ஐபிஎல்2024 இன் 46ஆவது லீக் ஆட்டம் நேற்று சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற கம்மின்ஸ் முதலில் பந்து வீச தீர்மானித்தார்.
தொடர்ந்து முதலில் களமிறங்கிய சென்னை அணிக்கு பவர் பிளேயிலேயே முதல் விக்கெட் விழுந்தது. ரஹானே 9 ரன்களில் ஆட்டமிழக்க, 3ஆவது விக்கெட்டுக்கு மிட்செல் களமிறங்கினார். கடந்த ஆட்டத்தைப் போலவே பொறுப்புடனும் அதே நேரத்தில் அதிரடியும் காட்டிய ருதுராஜ் அரைசதம் கடந்தார். அவருக்கு ஈடுகொடுத்து ஆடிய மிட்செல் 32 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த சிக்சர்களின் நாயகன் சிவம் துபே வழக்கம் போல அதிரடியாக சிக்சர்களை பறக்க விட ஆரம்பித்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ருதுராஜ் 98 ரன்களில் ஆட்டமிழந்தார். சிவம் துபே 20 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. ஹைதராபாத் பந்துவீச்சில் புவனேஷ்வர், நடராஜன், உனாத்கட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
கடந்த சில ஆட்டங்களாக 200 ரன்கள் எளிதில் எடுக்கப்படுவதும், சன் ரைசர்ஸ் அணி இருக்கும் ஃபார்மிற்கு இந்த ஸ்கோர் போதுமா ரன ரசிகர்கள் நினைத்தாலும், கடந்த ஆட்டத்தில் 206 ரன்களை சன் ரைசர்ஸ் எடுக்க முடியாமல் பெங்களூரு அணியிடம் தோற்றதாலும், சொந்த மைதானம் என்ற நம்பிக்கையிலும் சென்னை அணி கேப்டன் ருதுராஜ் தன்னம்பிக்கையுடன் களமிறங்கினார். அந்த நம்பிக்கையை சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள் வீணாக்கவில்லை.
சன் ரைசர்ஸ் அணி 18.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்து 78 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக மார்க்ரம் 32, கிளாசென் 20, சமத் 19 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
குறிப்பாக கடந்த ஆட்டத்தில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த ஷர்துல், தேஷ்பாண்டே, முஸ்டபிசுர் ஆகியோர் சிறப்பாக பந்து வீசினர். மிகவும் சிறப்பாக பந்து வீசிய தேஷ்பாண்டே 27 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகளும், பதிரனா, முஸ்டபிசுர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ஜடேஜா, ஷர்துல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். சிறப்பாக ஆடி 98 ரன்கள் எடுத்து வெற்றிக்கு காரணமாக இருந்த ருதுராஜ் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி 5 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 3 ஆவது இடத்திற்கு முன்னேறி பிளே ஆஃப் வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது.