Skip to main content

“எங்கள அரசு பேருந்து கண்டுக்கிறதே இல்ல..” - கண்ணீர் வடிக்கும் பெண்கள்

Published on 19/12/2022 | Edited on 19/12/2022

 

"Our government bus does not see.." -  women!

 

தி..மு.க. அரசு, மாநகராட்சிப் பகுதிகளில் பெண்களுக்கான இலவசப் பேருந்துகளை விட்டிருப்பதோடு, தமிழகம் முழுக்க ஓடும் டவுன் பஸ்களிலும் பெண்கள் இலவசமாகப் பயணிக்கலாம் என்று அறிவித்திருக்கிறது. இதேபோல் மாணவர்களுக்கும் இலவசமாகப் பயணம் செய்யும் சலுகை வழங்கப்பட்டிருக்கிறது. அப்படி இருக்க, இவர்கள் எல்லாம் அரசின் இந்தக் கட்டணமில்லாப் பயணச் சலுகையை முழுமையாக அனுபவிக்கிறார்களா? என்று விசாரித்தால், குமுறல்களே பதிலாக வெடிக்கின்றன. 

 

இதுகுறித்த பல்ஸ்ரேட்டை அறிய, ஒரு பானைச் சோற்றுப் பதமாக, திண்டுக்கல் மாவட்ட நத்தம் தொகுதியில் நாம் களமிறங்கினோம். இந்தத் தொகுதிக்கு உட்பட்ட நொச்சி ஓடைப்பட்டி, ரைஸ்மில், பதனிக்கடை, கூவனூத்து, விராலிப்பட்டி, கொசவபட்டி, சாணார்பட்டி, வீரசின்னம்பட்டி, மணியகாரன்பட்டி, எல்லைப்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி, கோபால்பட்டி, முலையூர், உலுப்பக்குடி உள்ளிட்ட கிராம மக்கள் பெரும் அதிருப்தியில் இருப்பதை அறியமுடிந்தது.

 

"Our government bus does not see.." -  women!

 

தவசிமடையைச் சேர்ந்த கூலி பெண் தொழிலாளர்களான சுசீலா, கவிதா, மல்லிகா, செல்வி, மேரி ஆகியோரிடம் இது குறித்துக் கேட்டபோது.. “கிராமப் பகுதிகளில் தோட்ட வேலைகள் இல்லாததால் எங்க ஊரிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், தினசரி டவுனுக்கு போய் கட்டிடம் கட்டும் இடங்களில், சித்தாள் வேலை பார்த்து வருகிறோம். எங்க ஊருக்கு காலை 6 மணிக்கு பஸ் வருவதால் அதில் போக முடியவில்லை. அதனால காலை 7 மணிக்கெல்லாம் கிளம்பி 2 கி.மீட்டர் தூரம் நடந்து போய் விராலிப்பட்டி பஸ் ஸ்டாப்பிற்குப் போனாலும், நத்தத்தில் இருந்து வரக்கூடிய ஃப்ரீ பஸ்கள் சரி வர நிற்பதில்லை. அப்படி நின்றாலும், நாங்கள் ஏறுவதற்குள்ளேயே பஸ்ஸை எடுத்து விடுகிறார்கள். அதனாலேயே கடந்த வாரம்கூட இரண்டு பெண்கள் கீழே விழுந்து விட்டனர். 

 

அதுலயும் சில நாட்களில் பஸ் ஸ்டாப்பைத் தாண்டி நிறுத்தி, மக்களை இறக்கி விட்டுவிட்டு உடனே எடுத்துட்டு போய்விடுகிறார்கள். சில சமயங்களில் ஆம்பளைகள் நின்னா பஸ் நிக்கிது. பொம்பளைக நின்னா பஸ் நிற்பதில்லை. அதனாலயே பெரும்பாலான நாட்கள் எங்களைப் போன்ற பெண்கள் எல்லாம் தனியார் பஸ்களில் போய் வருகிறார்கள். அதனால ஒரு நாளைக்கு ரூ.50 வரை பஸ்சிற்கு செலவாகிறது. முதல்வர் ஸ்டாலின், எங்களுக்காக இலவச பஸ் வசதி செய்து கொடுத்தும் கூட கண்டக்டர்களும், டிரைவர்களும் அவங்க சொந்த பஸ்சில் நாங்க ஃப்ரீயாக போய் வருவது போல் நினைத்துக் கொண்டு, பஸ்களை நிறுத்தாமல் போய்விடுகிறார்கள். அவர்கள் மேல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இனியாவது எங்க ஊருக்கு வரும் பஸ்ஸை எட்டு மணிக்கு மாற்றி அமைத்தால், வேலைக்குப் போகும் எங்களைப் போல பல ஏரியா பெண்களும், பள்ளி மாணவ-மாணவிகளும் பயனடை வார்கள்” என்றனர் ஆதங்கமாக.

