Skip to main content

நியூட்ரினோ அபாயம்! ஓ.பி.எஸ்.தரப்பு ஆதாயம்!

Published on 24/03/2018 | Edited on 24/03/2018

ந்த ஆபத்து கூக்குரல் மலை முழுவதும் எதிரொலிக்கிறது. ஆறு ஆண்டுகளுக்கு முன் தேனி மாவட்டம் அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ திட்டத்தை தொடங்க மத்திய அரசு முடிவெடுத்தது. அதைத் தொடர்ந்து அந்தப் பகுதியே போராட்ட களமாகியது.

neutrino

நியூட்ரினோ திட்டத்தால் இயற்கை வளத்திற்கும் மக்கள் உயிருக்கும் ஆபத்து என்று கூறப்பட்டதால் பொட்டிபுரம், புதுக்கோட்டை, புதூர், பெரியபொட்டிபுரம், குப்பன் ஆசாரிப்பட்டி, திம்மிநாயக்கன்பட்டி, சின்னபொட்டிபுரம் கிராமங்களில் வசிக்கும் அனைத்து சமூகத்தினரும் ஒட்டுமொத்தமாக போராட்டத்தில் குதித்தனர்.

அவர்களுக்கு ஆதரவாக தேவாரம், போடி பகுதியிலும் மாவட்ட அளவிலும் விவசாயிகளும் போராடினர். அனைத்துக் கட்சியினரும் இந்தத் திட்டத்தை எதிர்த்தாலும், வைகோ மட்டுமே நேரடியாக மக்களைத் திரட்டி போராடியதுடன் ஆய்வு மையம் அமைக்க தடையும் வாங்கினார். ஆனால் சமீபத்தில், நியூட்ரினோ திட்டத்தை விரைவுபடுத்த பிரதமர் மோடி தனது செயலாளரை உசுப்பிவிட்டதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, கடந்த மாதம்கூட வைகோ இந்த பகுதியில் விழிப்புணர்வுப் பேரணியை நடத்தினார்.

இந்நிலையில், பொட்டிபுரம் அம்பரப்பர் மலையில் சத்தமில்லாமல் நியூட்ரினோ ஆய்வகப்பணிகள் நடப்பதைப்போல வாட்ஸப்பில் வெளியான கிராபிக்ஸ் படங்கள் மக்களை அதிர்ச்சியடையச் செய்தன.

அதைத்தொடர்ந்து பகுதி மக்களைச் சந்தித்து நிலவரத்தை அறிய முயன்றோம். அப்போது, “""எங்களுக்கு ஆதரவாக வைகோ உள்ளிட்ட பல தலைவர்கள் போராடுகிறார்கள். ஆனால், தொகுதி எம்.எல்.ஏ.வான துணைமுதல்வர் ஓ.பி.எஸ். கண்டுகொள்ளவே இல்லை. நியூட்ரினோ திட்டத்தைக் காட்டி அவருக்கு வேண்டிய வசதிபடைத்த சிலர், மலையடிவாரத்தில் இருக்கிற நிலத்தை அடிமாட்டு ரேட்டுக்கு வாங்கிக் குவிக்கிறார்கள். நியூட்ரினோ திட்டம் வந்தால் அம்பரப்பர் மலையடிவாரத்தில் ஆடு, மாடுகள் மேய்த்துக்கூட பிழைக்க முடியாத நிலை ஏற்படும்''’என்று குமுறினார்கள்.

neutrino

மலையடிவாரத்தில் நிலைமை இப்படியிருக்க... நியூட்ரினோ திட்டத்தில் வைகோவுடன் இணைந்து வழக்காடும் "பூவுலகின் நண்பர்கள்' அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிசெல்வனிடம் நிலைமை குறித்து கேட்டோம். அவர் கூறிய விவரங்கள் நம்மை அதிர்ச்சியடையச் செய்கின்றன.…

