Skip to main content

அண்ணா பல்கலை. கொடூரம்; உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Published on 27/12/2024 | Edited on 27/12/2024
Anna University issue High Court barrage of questions

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய சூழலில் தான் பெண் வழக்கறிஞர் வரலட்சுமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்திற்குக் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், ‘இந்த விவகாரத்தில் காவல்துறை விசாரணையில் குறைபாடு இருப்பதாகத் தெரிகிறது. இந்த வழக்கில் ஞானசேகரன்  கைது செய்யப்பட்ட போதிலும், பின்னணியில் யாரோ ஒருவர் ‘சார்’ இருக்கிறார் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. அவர் யார் என்ற விவரம் இதுவரையிலும் தெரியவில்லை. எனவே, இந்த வழக்கைப் பொறுத்தவரை காவல்துறை விசாரித்தால் சரியாக இருக்காது. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்’ என்று கோரிக்கை வைத்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கைத் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. அதன்படி உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன் மற்றும் லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (27.12.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரில் உள்ளவர் தான் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பெயர் மட்டும் தான் உள்ளது” எனத் தெரிவித்தனர். நீதிபதிகள், ‘விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் ஒருவரைக் குற்றவாளி என்று காவல் ஆணையர் எப்படி முடிவுக்கு வந்தார்?. கைது செய்யப்பட்டவர் காலில் பேண்டேஜி ஏன் போடப்பட்டுள்ளது?” எனச் சரமாரியாகக் கேள்வி எழுப்பினர். அதற்கு காவல்துறை, “கைது செய்யப்பட்ட நபர் தப்பிக்க முயன்ற போது தவறி விழுந்தார்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “முதல் தகவல் அறிக்கை வெளியானது குறித்தும் அதற்கு யார் பொறுப்பு என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்படுகிறது. மாணவியின் பாதுகாப்பு அண்ணா பல்கலைக்கழகம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?.  நிர்பயா நிதி செலவு செய்யப்பட்ட விபரங்கள் குறித்த அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள விசாகா குழுவில் எத்தனை புகார்கள் வந்துள்ளது என்பது குறித்தும் அறிக்கை அளிக்க உத்தரவிடப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் தைரியமாகப் புகார் அளிக்க முன் வந்ததற்குப் பாராட்டுக்கள்.

குற்றவாளி 10 ஆண்டுகளாக அண்ணா பல்கலைக்கழகம் உலாவி வந்துள்ளார். அதைப்பற்றி விசாரித்துள்ளார்களா?. பெண்கள் ஆண்களுடன் பேசக்கூடாது. மாணவி அங்குச் சென்று இருக்கக் கூடாது என்றெல்லாம் பேசக்கூடாது. பெண்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது. காதல் என்பது பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரம்” எனத் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணையை நீதிபதிகள் நாளை (28.12.2024) காலை ஒத்தி வைத்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்