Skip to main content

“eps & ops அறிக்கை சந்தேகம் வருகிறது..” - நாஞ்சில் சம்பத் சிறப்பு பேட்டி

Published on 30/04/2021 | Edited on 30/04/2021

 

Nanjil sampath special interview about eps and ops statement on election result


தமிழகம் உட்பட இந்தியாவில் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. அதற்கு முன்னதாக நேற்று (29/04/21) மாலை பல நிறுவனங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை வெளியிட்டனர். அதில் பெரும்பாலுமான நிறுவனங்களின் கருத்துக் கணிப்புகள் திமுக 160 முதல் 170 இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளன. இந்நிலையில், அதிமுக தலைமையிலிருந்து "நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்; இரட்டை இலையே என்றென்றும் வெல்லும். கடமைகள் அழைக்கின்றன; கண்மணிகளே வெற்றி மாலை சூடத் தயாராகுங்கள். வரலாறு வியக்கும் வகையில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்..” என அறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் அவர்கள் நக்கீரன் இணையத்திற்கு அளித்த சிறப்பு பேட்டி. 

 

கருத்துக் கணிப்புகள் சொல்லும் முடிவையே மே 2ஆம் தேதி எதிர்பார்க்க முடியுமா?

 

“நேற்று இந்தியாவின் புகழ் பெற்ற ஊடகங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டதில், தமிழ்நாட்டில் திமுக அதிதபெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று வந்திருக்கும் செய்தி எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்தது. ஒரு நான்காண்டு காலமாக, திமுகவிற்கு ஆதரவாக நாடெல்லாம் பேசிய நான், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் எனும் குருக்ஷேத்திர யுத்தத்திலும், ஸ்டாலின் முதல்வராக வேண்டியது காலத்தின் கட்டாயம் என உரை முழக்கம் செய்த நான், இந்தக் கருத்துக் கணிப்பை பார்த்தும், கேட்டும் பரவசம் அடைந்திருக்கிறேன். அதிலும் இந்து குழுமத்தின் தலைவர் இந்து என். ராம், 200 தொகுதி வரைக்கும் வெற்றி பெறும் என்று சொன்னதுதான் சரியான கருத்துக் கணிப்பு என நம்புகிறேன். நாடு சுற்றிவந்தத்தில் நான் கணித்ததும், கிட்டத்தட்ட 200 தொகுதிகளுக்கு மேல் திமுக வெற்றி பெறும். எதிர் கட்சி அந்தஸ்தை அதிமுக இழக்கும். 20 தொகுதிகளுக்கு மேல் காங்கிரஸ் கட்சி பெற்றால் தமிழகத்தில் எதிர்க் கட்சி அந்தஸ்த்தை பெறும் வாய்ப்பும் காங்கிரஸுக்கு இருக்கிறது அதனை அலட்சியப்படுத்திவிட முடியாது. ஆனால் இன்றைக்கு அஸ்தமனத்தை நோக்கி, அழிவின் விளிம்பை நோக்கி சென்றுக்கொண்டிருக்கு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை ஒருங்கிணைப்பாளரும், இந்தக் கருத்துக் கணிப்புகளை எல்லாம் நம்பவேண்டாம் நாம் ஆட்சி அமைக்க போகிறோம் என இன்று அறிக்கை விட்டிருப்பது, ஏதோ இன்றோ நாளையோ ஆபத்தான் விளையாட்டை விளையாடுவதற்கு ஒத்திகை பார்க்கிறார்களா எனும் சந்தேகம் எனக்கு வருகிறது. 

 

எனவே திமுகவினர் இன்றும் நாளையும் மிகுந்த விழிப்புணர்வோடு இருந்து, வாக்கு பெட்டிகளை கண்காணித்து வாக்கு எண்ணி முடிகிறவரை.. அறுவடை செய்த நெல் வீட்டுக்கு வந்து சேருகிற வரை, உழைக்கின்ற உழவன் எப்படி, கண்காணிப்போடும், கரிசனத்தோடும் இருப்பானோ அதுபோல் இருக்க வேண்டும். அழிந்துகொண்டிருக்கின்ற கட்சியை தற்காத்துக்கொள்ள எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இரண்டு நாட்களுக்கு தங்களை தற்காத்துக்கொள்ள வழிதெரியாமல், விட்டிருக்கும் அறிக்கை கேலிகூத்தானது. இத்தனை ஊடகங்கள் கணித்து இருக்கும் கணிப்பை தவறு எனச் சொல்வதற்கு இவர்கள் என்ன மிக பெரிய ராஜதந்திரிகளா? கூவத்தூர் கூத்தில் கோபுரத்தில் ஏறி உட்கார்ந்தவரும், தேநீர்க் கடையில் வேலை பார்த்துவிட்டு, தெருவில் நின்றவர் இந்த நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதும், இவர்களுக்கும் அரசியலுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? அடிமையாகவே இருந்து சுகம் கண்டுபோன இந்த அடிமைக் கூட்டம், மீண்டும் அதிகாரத்திற்கு வரமுடியும் என்று தொண்டர்களை ஏமாற்றுகிறார்கள். தொண்டர்கள் இவர்களை ஏமாற்றும் நாள் வரும். தொண்டர்கள் இவர்களை கேள்வி கேட்கும் சூழல் வரும். தமிழ்நாட்டில் திருப்பங்கள் ஸ்டாலின் தலைமையில், ஆட்சி அமைந்ததும் அதற்கு பிறகு நடக்கவிருப்பதை இப்போதே சொல்லி வைக்கிறேன். 