 

"Our government bus does not see.." -  women!

 

இது சம்பந்தமாக கூவனூத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்களான சுரேஷ், குமார், கண்ணன் ஆகியோரிடம் கேட்டபோது... “பெண்களுக்கும் இலவசமாக டவுன் பஸ்களில் போய் வரலாம்னு சொன்னதில் இருந்தே, எங்களைப் போல் மாணவ, மாணவிகளையும் சரிவர இலவச பஸ்ஸில் ஏற்றுவது இல்லை. எங்க ஊர்க்காரங்க நிறைய பேர் டிரைவர், கண்டக்டர்களாக இருப்பதால் கூட்டமாய் இருந்தால்கூட எங்களை ஏற்றிக்கிட்டு போய்விடுகிறார்கள். அவர்கள் டூட்டிக்கு வரவில்லை என்றால் எங்கள் நிலை மோசமாகிவிடும். நாங்கள் சரியான நேரத்திற்கு பள்ளிக்கும் போக முடியாது” என்றார்கள் வருத்தமாய். 


இதுபோன்ற குற்றச்சாட்டுகள் குறித்து, அரசு போக்குவரத்துக் கழக திண்டுக்கல் மண்டலப் பொதுமேலாளர் டேனியல் சரவணனிடம் கேட்டபோது.. “நான் பொறுப்புக்கு வந்து இரண்டு மாதம்தான் ஆகுது. இந்த விசயமே நீங்கள் சொல்லித்தான் எனக்குத் தெரியவருது. அதனால உடனடியாக அப்பகுதிகளில் ஆய்வு செய்து, வழக்கம்போல் அனைத்து நிறுத்தங்களிலும் பஸ்களை நிறுத்தச் சொல்வதோடு, பெண்களையும், மாணவ-மாணவிகளையும் கண்டிப்பாக ஏற்றிச் செல்லும் அளவிற்கு நடவடிக்கை எடுப்பேன்” என்றார் உறுதியான குரலில்.


பேருந்து ஓட்டுநர்கள் மற்றும், நடத்துநர்களின் கனிவான கவனத்திற்கு, அரசுத் திட்டங்களுக்கு இனியேனும் பிரேக் பிடிக்காதீர்கள். ஏழை-எளிய மக்களுக்கு எதிரான திசையில் ஸ்டேரிங்கை வளைக்காதீர்கள்.

 

 

Next Story

பேருந்துகள் சேதம் குறித்து தொடர் புகார்கள்; போக்குவரத்துத் துறை கெடு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
transport department action on Frequent complaints about damage to buses

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து, பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பஸ்ஸின் நடத்துநர் இருக்கை நெட்டு போல்டு கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஓடும் பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு பலர் கண்டனம் தெரிவித்து புதிய பேருந்துகளை தமிழ்நாடு அரசு வாங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். 

அதுமட்டுமல்லாமல், பேருந்துகள் சேதம் குறித்து தொடர்ச்சியாக புகார்கள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தொடர் புகார்களை அடுத்து, போக்குவரத்துத் துறை அனைத்து பேருந்துகளுக்கும் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், ‘48 மணி நேரத்தில் அனைத்து பேருந்துகளையும் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய வேண்டும். அதன் ஆய்வு தொடர்பான அறிக்கையை போக்குவரத்து செயலாளரிடம் சமர்ப்பிக்க மேலாண் இயக்குநர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது’ எனத் தெரிவித்துள்ளது. 

Next Story

“பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Edappadi Palaniswami said Safe travel of passengers should be ensured

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்தப் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்தப் பேருந்தின் நடத்துநரின் இருக்கை கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்தப் பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நேற்று திருச்சி நகரப் பேருந்து சென்று கொண்டிருக்கையில் ஒரு வளைவில் நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வெளியே விழுந்த சம்பவம் தமிழக மக்களிடம், குறிப்பாக அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, ஒரு சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகரப் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் கீழே விழுந்து விபத்துக்குள்ளான நிகழ்வின்போதே இனியாவது அரசு பேருந்துகளை உரிய முறையில் பராமரிப்பு செய்து, அரசு பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்த நான் இந்த தி.மு.க அரசை வலியுறுத்தியிருந்தேன். ஆனால், மீண்டும் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்களிடம் அரசு பேருந்து பற்றிய நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளன.

எனவே, இனியாவது இந்தத் திமுக அரசு விழித்துக் கொண்டு, அரசு பேருந்துகளின் ஆயுட்காலத்தை முன்பிருந்தது போல் குறைத்து புதிய பேருந்துகள் வாங்கவும், இயங்கிக் கொண்டிருக்கும் பேருந்துகளை முறையாக பராமரிப்பு செய்து, பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யுமாறும் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.