Skip to main content

இந்த ரணகளத்திலும் பத்திரப்பதிவு அலுவலகத்தை திறக்கும் தமிழக அரசு! அலறும் ஊழியர்கள்! 

Published on 25/03/2020 | Edited on 26/03/2020

 

உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கரோனோ வைரஸ் சிக்கலில் இந்தியாவில் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமுலுக்கு கொண்டு வந்தார் பிரதமர். பிரதமரின் அறிவிப்புக்கு பிறகு பொது வெளியில் வரும் பொதுமக்களை காவல்துறையினர் அன்போடு வீட்டுக்குபோங்க என்று கேட்டுக்கொண்டனர். சில இடங்களில் கட்டாயப்படுத்தி அடித்தும் விரட்டியும் துரத்த ஆரம்பித்தனர். 
 

இந்தியாவில் மிகவும் அவசிய அத்தியாவசிமான அலுவலகங்களை தவிர மற்ற அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் எல்லாமே விடுமுறை விடப்பட்டு இருந்தது.

 

Office - Staff



மளிகைகடைகளுக்கும், பால் மற்றும் உணவகத்திற்கு மட்டும் சென்று வர அனுமதியளித்து இருந்தது. ஆனால் இந்த இடங்களுக்கே பொதுமக்கள் சென்று வருவதற்கு கடுமையான கண்காணிப்பும், கண்டிப்பும் செய்து அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். 
 

இந்த நிலையில் தமிழக அரசின் சார்பில் ஊரடங்கு உத்தரவு அமுலுக்கு வந்து ஒரு நாள் கடந்து விட்ட நிலையில் இன்று பத்திரபதிவுத்துறை அலுவலகத்தை மட்டும் நாளை முழுவதும் திறந்து வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. குறிப்பிட்ட அலுவலர்கள் கட்டாயம் அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இந்த அறிக்கை அந்த அலுவலர்களிடையே பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

office-staff



 

தனித்து இருங்கள், பாதுகாப்பாய் இருங்கள் என்று பிரதமர் முதல் முதல்வர் வரை அறிவிப்பு வெளியிட்டு வந்த நிலையில் திடீர் என பத்திரப்பதிவுதுறை அலுவலகம் திறப்பு என்பது பெரிய சந்தேகத்தை ஏற்பட்டுள்ளது. 
 

இது குறித்து பத்திரப்பதிவு துறை ஊழியர்கள் சிலரிடம் பேசியபோது, எந்த அடிப்படையில் எங்களை வேலைக்கு அழைக்கிறார்கள் என்று தெரியவில்லை, உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று வீட்டோடு இருங்கள் என்று சொல்லிக்கொண்டிருக்கும் நிலையில் எங்களை பணிக்கு அழைத்திருப்பது எங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்பதை நாங்கள் உணர்கிறோம். 
 

பத்திரப்பதிவு அலுவலகம் திறந்து இருக்கிறது என்றால் தற்போது ஆன்லைன் மூலம் பதிவு செய்கிறோம். டோக்கன் முறையில் பதிவு செய்யப்படும் 1 நாளைக்கு 100 டோக்கன் கொடுப்போம். 1 மணி நேரத்திற்கு 20 டோக்கன் பதிவு செய்யப்படும். 5 மணி நேரத்திற்கு 100 டோக்கன் பதிவு செய்யப்படும். 
 

1 டோக்கன் பதிவு செய்வதற்கு 4 முதல் 10 பேர் வருவார்கள். இப்படி பார்த்தால் 400 முதல் 1000 பேர் வருவார்கள். 
 

office-staff


 

ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையில் 20 டோக்கன்கள் பதிவு செய்தாலே 80 முதல் 200 பேர் வரை வருவார்கள். இவர்கள் அனைவருக்கும் கைரேகை பதிவு செய்ய வேண்டியிருக்கும் இதில் வெளிநாட்டு வாழ் தமிழர்களும் கண்டிப்பாக வருவார்கள். ஒவ்வொரு சார் பதிவாளர்களுக்கும் ஒவ்வொரு பத்திரத்தையும் நேரடியாக ஆய்வு செய்ய வேண்டியிருக்கும். இப்போது உள்ள கரோனா வைரஸ் பிரச்சனையில் இது எல்லாம் சாத்தியம் இல்லை. 
 

ஆனால் இதை எல்லாம் தெரிந்திருந்தும் கட்டாயப்படுத்தி எங்களை அலுவலகத்தி்ற்கு வர சொல்வது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை மாற்றி அமைக்க வேண்டும் என்று ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும், சுகாதாரதுறை அமைச்சர், தலைமைசெயலாளர், முதல்வர் உள்ளிட்ட அனைவருக்கும் கடிதம் அனுப்பி உள்ளோம் என்றனர்.
 

இது குறித்து பத்திரப்பதிவுத்துறையைச் சேர்ந்த மேலும் சிலர், இந்த ரணகளத்திலும் மக்களின் அத்தியாவசிய தேவை என்று வருமானம் பார்க்க நினைக்கிறார்கள் என்றனர்.
 

உயிரை காக்க வேண்டிய இந்த முக்கியமான நேரம் என்று பிரதமர் நாட்டு மக்களிடம் உருக்கமாக பேசியிருக்கிறார். இந்த ரணகளத்திலும் பத்திப்பதிவு அலுவலகத்தை திறக்க வேண்டிய அவசியம் என்ன என்பதே தற்போது மக்கள் மனதில் உள்ள கேள்வி. விடை சொல்லுவாரா தமிழக முதல்வர்.