 

அதிமுக அறிக்கையில் வாக்கு எண்ணும் மையங்களில் தில்லுமுல்லு நடக்கிறதா என்பதை விழிப்புடன் கண்காணிக்க வேண்டும் என்கிறார்களே..?

 

அணையப்போகின்ற விளக்கின் பிரகாசமும், இறக்க போகின்ற நாயின் ஆரவார கூச்சலையும் அலட்சியப்படுத்த வேண்டியதுதான் நமது கடமை என்பதை நினைவூட்டுகிறேன். இந்தியாவில் ஏற்கனவே இதுபோன்ற கணிப்புகளில் கணித்தது தப்பவில்லை என்ற அளவிற்கு, இந்த கணிப்பை வெளியிட்டுள்ளன. இவர்கள் எந்த எஜமானர்களை நம்பினார்களோ அந்த எஜமானர்களே செல்லா காசாக போகிறார்கள் என்பது இந்தத் தேர்தல் முடிவு சொல்லப் போகிறது. வரலாற்று சிறப்பு மிக்க ஒன்றை மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி பெற இருக்கிறார். திருணாமுல் காங்கிரஸ் கட்சியை திசைக்கு ஒன்றாக சிதறடித்து, முக்கிய நிர்வாகிகளை எல்லாம் விலைகொடுத்து வாங்கி, எப்படியும் மேற்கு வங்கத்தில் ஆட்சிக்கு வந்துவிடமுடியும் என கரோனா காலத்தில் மக்களை பற்றி கவலைப்படாமல், மே.வங்கத்தில் பிரச்சாரம் என்ற பெயரில், மம்தா பானர்ஜிக்கு எதிராக பிரச்சாரம் செய்ததற்கு, அவர்கள் கல்லறைக்கு போகப்போகிறார்கள்; மம்தா பானர்ஜி மீண்டும் முடி சூட்ட போகிறார் என்று செய்தி வந்துகொண்டிருக்கின்றது. பி.ஜே.பி. இல்லாத ஆட்சியை இந்த ஐந்து மாநில தேர்தல் முடிவுகளும் தரவிருக்கும் இந்த சூழலில், தங்கள் அரசியல் வாழ்வுக்கே ஆபத்து வந்துவிட்டது, எஜமானர்களின் நிலையே கவலைக்கிடமாக ஆகிவிட்ட கவலையில், இன்றைக்கு அவர்கள் புலம்புகிறார்கள்.

 

நேற்று வந்தவை கருத்துக் கணிப்பு அல்ல கருத்துத் திணிப்பு; பல கட்டங்களில் கருத்துக் கணிப்புகளை அதிமுக தவிடுபொடியாக்கி இமாலய வெற்றியை பெற்றிருக்கிறது என அமைச்சர் ஜெயகுமார் சொல்லிருக்கிறாரே?

 

ஜெயக்குமாரின் கடைசி பேட்டியாக அது இருக்கும். ஜெயக்குமாருக்கு இனி ஊடகங்களில் பேட்டிக் கொடுக்கும் வாய்ப்புகூட கிடைக்காமல் போகிற சூழல் தான் அரசியலில் வரப்போகிறது. அந்தக் கட்சியை இன்றைக்குத் தனதாக்கிக்கொண்டு, தனக்குத் தானே தம்பட்டம் அடித்துக்கொள்ளும் அனைவரும் மோசமான நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். அதிமுகவிலேயே மிக பெரிய ரசாயன மாற்றங்கள் நடக்கும். அதிலேயே முதலில் ஓரம் கட்டப்படுபவராக ஜெயக்குமாராக இருப்பார்” என்றார்.

 

 

 

Next Story

இது கலாச்சார யுத்தம்; வெட்கி தலை குனியும் ஆளுநர்!

Next Story

“50 ரூபாய்க்கு சிங்கியடிச்ச ஜெய்ஷா...” - நாஞ்சில் சம்பத் தாக்கு

Published on 01/08/2023 | Edited on 01/08/2023

 

nanjil sampath interview about manipur issue and bjp

 

சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்து மூத்த திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத்திடம் பேட்டி கண்டோம். அப்போது அவர் நம்மிடம் பல்வேறு விஷயங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். அதில் சிலவற்றை இங்கு தொகுத்துள்ளோம்..

