Skip to main content

வடகொரியா – வடகறியா? கொத்துக்கறியா?

Published on 11/06/2018 | Edited on 11/06/2018

1950ல் தொடங்கி கடந்த 68 ஆண்டுகளாக அமெரிக்க அதிபர்கள் யாருடனும் கொரியா அதிபர்கள் சந்தித்ததில்லை. டெலிபோனில்கூட பேசியதில்லை. வடகொரியாவை ரவுடி நாடு என்று அமெரிக்கா தொடர்ந்து முத்திரை குத்தி வந்திருக்கிறது.

 

வடகொரியாவின் ராணுவரீதியிலான வளர்ச்சியை அமெரிக்காவால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை. அமெரிக்காவை சாராமல் தனித்து இயங்கும் நாடுகளை அமெரிக்காவுக்கு பிடிக்காது என்பது வரலாற்று உண்மை.

 

தன்னை எதிர்க்கும் நாடுகளை அழித்தொழிப்பதே அமெரிக்காவின் முழுநேர வேலை என்று கிண்டலாக கூறுவது வாடிக்கை. அந்த வகையில் தனக்கு போட்டியாக மூன்றாம் உலக நாடுகளின் பாதுகாவலனாக இருந்த சோவியத் யூனியனை திட்டமிட்டு சிதைப்பதில் வெற்றிபெற்றது. அதைத்தொடர்ந்து அமெரிக்காவால் சிதைக்கப்பட்ட நாடுகளில் யூகோஸ்லாவியா ரொம்ப முக்கியமானது. இராக்கை மிரட்டி, தடைகள் போட்டு, ரசாயன ஆயுதங்கள் இருப்பதாக பொய் சொல்லி, கடைசியில் அந்த நாட்டை இன்றுவரை ரத்தக்களறியாக்கி வைத்திருக்கிறது.

 

 

 

லிபியா, எகிப்து, துனிஷியா, ஆப்கானிஸ்தான், சமீபத்தில் சிரியா என்று அமெரிக்காவின் கைங்கர்யம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. தென்னமெரிக்காவில் வெனிசூலா, பொலிவியா நாடுகளில் அந்த நாடுகளின் சோசலிஸ்ட் அரசுகளுக்கு தொடர்ந்து தொல்லை கொடுக்கும் போராட்டங்களை அமெரிக்கா ஊக்கிவித்து வருகிறது. உலகில் எங்கெல்லாம் ஆயுதமோதல் தொடர் நிகழ்வாக இருக்கிறதோ அங்கெல்லாம் மூலகாரணமாக அமெரிக்காவே இருக்கிறது.

 

இந்த நிலையில்தான் அமெரிக்காவின் எந்த மிரட்டலுக்கும் அடிபணியாத வடகொரியாவை ட்ரம்ப்பும் தனது பங்கிற்கு சமீபகாலமாக கடுமையாக மிரட்டிப் பார்த்தார்.

 

அணுஆயுத சோதனைகளில் வடகொரியா பெற்ற வெற்றிகள், அது நடத்திய அடுத்தடுத்த சோதனைகள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை வெற்றி என்று அடுத்தடுத்து ட்ரம்ப் காண்டாகிவிட்டார். தென்கொரியாவும், ஜப்பானும் அலறத் தொடங்கின.

 

அதைத்தொடர்ந்து அமெரிக்கா நினைத்தால் வடகொரியாவை ஒன்றும் இல்லாமல் செய்துவிடுவோம் என்றுகூட ட்ரம்ப் மிரட்டினார். அந்தப் பூச்சாண்டிக்கெல்லாம் பயப்படமாட்டோம். வடகொரியாவைத் தாக்க நினைத்தால், அமெரிக்க நகரங்களை தகர்ப்போம் என்று வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் கடுமையாக எச்சரித்தார்.

 

 

 

அதைத்தொடர்ந்து வழக்கம்போல அமெரிக்கா தனது ஊதுகுழலாக பயன்படுத்தும் ஐ.நா.சபை உதவியோடு வடகொரியாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதித்தது. இந்தத் தடையைத் தொடர்ந்து சீனா மத்தியஸ்த முயற்சிகளில் ஈடுபட்டது. சீனாவும் ரஷ்யாவும் வடகொரியாவுக்கு ஆதரவாக இருக்கின்றன. எனவே, அமெரிக்கா வடகொரியா மீது கைவைக்க பயப்படுகிறது. வடகொரியா மீதான எந்த கடுமையான நடவடிக்கையும் அமெரிக்காவை கடுமையாக பாதிக்கும் என்பதை ட்ரம்ப் உணர்ந்தார்.


