Skip to main content

கடைக்காரர் அவரிடம் ரூ 10 கொடுங்கள் என்று வாங்கி... -நெகிழியை புறக்கணிக்கும் பொதுமக்கள்

Published on 02/01/2019 | Edited on 02/01/2019
plastic ban

 

தமிழக அரசு ஜனவரி முதல் நெகிழிகளுக்கு தடைவிதித்து சட்டம் இயற்றியுள்ளது. இதனை சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பெரும்பாலான பொதுமக்களும் வரவேற்றுள்ளனர். பொதுமக்கள் காய்கறி உள்ளிட்ட பொருட்கள் வாங்க பை எடுத்து வருகிறார்களா? என்பதை அறிய ஜன 1-ந்தேதி சிதம்பரம் காய்கறி மார்கெட்டிற்கு காலையிலேயே சென்றோம். அப்போது மார்கெட்டுக்கு வருபவர்கள் கையில் ஒரு துணி பை எடுத்து வந்து காய்கறி உள்ளிட்ட பொருட்களை வாங்கியதை பார்க்க முடிந்தது. 
 

அப்போது காய்கறி கடையில் ஒருவர் உருளை கிழங்கு, தக்காளி வேண்டும் என்ன விலை என்று கடைக்காரரிடம் கேட்டார், அப்போது கடைக்காரர் பை இருக்கா என்று கேட்டபோது எப்போதும் போல வந்துட்டேன், நாளையிலிருந்து  எடுத்து வருகிறேன் என்றார் அவர். உடனே கடைக்காரர் அவரிடம் ரூ 10 கொடுங்கள் என்று வாங்கி கொஞ்சம் பக்கத்திலுள்ள கடைக்கு ஒரு நபரை அனுப்பி துணிப்பையை வாங்கி வரச்சொல்லி அதில் அவர் கேட்ட காய்கறிகளை கொடுத்தார். கடைக்காரரோ நாளை, நாளை என்றால் அது போய் கொண்டுதான் இருக்கும். இன்று பணம் கொடுத்து பையை வாங்கி விட்டீர்கள் என்றால் கடைக்கு என்றதும், பையை எடுத்துப்போக வேண்டும் என்ற நினைப்பு வந்துவிடும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
 

அதேபோல் மார்கெட்டுக்கு பை எடுத்து வந்து காய்கறி உள்ளிட்ட பொருட்கள் வாங்குபவர்களோ நெகிழியை ஒழிக்க அரசு சட்டம் போட்டதிலிருந்து பை எடுத்து வர ஆரம்பித்து விட்டேன் சில நேரங்களில் பை இல்லாதபோது நெகிழியிலும் வாங்கி சென்றுள்ளேன். ஜனவரி முதல் ஒரு துணிபையை எடுத்து எனது இருசக்கர வாகனத்தில் வைத்துவிட்டேன் என்றார்.
 

மார்கெட்டிற்கு அடுத்த தெருவிலுள்ள ஓட்டலுக்கு பெண் ஒருவர் இட்லி வாங்க காலையிலே வந்தார். அவர் சாம்பார் வாங்க பாத்திரம் எடுத்து வாராததால் கடைக்காரர் சாம்பாரை நெகிழியில் கட்டிகொடுக்காமல் இட்லி கட்டிய பொட்டலத்தில் சட்னியை மட்டும் வைத்து கட்டிகொடுத்து இனி வரும்போது சாம்பார் வாங்க சரியான பாத்திரம் எடுத்து வரவேண்டும். தற்போது நான் சமாளித்து சாம்பாரை கட்டிகொடுத்துவிட்டால் உங்களுக்கு பாத்திரம் எடுத்துவரவேண்டும் என்ற எண்ணம் தோன்றாது என்று  அறிவுறுத்தி அனுப்பினார்.
 

நெகிழி குறித்து பொதுமக்களிடமும், வணிகர்களிடமும் அரசு இன்னும் கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.