 

“மணிப்பூர் பிரச்சனை என்பது ஒரு இனப்படுகொலை. இரட்டை எஞ்சின் ஆட்சியின் தோல்வி. பெண்களை நிர்வாணப்படுத்தி, பாலியல் வன்புணர்வு செய்து, 80 நாட்கள் பல்வேறு கொடுமைகளை அங்கு நிகழ்த்திய பிறகும் பிரதமர் அங்கு நேரில் சென்று பார்க்கவில்லை. ஆனால், இந்த 80 நாட்களில் அவர் எட்டு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். இதுவரை மக்களின் வரிப்பணத்திலிருந்து 400 கோடி ரூபாய் செலவழித்து 124 நாடுகளுக்கு அவர் பயணம் செய்திருக்கிறார். தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதற்கு மட்டும்தான் இந்தப் பதவியை அவர் பயன்படுத்துகிறார். நாட்டு மக்களின் சுக துக்கங்களைத் தீர்மானிப்பதற்கு அவர் முன்வரவில்லை.

 

இந்திய வரலாற்றில் பாராளுமன்றத்துக்கு வராத பிரதமர், நரேந்திர மோடி மட்டும்தான். எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு அவர் பதில் சொல்ல வேண்டும். சபை இவ்வளவு நாட்கள் முடக்கப்பட்ட பிறகு, இப்போது சிபிஐ விசாரணை என்று பொய் சொல்கிறார்கள். போலீசாரிடமும் ராணுவத்தினரிடமும் இருக்கும் துப்பாக்கி, வன்முறையாளர்களிடம் வந்தது எப்படி? குறைந்தபட்சம் தன் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று கூட அந்த மாநில முதலமைச்சர் சொல்லவில்லை. அண்ணாமலையின் யாத்திரை முடியும்போது பாஜகவுக்கு தமிழ்நாட்டு வாக்காளர்கள் முடிவுரை எழுதி விடுவார்கள். மோடியின் சாதனைகள் என்ன?

 

இந்திய நாட்டின் முக்கியமான மொழிகளை ஆட்சி மொழியாக இவர்களால் அறிவிக்க முடியவில்லை. 1000 ரூபாய் செல்லாது என்று சொல்லிவிட்டு 2000 ரூபாயை அறிமுகப்படுத்தினார்கள். இந்தியப் பணத்துக்கு இன்று உலக அளவில் மரியாதை கிடையாது. பாராளுமன்றத் தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றி பெறும். திமுகவை மிகப்பெரிய ஊழல் கட்சி என்கிறார் அமித்ஷா. அவருடைய மகன் ஜெய்ஷாவிடம் கேட்டால் ஊழல் என்றால் என்ன என்பது தெரிந்துவிடும். 50 ரூபாய்க்கு சிங்கி அடித்த ஜெய்ஷா இன்று 50 ஆயிரம் கோடிக்கு அதிபதியாக இருக்கிறார். கிரிக்கெட் சங்க பதவி அவருக்கு எப்படி கிடைத்தது?

 

ராகுல் காந்திக்கு சென்ற இடமெல்லாம் மக்களின் வரவேற்பு கிடைக்கிறது. இந்தியா கூட்டணியைப் பார்த்து பாஜக இன்று பயந்து போயிருக்கிறது. எந்தவித ஆசாபாசமும் இல்லாமல் இந்திய நாட்டின் நலனுக்காக காங்கிரஸ் கட்சி புதிய அவதாரம் எடுத்திருக்கிறது. அந்தக் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியைப் பிரதமராக்க வேண்டியது இந்த நாட்டின் கடமை. மோடிக்கு முடிவுரை எழுதுவதற்கு நாடு தயாராகி விட்டது. தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு தொகுதியில் தங்களால் வெல்ல முடியும் என்று பாஜகவால் சொல்ல முடியுமா? பிரதமருக்கு தக்காளி விலை என்னவென்று தெரியுமா? 

 

பல மாநிலங்கள் சேர்ந்தது தான் இந்தியா. ஆனால் மாநிலங்களே இருக்கக் கூடாது என்று பாஜக நினைக்கிறது. ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே பண்பாடு என்று கொண்டுவர நினைக்கிறார்கள். இதனால் இந்தியாவின் பன்முகத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது. பொது சிவில் சட்டம் கொண்டுவரும் நாளில் மக்கள் இவர்களுக்கு குழிதோண்டி விடுவார்கள். மத்தியப்பிரதேசத்தில் மக்கள் வாக்களித்தது காங்கிரஸ் கட்சிக்கு. ஆனால் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி பாஜக ஆட்சிக்கு வந்தது. இவர்கள் இப்போது தமிழ்நாட்டில் நடத்துவது யாத்திரை அல்ல, உல்லாசப் பயணம். இதை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்”.