""டாடா இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிசர்ச்' என்ற அமைப்பு, நியூட்ரினோ ஆய்வகத்திற்கு என்று குறிப்பிடாமல் கட்டடம் கட்டும் பிரிவில் ஒரு விண்ணப்பத்தை "ஸ்டேட் என்வைரோன்மெண்டல் இம்பாக்ட் அஸெஸ்மெண்ட் அத்தாரிட்டி'க்கு அனுப்பியது. ஆனால், "இரண்டு கிலோமீட்டர் மலையைக் குடைந்து எடுக்கப்போவதை எப்படி கட்டடக் கட்டுமானம் என்று சொல்ல முடியும்?' என்று அந்த அமைப்பு வினா எழுப்பியது. அதையடுத்து, அந்த விண்ணப்பத்தை ‘"எக்ஸ்பர்ட் அப்ரைஸல் கமிட்டி'க்கு அனுப்பியது. மேற்குத்தொடர்ச்சி மலை பாதுகாக்கப்பட வேண்டிய பகுதி என்பதால்தான் அந்த அத்தாரிட்டி இப்படி செய்தது. ‘எக்ஸ்பர்ட் அப்ரைஸல் கமிட்டி, விண்ணப்பத்தை பரிசீலித்து நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து பல்வேறு வழக்குகள் இருப்பதால், பரிசீலனை செய்வதாக கூறிவிட்டது. இந்நிலையில்தான் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் தொடர்ந்த வழக்கில் இந்த திட்டத்துக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தடை விதித்தது. இதையடுத்து, எங்கள் அமைப்பின் சார்பில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தோம்''’என்றார்.

lawyerஅதாவது, "நியூட்ரினோ திட்டத்துக்கு அனுமதி' என்று விண்ணப்பித்தால், "இந்த திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகளை ஆய்வு செய்யவேண்டும். பாதிப்புகளை தவிர்க்க என்ன செய்யவேண்டும் என்று விளக்க வேண்டும். மக்களிடம் கருத்துக் கேட்கவேண்டும். மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அவர்களுக்கு விளக்கம் தரவேண்டும்' என்று நீளமான பிராசஸ் இருக்கிறது. எனவேதான் பில்டிங் கட்டும் வேலை என்று விண்ணப்பித்திருக்கிறார்கள். இதற்கு எந்த அனுமதியும் தேவையில்லை.

நியூட்ரினோ திட்டத்தை ஆதரித்து அப்துல்கலாம் எழுதிய ஒரு கட்டுரையில் “"நியூட்ரினோ துகள்கள் மூலமாக தீவிரவாதிகளிடம் இருக்கக்கூடிய அணுஆயுத ரகசியங்களை கண்டுபிடிக்க முடியும்'’என்கிறார்.

2003-ஆம் ஆண்டு இன்னொரு அறிவியலாளர் எழுதிய கட்டுரையில், ""நியூட்ரினோ பீம் என்பது ஒரு தொழிற்சாலையில் உருவாக்கப்படும் செயற்கையான நியூட்ரினோவால் உருவாக்கப்படுவது. அந்த பீமை ஒரு குறிப்பிட்ட இடத்தில் செலுத்தி அணு ஆயுதங்களை கண்டறிய முடியும்'' என்கிறார்.

அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து, ஜப்பான் போன்ற நாடுகளில்தான் செயற்கையாக நியூட்ரினோக்களை உருவாக்குகிறார்கள். இந்தியாவில் நியூட்ரினோக்களை உருவாக்கும் தொழிற்சாலைகள் இல்லை. அதேநேரம், இந்த நியூட்ரினோ திட்டத்தில், இயற்கை நியூட்ரினோக்களையும் செயற்கை நியூட்ரினோக்களையும் ஆய்வு செய்வதை நோக்கமாக கூறியிருக்கிறார்கள்.

இப்போது, தேர்வு செய்யப்பட்டுள்ள பொட்டிபுரம் என்பது அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளில் இருந்து சரியாக 7 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. எனவே, இந்த நாடுகளில் உற்பத்தியாகும் நியூட்ரினோக்கள் குறித்த விவரங்களை ஆய்வு செய்வதற்காகவே இந்த ஆய்வகம் பயன்படுத்தப்படுமோ என்ற சந்தேகம் எழுகிறது. அதாவது பொட்டிபுரத்தை "மேஜிக் பேஸ் லைன்' என்று குறிப்பிடுகிறார்களாம். அதன்படி மேற்படி "மூன்று நாடுகளுக்கும் இந்தியா கூலிக்கு வேலை செய்யப்போகிறது' என்று விவரமறிந்தோர் சந்தேகிக்கிறார்கள்.