 

 

இந்நிலையில்தான், தென்கொரியாவுடன் தனது நட்பை உறுதிப்படுத்தும் வகையில் வடகொரியா அதிபர் புதிய முயற்சிகளை தொடங்கினார். இரண்டு கொரியா மக்களும் ஒரே நாடாக இணையவே விரும்புகிறார்கள். உலகின் மூன்றாவது பெரிய ராணுவத்தை வைத்துள்ள, அணுஆயுத பலத்துடன் அமெரிக்காவையே அச்சுறுத்தும் வகையில் வளர்ந்துள்ள வடொகொரியாவுடன் இணைய தென்கொரியா மக்கள் விரும்புகிறார்கள்.

 

 

 

தனித்து தனது ஆயுதபலம், பொருளாதார முன்னேற்றம், ராணுவ பலம் ஆகியவற்றை உறுதிப்படுத்திய வடகொரியா, பொருளாதார தடையை நீக்கி, உலகமய கொள்கைகளை அமல்படுத்தி உலகத்தோடு ஒத்துப்போக விரும்பியது. எனவே, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் சமாதான முயற்சிகளை ஏற்க கிம் ஜோங் உன் முன்வந்தார். ஆனால், இடையில் வடகொரியா பயந்துவிட்டதுபோன்ற செய்திகளை அமெரிக்கா கசியவிட்டது. இதையடுத்து, அமைதி முயற்சியை ரத்துசெய்வோம் என்று வடகொரியா மிரட்டியது.

 

இந்நிலையில் தென்கொரியா அதிபர் முயற்சியில் கிம் ஜோங் உன் மீண்டும் சமாதானம் அடைந்தார். இதையடுத்து திட்டமிட்டபடி சிங்கப்பூரில் இரு நாடுகளின் அதிபர்களும் நாளை சிங்கப்பூர் அருகே உள்ள சென்டோஸா என்ற உல்லாசத் தீவில் பலத்த பாதுகாப்போடு சந்தித்து பேசப் போகிறார்கள்.

 

இந்தப் பேச்சுவார்த்தை வெற்றிபெற்றால் வடகொரியாவின் வரலாற்றில் புதிய திருப்பம் ஏற்படும் என்கிறார்கள். தன்மீது படையெடுப்பு இருக்காது. பொருளாதார தடைகள் நீக்கப்பட வேண்டும் என்ற இரண்டு முக்கியமான கோரிக்கைகளைத்தான் வடகொரியா முன்வைத்துள்ளது. இதை ஏற்றால், வடகொரியா தன்னிடமுள்ள அணுஆயுத கூடங்களை அழிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், வடகொரியாவை நிராயுதபாணியாக்கிவிட்டு, அந்த நாட்டைச் சிதைக்க வேறு தந்திரமான நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபடக்கூடும் என்ற அச்சமும் உருவாகி இருக்கிறது.

 

உலகமயக் கொள்கைகளை அனுமதிக்க வேண்டும், தனது தொழில்களை தொடங்க வடகொரியா உதவவேண்டும் என்றெல்லாம் அமெரிக்கா கேட்கக்கூடும். அப்படியே கேட்டாலும் சீனா பாணியில் சில நிபந்தனைகளோடு வடகொரியா அனுமதிக்கலாம். எப்படி இருந்தாலும் லிபியா உள்ளிட்ட நாடுகளைச் சிதைத்ததுபோல வடகொரியாவை வடகறியாகவோ, கொத்துக்கறியாகவோ அமெரிக்கா சாப்பிட்டுவிட முடியாது என்பது மட்டும் உறுதி.

 

என்றாலும், நீண்டகால பகையை மறந்து இரண்டு நாடுகளும் கைகுலுக்குவது உலக அமைதிக்கு உதவும் என்ற நம்பிக்கையில் வரவேற்போம்.