பாலிவுட்டில் பல்வேறு படங்களில் நடித்து வருபவர் சோனு சூட். தமிழில் மஜ்னு, சந்திரமுகி, ஒஸ்தி உள்ளிட்ட சில படங்களில் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகராக மட்டும் அல்லாது தனது அறக்கட்டளையின் மூலம் தொடர்ச்சியாக பல்வேறு உதவிகளையும் நற்பணிகளையும் செய்து வருகிறார். கொரோனா காலகட்டத்தில் பல்வேறு புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக வாகன வசதி ஏற்படுத்தித் தந்தார். இதன் மூலம் பலரது கவனம் ஈர்த்து பாராட்டுகளையும் பெற்றார். மேலும் அவர் அரசியலில் ஈடுப்படவுள்ளதாக அப்போது பேச்சுகள் எழுந்தது.
இந்த நிலையில் தனக்கு முதல்வர் வாய்பு வந்ததாக கூறியுள்ளார். ஒரு ஆங்கில ஊடகத்திற்கு அவர் பேட்டி அளித்திருந்த நிலையில் அவரிடம் அரசியல் வருகை குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “எனக்கு முதல்வர் பதவி கொடுக்கப்பட்டது. நான் மறுத்ததால், துணை முதல்வராக வேண்டும் என்றார்கள். நாட்டிலேயே மிகப் பெரிய ஆட்கள் அவர்கள். பின்பு ராஜ்யசபா சீட் தருவதாகவும் சொன்னார்கள். அதோடு அரசியலில் எதற்கும் போராட வேண்டிய அவசியம் இல்லையென்று எடுத்துச் சொன்னார்கள். இதுபோன்ற சக்திவாய்ந்த நபர்கள், நம்மைச் சந்தித்து உலகில் மாற்றத்தை ஏற்படுத்த நம்மை ஊக்குவிக்க விரும்புவது ஒரு உற்சாகமான கட்டம்.
அரசியலில் நுழைந்தால் மக்களுக்கு உதவி செய்யும் சுதந்திரம் பறி போகும். இப்போது உதவி செய்வது போல் அரசியலில் இருந்தால் செய்ய முடியாது. மக்கள் இரண்டு காரணங்களுக்காக அரசியலில் நுழைகிறார்கள். ஒன்று பணம் சம்பாதிப்பதற்காகவும், இன்னொன்று அதிகாரத்திற்காகவும். அவற்றில் எதிலும் எனக்கு மோகம் இல்லை. மக்களுக்கு உதவுவது என்றால், நான் அதை ஏற்கனவே செய்து வருகிறேன். அதனால் அரசியலை விட்டு விலகி இருக்கவே விரும்புகிறேன்” என்றார்.