"நியூட்ரினோ திட்டம் குறித்து குழு அமைத்து ஆராயப்படும்' என்று ஜெயலலிதா கூறியிருந்தார். அந்தக் குழு அமைக்கப்படவில்லை. இப்போதைய எடப்பாடி அரசு என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதை பொறுத்தே திட்டத்தின் செயல்பாடுகள் அமையும் எனக் கூறப்படுகிறது. ஆனால், துணை முதல்வர் ஓ.பி.எஸ்.கூட விவசாயிகளின் எதிர்காலம் குறித்து கவலைப்படவில்லை என்று மக்கள் ஆவேசமாக கூறுகிறார்கள். "நியூட்ரினோ திட்டத்தை வைத்து அவரது தரப்பும் 200 ஏக்கருக்கு மேல் நிலத்தை வாங்கிப் போட்டிருக்கிறது' என்கிறார்கள்.

""போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை ஆதரிக்காவிட்டாலும் பரவாயில்லை, அவர்கள் மீது வழக்குப் போட்டு மிரட்டினார்கள். இருந்தாலும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தொடர்ந்து போராடுவோம்'' என்கிறார்கள் மலையோர மக்கள்.

ஓ.பி.எஸ். தரப்பினர் நிலம் வாங்கியிருப்பது உண்மையா என்பதை அறிய முயன்றோம். மலை அடிவாரத்தில் விவசாயம் செய்யும் மரகப்பட்டி குப்பிபாண்டியிடம் கேட்டோம்.

""கம்பத்தைச் சேர்ந்த பலர் 160 ஏக்கர் நிலத்தை வாங்கி சவுக்கு தோட்டம் போட்டிருந்தார்கள். அதைத்தான் ஓ.பி.எஸ். ஆட்கள் வாங்கியிருப்பதாக கூறுகிறார்கள். 24 குழாய்க்கிணறுகள் போட்டு, தனி டிரான்ஸ்பார்மருடன் வேலியமைத்து விவசாயம் செய்கிறார்கள். உள்ளே எல்லா வசதியும் உள்ள மூன்று வீடுகள் இருக்கின்றன. அவ்வப்போது கார்களில் பலர் வந்து போவார்கள். அமைச்சர்களும் எம்.எல்.ஏ.க்களும் வந்துபோவதாக கூறுகிறார்கள். பணமதிப்பிழப்பு சமயத்தில் ஒரு அம்மா "5 கோடி ரூபாய் பழைய நோட்டு மாத்தணும்' என்று கமிஷன் பேசினார். அந்தச் சமயத்தில் உள்ளே இரண்டு கண்டெய்னர்கள் கூட நின்றன. 75 சதவீதம் ஓ.பி.எஸ். ஆட்கள் தோட்டம்தாங்க''’என்றார்.

மேலும் விசாரித்தபோது, "ஓ.பி.எஸ்.ஸுக்காக தேர்தல் வேலை செய்தவர்கள் புதூரில்தான் தங்கியிருந்தார்கள். அங்குள்ள உறவினர்கள் பெயரில் பலகோடி ரூபாய் சொத்துக்களை ஓ.பி.எஸ். தரப்பினர் வாங்கிக் குவித்திருக்கிறார்கள்' என்றார்கள்.

இதுபற்றி ஓ.பி.எஸ்.சிடமே விளக்கம் கேட்கலாம் என்று முயற்சித்தோம். ஆனால், அவரை பிடிக்க முடியவில்லை. அவருடைய ஆதரவாளர்கள் சிலரிடம் கேட்டோம்.

""அந்த நிலத்திற்கும் அண்ணன் ஓ.பி.எஸ்.ஸுக்கும் தொடர்பே இல்லை. வெளிநாட்டில் வசிக்கும் ஒரு கவுண்டருக்குச் சொந்தமானது''’என்றார்கள்.

நியூட்ரினோ திட்ட ஆபத்துகள் குறித்த சந்தேகங்கள் வலுத்துவரும் நிலையில், "இந்தத் திட்டம் இந்தியாவின் முன்னேற்றத்துக்கா? அமெரிக்காவுக்கு அடிமை வேலை செய்வதற்கா?' என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மக்களின் அச்சம் கூடிக்கொண்டிருக்கும் நிலையில், நாளைய பலன்களை எதிர்பார்த்து வேகவேகமாக நிலங்களை சுருட்டுகின்றன அதிகாரத்தின் கரங்கள்.

-சக்தி, சி.ஜீவாபாரதி