Skip to main content

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு இல்லை! சீராய்வு மனுக்கள் தள்ளுபடி!

Published on 14/11/2019 | Edited on 14/11/2019
ர்


ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெறவில்லை என்றும், அந்த ஒப்பந்தம் செல்லும் என்றும், ஒப்பந்தத்திற்கு  தடை விதிக்கக்கோரிய மறு சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்தும் உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.  

 

கடந்த 2016ம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை 58 ஆயிரம் கோடிக்கு கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது.  இந்த ஒப்பந்தத்தில் பிரதமர் மோடியின் தலையீடு இருந்தது என்றும், முறைகேடு நடந்துள்ளது என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்தரபினரால் குற்றம்சாட்டப்பட்டது.  ஆகவே, இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற குரல் எழுந்தது.

 

இதையடுத்து, ரபேல் போர் விமான கொள்முதல் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.   இந்த வழக்கில் விசாரணையை அடுத்து கடந்த 2018ம் ஆண்டில் டிசம்பர் மாதம் 14ம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பில்,  ‘ரபேல் போர் விமானம் வாங்கப்பட்ட தொகை, ஒப்பந்த நடைமுறை அனைத்தையும் ஆராய்ந்து பார்த்ததில் அவை அனைத்தும் சரியான ஒன்றாகத்தான் இருக்கிறது. ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை.  அதனால், இந்த விவகாரத்தில் போர் விமான ஒப்பந்தத்திற்கு தடை விதிக்க முடியாது’என்று கூறப்பட்டது.  இந்த தீர்ப்பினை எதிர்த்து, ‘மத்திய அரசு ரபேல் போர் விமான விவகாரத்தில் முற்றிலும் தவறான தகவலை அளித்துள்ளது. ஆகவே, இந்த வழக்கை மறு சீராய்வு செய்ய வேண்டும்’’என்று கோரி, கடந்த பிப்ரவரி மாதத்தில் பிரசாந்த் பூஷன், யஷ்வந்த் சின்கா ஆகியோர் மனுதாக்கல் செய்தனர்.  

 

இந்த மனு மீதான விசாரணையை அடுத்து இன்று தீர்ப்பு கூறப்பட்டது.  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான மூன்று பேர் கொண்ட அமர்வு இந்த தீர்ப்பை வாசித்தனர்.  அத்தீர்ப்பில், மறு சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

 

Next Story

“கையில் இருக்கும் அழுக்கு வாட்சில் சேர்ந்திருக்கிறது” - நம்பர் மாறியதன் பின்னணி

Published on 16/04/2023 | Edited on 16/04/2023


 

Will Tamil Nadu be a battlefield for the next 8 months? annamalai pressmeet

 

அடுத்த 8 மாதம் இன்னும் ரணகளமாக இருக்கும். கேள்விகள் கேட்டுக்கொண்டே தான் இருப்போம் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

 

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திமுகவின் அடுத்த பாகத்தை வெளியிட்ட பின்,  மத்தியில் மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்த பின் தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்த திட்டங்களில் ஏதேனும் தவறுகள் நடந்துள்ளதா என்பது குறித்தான பைல்கள் வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதில் யார் இருந்தாலும் கவலைப்படப் போவதில்லை. இது யாருக்கும் எதிரானது இல்லை. தமிழ்நாட்டில் இதுபோன்ற அரசியலை செய்துகாட்ட முடியும் என்ற முயற்சியைத்தான் நாங்கள் எடுக்கிறோம். ஊழல் என்று வந்த பின் நண்பர்கள், எதிரிகள் என பார்க்கவில்லை. நாங்கள் இங்கு யாரையும் பங்காளிகள் என சொல்லவில்லை. எங்களுக்கு எல்லோரும் எதிரிகள் தான்.

 

ரஃபேல் வாட்சில் சீரியல் நம்பர் மாறியிருப்பதாக சொல்கிறார்கள். என் கையில் இருக்கும் வாட்ச் ஜிம்சனில் கொடுத்து கேட்டுப்பாருங்கள்.  வாட்சில் உள்ள நம்பர் தான் சரியான நம்பர், கையில் இருக்கும் அழுக்கு வாட்சில் சேர்ந்திருக்கிறது. இதில் 147 தான் இருக்கிறது. மேடையில் படிக்கும் போது அழுக்கு இருக்கிறதால் தெரியவில்லை. இப்பொழுது நீங்கள் படிக்கும் போதே ஒரு நிமிடம் கஷ்டப்பட்டீர்கள் தானே. 147 தான். பில்லில் போட்டிருப்பது தான் வாட்ச் நம்பர்.

 

டீசல் கட்சி கொடுக்கிறது, வீட்டு வாடகை நண்பர்கள் கொடுக்கிறார்கள், 3 பிஏ விற்கு 3 கம்பெனிகளில் இருந்து சம்பளம் போடுகிறார்கள். என்னால் அதையெல்லாம் செய்ய முடியாது. மாநிலத் தலைவராக இருக்கும் வரை சிலரின் உதவியை வைத்து தான் நான் செய்கிறேன். நான் கொள்ளை அடித்து சொத்து சேர்த்திருந்தால் அந்த பணத்தில் கொடுப்பேன். கொள்ளை அடித்து சொத்து சேர்க்கவில்லையே.

