ஒரு பலாப் பழம் 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு மற்றும் சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் பலாப் பழம் உற்பத்தி அதிகமாக உள்ளது. பலா மரம் இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லலாம். பலர் தோப்புகளாகவும், வரப்பு ஓரங்களில் பலா மரங்கள் வைத்து வளர்த்து வருகின்றனர். கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு பகுதி பலாப் பழங்கள் கோயம்பேடு முதல் மும்பை வரை பிரபலமானது.
எட்டுக்குடி முருகன் கோயில் சித்ரா பவுர்ணமி திருவிழாவில் கீரமங்கலம் பகுதி பலாப்பழங்கள் சுமார் 100 டன் விற்பனை ஆகியுள்ளது. உற்பத்தியாகும் பலா பழங்களை கீரமங்கலம், அணவயல் புளிச்சங்காடு கைகாட்டி, பேப்பர் மில் ரோடு, பனங்குளம் ஆகிய பல ஊர்களில் ஏலக்கடைகளில் விற்பனை செய்து வருகின்றனர். அதேபோல இன்று செவ்வாய்க் கிழமை கீரமங்கலத்தில் உள்ள ஒரு ஏலக்கடைக்கு விவசாயி குமார் கொண்டு வந்த பலாப்பழம் சுமார் 40 கிலோ எடை இருந்தது. அந்தப் பழத்தை ஏலம் எடுக்க பல வியாபாரிகளும் போட்டி போட்ட நிலையில் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஒரு வியாபாரி ரூ.2 ஆயிரத்துக்கு ஏலத்தில் எடுத்தார். இது இந்த ஆண்டு அதிக விலைக்கு விற்ற பலாப்பழம் என்கின்றனர்.