Skip to main content

ஜெயக்குமார் தனசிங் வழக்கில் திருப்பம்; விசாரணை வளையத்தில் சிக்கிய நபர்

Published on 05/05/2024 | Edited on 05/05/2024
A twist in Jayakumar Thanasingh's case; A person caught in the interrogation ring

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் தனசிங் (வயது 60). இவர் காங்கிரஸ் கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவராக இருந்து வந்தார். தொழிலதிபரான ஜெயக்குமார் தனசிங் கடந்த 2 ஆம் தேதி (02.05.2024) வெளியே சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் எனப் பலரும் பல இடங்களிலும் தேடிப் பார்த்துள்ளனர். அப்போதும் ஜெயக்குமார் கிடைக்கவில்லை. இதையடுத்து அவருடைய மகன் கருணையா ஜப்ரின் (வயது 28) உவரி காவல்துறையில் இது தொடர்பாக கடந்த 3 ஆம் தேதி (03.05.2024) புகார் அளித்திருந்தார்.

இந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், காணாமல் போன ஜெயக்குமாரை தீவிரமாக தேடி வந்தனர். காங்கிரஸ் மாவட்டச் செயலாளர் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இத்தகைய சூழலில் ஜெயக்குமார் கரைச்சுத்து புதூரில் உள்ள வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் உடல் பாதி எரிந்த நிலையில் நேற்று (04.05.2024) சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த 3 தனிப்படைகள் அமைத்து திருநெல்வேலி எஸ்.பி. சிலம்பரசன் உத்தரவிட்டிருந்தார். அத்தோடு ஜெயக்குமார் தனசிங் உடல் மீட்கப்பட்ட இடத்தில் எஸ்.பி. சிலம்பரசன் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

ஜெயக்குமார் தனசிங் தனது மருமகனுக்கு கைப்பட கடந்த 27 ஆம் தேதி எழுதிய கடிதம் ஒன்றும் மற்றொரு கடிதம் என இரு கடிதங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மருமகனுக்கு எழுதிய அந்த கடிதத்தில் ‘அன்புள்ள மருமகனுக்கு’ எனக் குறிப்பிட்டு, “நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியனிடம் ரூ.5 லட்சம் கொடுத்துவிட்டு. அதற்கு ஈடாக கொடுக்கப்பட்ட காசோலையை திரும்பப் பெற வேண்டும். இடிந்தக்கரையை சேர்ந்தவருக்கு ரூ.10 லட்சம் திரும்ப கொடுக்க வேண்டும். தனது பிரச்சனையை மனதில் வைத்து கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களை யாரும் பழிவாங்க வேண்டாம். சட்டம் தன் கடமையைச் செய்யும்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் புதிய திருப்பமாக அவரது வீட்டில் வேலை செய்து வந்த கணேசன் என்ற வேலைக்காரரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகத்தின் அடிப்படையில் இந்த விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சம்பவ இடத்திற்கே கணேசனை அவரை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சார்ந்த செய்திகள்