 

தமிழகத்தின் வளர்ச்சி பற்றியெல்லாம் பேச வேண்டாம். ஊழலைப் பற்றி பேசுவோம். 2024 பாராளுமன்றத் தேர்தல் என்பது ஊழலை மையமாக வைத்து நடக்க வேண்டும். 49 ஆயிரம் பேர் எதற்கு அந்த நடைபயணத்திற்கு பதிவு செய்ய வேண்டும். இதில் இருந்து பின் வாங்கப்போவது கிடையாது. அடுத்த 8 மாதம் இன்னும் ரணகளமாக இருக்கும். கேள்விகள் கேட்டுக்கொண்டே தான் இருப்போம்” எனக் கூறினார்.

 

 

 

Next Story

ஹெலிகாப்டர் விபத்து விசாரணை - உறுதியளித்த விமானப்படை தளபதி!

Published on 18/12/2021 | Edited on 18/12/2021

 

IAF CHIEF

 

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் கடந்த 08/12/2021 அன்று பிற்பகல் நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பிபின் ராவத்தோடு பயணித்த அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 11 இராணுவ அதிகாரிகளும் உயிரிழந்தனர். இந்த விபத்தில் சிக்கிய கேப்டன் வருண் சிங் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டார். அவருக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 15ஆம் தேதி உயிரிழந்தார். இதற்கிடையே இந்த விபத்து குறித்து முப்படை விசாரணை நடைபெற்றுவருகிறது.

 

இந்நிலையில், விமானப்படை தளபதி வி.ஆர். சவுத்திரி, விசாரணை நியாயமான முறையில் நடைபெறும் என தெரிவித்துள்ளார். இன்று (18.12.2021) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ரஃபேல் ஒப்பந்தம், அண்டை நாடுகளின் அச்சுறுத்தல் ஆகியவற்றைப் பற்றியும் பேசியுள்ளார். செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியுள்ளதாவது, "விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்ட எதையும் முன் கூட்டியே வெளியிட நான் விரும்பவில்லை. ஏனெனில் இந்த விசராணை ஒரு முழுமையான செயல்முறையாகும். எங்கே தவறு நடந்திருக்கும் என்று ஒவ்வொரு கோணத்தையும், ஒவ்வொரு அம்சத்தையும் ஆராய்ந்து, தகுந்த பரிந்துரைகளைச் செய்வதும், கண்டுபிடிப்புகளை மேற்கொள்வதும் முக்கியம். இந்த முழு விசாரணையும் மிகவும் நியாயமான செயல்முறையாக இருக்கும் என நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். விவிஐபி-க்கள் பறப்பதற்கான நெறிமுறைகள் ஆய்வு செய்யப்பட்டு திருத்தப்படும். விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில், நடைமுறைகள் ஆய்வு செய்யப்படும்.

 

பாகிஸ்தான் மற்றும் சீனாவின் அச்சுறுத்தல்களை நாங்கள் தொடர்ந்து ஆராய்ந்துவருகிறோம். அவர்களின் அச்சுறுத்தல்களை நாங்கள் நன்கு அறிவோம். சீனாவுடனான எல்லை பிரச்சனை தொடர்ந்துகொண்டிருக்கிறது. லடாக்கில் சில பகுதிகளில் படைவிலகல் நடைபெற்றுள்ளது. ஆனால் முழுமையான படை விலகல் நடைபெறவில்லை. விமானப்படை தொடர்ந்து அங்கு நிலைநிறுத்தப்படும். அந்தப் பகுதியில் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கிறோம்.

 

ரஃபேலைப் பொறுத்தவரையில், சரியான நேரத்தில் டெலிவரி செய்ததற்காக அவர்களுக்கு (பிரான்ஸ்) நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். 36 விமானங்களுக்கான ஒப்பந்தம் செய்யப்பட்டதும், அவற்றில் 32 வழங்கப்பட்டுள்ளதும் உங்களுக்குத் தெரியும். மீதமுள்ள நான்கில் மூன்று விமானங்கள் பிப்ரவரியில் டெலிவரி செய்யப்படும். இந்தியா கேட்ட மேம்பாடுகளைக் கொண்ட கடைசி ரஃபேல் விமானம், அதற்கான சோதனைகள் அனைத்தும் செய்து முடிக்கப்பட்ட பிறகு வழங்கப்படும். ரஃபேல் போர் விமானத்தின் எதிர்கால பராமரிப்பு பிரச்சனைகள் மற்றும் இந்தியாவில் டி-லெவல் பராமரிப்பு அமைப்பது குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சருடன் நாங்கள் விவாதித்துள்ளோம்.” இவ்வாறு வி.ஆர். சவுத்திரி தெரிவித்துள்ளார்.