான நிதி தொகுப்பில் பல ஏமாற்றங்கள் உண்டு. 
                        

தவிர, மாநில அரசுகள் வைக்கும் நிதி கோரிக்கைகளைத் தட்டிக் கழிக்கும் மத்திய அரசு, அவர்களுடைய நிதி நெருக்கடியைக் காரணம் காட்டுகிறது. அப்படியிருக்க, இந்த 20 லட்சம் கோடிக்கு எங்கே போவார்கள்? ஏழைகளுக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கும் எந்த நன்மையும் இல்லை. இவர்கள் அறிவித்துள்ள தொகையில் கனிசமான நிதியை, குறிப்பாக நாம் வைத்துள்ள நிதி கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றியிருந்தால் நாமே சமாளித்துக் கொள்ள முடியும். நிதி சார்ந்த விசயத்தில் மத்திய அரசு எடுக்கும் முடிவுகள் மாநில அரசுகளை வஞ்சிப்பதாக இருக்கிறது  எனச் சொல்லியிருக்கிறார்கள். 
                             


நிதித்துறை அதிகாரிகள் சொன்னதைத் தலைமைச் செயலாளரும் முன்னாள் நிதித்துறை செயலாளருமான சண்முகத்திடமும் தனிப்பட்ட முறையில் விவாதித்துத் தெளிவு பெற்றுக் கொண்டாராம் எடப்பாடி. தலைமைச் செயலாளர் சண்முகம் விவரிக்க விவரிக்க, மத்திய அரசு அறிவித்துள்ள தற்போதைய அறிவிப்புகள் முதல்வரை அதிர்ச்சியடைய வைத்ததாகத் தெரிவிக்கிறார்கள் கோட்டை அதிகாரிகள்.


 

சார்ந்த செய்திகள்