Skip to main content

பாமகவுக்கு அந்த இடத்தை ஒதுக்காதீங்க... தேமுதிக, தமாகாவுக்கு... அதிமுக சீனியர்கள் மேலிடத்தில் வலியுறுத்தல்

Published on 11/11/2019 | Edited on 11/11/2019

 

உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக இடங்களை தாரைவார்க்காதீர்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தி வருகின்றனர் அதிமுக சீனியர்கள்.
 

அவர்கள் மேலும், இப்ப நாம ஆளும் கட்சியாக இருக்கிறோம். இப்போதைக்கு பிரச்சனையில்லை. இரண்டு முறை தொடர்ந்து நாம் ஆட்சியில் இருந்துவிட்டதால் 2021 நமக்கு எப்படி ரிசல்ட் வருமுன்னு தெரியாது. அதோட இப்ப இருக்கிற எம்எல்ஏக்களுக்கு சீட் கொடுத்து ஜெயிக்க வச்சது ஜெயலலிதா. அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கு சீட் கொடுப்பதில் பல்வேறு குழப்பங்கள் வர வாய்ப்பு இருக்கு. அதற்கு முன்பு நடக்கும் இந்த உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாண்மையான இடங்களில் நாம் போட்டியிட்டால், பல பேர் எம்எல்ஏ சீட் கேட்பதில் இருந்து விலகலாம். 

 

admk


 

கட்சிக்கு மரியாதை சமூகத்தில் கிடைக்கணும் என்றால் நம்ம கட்சியைச் சேர்ந்தவர்கள் பதவிகளில் இருக்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் தேனியைத் தவிர முழுக்க முழுக்க தோல்வி. ராஜ்யசபாவிலும் சொல்லிக்கொள்வதைப்போல இல்ல. அதனால்தான் சொல்கிறோம் உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிட்டு பதவிகளை பிடிக்க வேண்டும். 
 

எக்காரணத்தைக் கொண்டும் சேலம், சென்னை மேயர் பதவிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக்கொடுக்காதீர்கள். சேலத்தில் உங்கள் சொந்த மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்ததால், மேயர் பதவியையாவது பிடித்தாகணும். நாளைக்கு உங்களுக்கு அங்கு லோக்கல் செல்வாக்கு அதிமுக இருந்தால்தான் கிடைக்கும். 


 

பாமகவுக்கு சேலத்தை கொடுத்தீர்கள் என்றால், இன்றைக்கு அது கூட்டணியில் இருக்கிறது. நாளை கூட்டணியை விட்டு வெளியேறி நமக்கு எதிராக பேசினால் என்ன செய்வது. இப்பவே சில விசயங்களில் அவர்கள் ஒத்துவரவில்லை. எட்டுவழிச்சாலையில் அதிமுகவின் நிலைபாடு என்ன? பாமகவின் நிலைபாடு என்ன? சேலத்தை பாமகவுக்கு கொடுத்தால் நாமே நமது தலையில் மண்ணை அள்ளி போட்ட மாதிரி இருக்கும். ஆகையால் சேலம் மேயர் பதவியில் அதிமுகதான் போட்டியிட வேண்டும். அதேபோல் தமிழ்நாடு முழுவதும் எந்த மேயர் பதவியை பிடிக்கிறோமோ இல்லையோ, சென்னை மேயர் பதவியை பிடித்தே ஆக வேண்டும். அதுதான் கட்சிக்கு மரியாதை. ஆகையால் சென்னை மேயர் பதவியிலும் அதிமுகதான் போட்டியிட வேண்டும். 


 

கூட்டணிக் கட்சிகளைப் பொறுத்தவரை நம்மை இல்லாமல் டெல்லியை அணுக முடியாது என்ற கட்சிக்கு சீட் கொடுங்க. நம்மை இல்லாமலேயே பாமக, தேமுதிக டெல்லியை சந்திக்கிறது. மத்திய அமைச்சர் பதவி, இணையமைச்சர் பதவி என முயற்சி பண்ணுகிறார்கள். கடந்த வாரம் ஜி.கே.வாசனும் பிரதமரை சந்திக்கிறார். அதிமுகவைவிட அந்தக் கட்சிகளுக்கு செல்வாக்கு அதிகம் இருக்கிறதா என்ன? 
 

ஒவ்வொரு தேர்தல் முடியும்போது, கூட்டணியோடு வைத்திருந்த கணக்கு அதோடு முடிந்துபோகணும். அடுத்தத் தேர்தலுக்கு கணக்கு புதிதாகத்தான் போடணும். ஆகையால மேயர் பதவி உள்ளிட்ட கட்சி சார்பில் போட்டியிடக் கூடிய எந்த பதவியையும் கூட்டணிக்கு ஒதுக்காதீங்க. நம்ம கட்சிலேயே ராஜ்யசபா சீட் கிடைக்காதவங்க, நிறைய பேர் கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருக்காங்க. அவர்களை கவனியுங்கள் இல்லையென்றால் இவரை நிறுத்தினால் இந்த இடத்தில் வெற்றி என்கிற வேட்பாளரை நிறுத்துங்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமியிடம் சொல்லி வருகிறார்களாம்.