Skip to main content

சட்டம் ஒழுங்கு கெட்டுப்போக, அரசு சாராயக் கடைகளைத் திறந்துவிட்டுள்ளது -பியூஷ் மனுஷ் பேச்சு!

Published on 22/05/2020 | Edited on 22/05/2020


உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 50 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோயத் தாக்கியுள்ளது. 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 3,000- க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 1,00,000- க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இந்நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சமூக செயற்பாட்டாளர் பியூஷ் மனுஷிடம் கேள்வியை முன்வைத்தோம். அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 
 


ஊரடங்கு காரணமாக கடந்த 50 நாட்களுக்கு மேலாக மதுக்கடைகள் திறக்க படாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டது. இரண்டு நாட்கள் திறக்கப்பட்டிருந்த மதுக்கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை எனக்கூறி உயர்நீதிமன்றம் மூடியது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றம் சென்றது. அங்கு மதுக்கடைகளைத் திறப்பதற்குத் தமிழக அரசு அனுமதி பெற்றது. மதுக்கடைகள் திறப்பிற்குக் கண்டனம் எழுந்த நிலையில் மாநில அரசு எதைப்பற்றியும் கவலைப்படாமல் தொடர்ந்து மதுக்கடைகடைகளைத் திறந்து வைத்துள்ளது. இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

7ஆம் தேதி கடை திறப்பதற்கு முன்பு உயர்நீதிமன்றம் 6ஆம் தேதி முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தது. அந்த உத்தரவில், மதுவாங்குபவர்களின் ஆதார் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும், பில் கொடுக்க வேண்டும், ஒரு ஆளுக்கு 750 மி.லி. மது கொடுக்கலாம், அதுவும் மூன்று நாட்களுக்கு ஒரு முறை வழங்கலாம் என்று வழிமுறைகளை வழங்கி இருந்தது. ஆனால் அடுத்த நாளே டாஸ்மாக் நிர்வாகம் ஒரு மனுவைத் தாக்கல் செய்தது. அதில் எங்களால் "பில் எல்லாம் கொடுக்க முடியாது, அதற்கான வசதிகள் எங்களிடம் இல்லை" என்று கூறியிருந்தது. ஆண்டுக்கு 50 ஆயிரம் கோடி வருமானம் பார்க்கும் டாஸ்மாக் நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் இத்தகைய பதிலைச் சொல்லியது. இதனால் அதிருப்தி அடைந்த உயர்நீதிமன்றம் அப்படி என்றால் டாஸ்மாக் கடைகளை மூடுங்கள் என்று உத்தரவிட்டது. 
 

 


கடந்த 50 நாட்களுக்கு மேலாக பொதுமக்கள் யாரும் வேலைக்குச் செல்லவில்லை. அப்படி இருக்கையில் யாரிடமும் பணம் இருக்க வாய்ப்பில்லை. அப்படி இருந்தும் அவர்கள் டாஸ்மாக் கடைகளுக்கு வருகிறார்கள் என்றால்  அது யாருடைய பணம். மனைவி மக்களின் நகைகளை அடமானம் வைத்து அதன் மூலம் கிடைத்த பணமாக இருக்கும், இல்லை என்றால் வீட்டில் சேமித்து வைத்த பணத்தைத் திருடி எடுத்துக்கொண்டு வந்திருக்க வேண்டும். இதைத் தவிர வேலைக்குச் செல்லாதவர்களின் கையில் பணம் வர வாய்ப்பில்லை. இது எவ்வளவு கொடூரமான நிலைமை. இந்தச் சாராயக்கடைகள் எப்போது திறந்தார்களோ அடுத்த நாளில் இருந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு கொலைகள் விழுந்துள்ளது. ஒரு இடத்தில் தன்னுடைய மனைவியைக் கொன்றிருக்கிறான். மற்றொரு இடத்தில் சொந்த தங்கச்சியையே கொன்றிருக்கிறான். குழந்தைகளைக் கட்டி கொளுத்தியிருக்கிறார்கள். இது அனைத்தும் வெளியில் தெரிந்து நடைபெற்றுள்ள சம்பவங்கள். இன்னும் வெளியில் தெரியாமல் நடைபெற்ற சம்பவங்கள் ஏராளமான இருக்கும். சட்ட ஒழுங்கு கெட்டுப் போகச் சாராயக் கடைகளை அரசு திறந்துவிட்டுள்ளது, என்றார்.