Skip to main content

500 பேருக்குதான் டோக்கன்! ஆனா எவ்வளவு வேணா வாங்கிக்கலாம்! விற்பனையை அதிகரிக்க டாஸ்மாக் அதிகாரிகளின் பிளான்!

Published on 17/05/2020 | Edited on 18/05/2020

 

tasmac shops


குடிகாரர்களின் நலன் (?) காக்க இரவோடு இரவாக உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறை செய்திருந்தது தமிழக அரசு. ''டாஸ்மாக் மதுபானக் கடைகளைத் திறப்பது சிஸ்டம் சார்ந்தது. அதில் நீதிமன்றம் தலையிட முடியாது,'' என்று சொன்னதோடு, மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கும் இடைக்காலத் தடை விதித்தது உச்சநீதிமன்றம். இதையடுத்து உடனடியாக மறுநாளே (மே 16) தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் நீங்கலாக அனைத்து டாஸ்மாக் கடைகளையும் திறந்தது தமிழக அரசு.
 


''உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த மே 14 ஆம் தேதியன்றே, டாஸ்மாக்கில் டோக்கன் முறையில் மதுபானம் விநியோகம் செய்யப்படும் என்றும், ஒரு நாளைக்கு 500 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றமும், மே 15 ஆம் தேதியன்று உயர்நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதித்து தீர்ப்பு அளிக்கிறது. இந்தத் தீர்ப்பு வந்த மதியமே மதுபானக் கடைகளுக்கான டோக்கன்கள் சமூக ஊடகங்களில் வெளியாயின. 
 

ஏற்கனவே நீதிமன்றம் வரையறுத்தபடி குடிகாரர்கள் தடுப்புக்கட்டைகளின் வழியாக 6 அடி சமூக இடைவெளியுடன் வரிசையில் நின்று வர வேண்டும்; முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்; ஒரு நபருக்கு நான்கு குவார்ட்டர் அல்லது இரண்டு ஆஃப் அல்லது ஒரு ஃபுல் பாட்டில் மதுபானம் வழங்கப்படும் என்றும் சொல்லப்பட்டு  இருந்தது. இந்த விதிமுறைகளில் இப்போதும் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. அதேநேரம் கூட்ட நெரிசலைத் தவிர்க்க, வானவில் நிறங்களில் ஏழு நாளைக்கும் ஏழு நிறங்களில் டோக்கன்களை அச்சிட்டு, 'குடிமகன்' எத்தனை மணிக்கு கடைக்கு வர வேண்டும், எந்தக் கடையில் மதுபானம் வாங்க வேண்டும் என்ற விவரங்களையும் குறிப்பிட்டு வழங்கியிருந்தனர்.


முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான சேலத்தில் எந்த ஒரு டாஸ்மாக் கடைகளிலும் இப்படியான விதிகள் பின்பற்றப்படவில்லை. வரிசையில் நிற்கும்போது பெயரளவுக்கு சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தாலும், கவுண்ட்டர் அருகே கூட்டம் அலைமோதியதையும் காண முடிந்தது. அங்கே போட்டிப்போட்டு சரக்குகளைப் பெற்றுச் சென்றனர்.

 

tasmac shops


இன்னொரு கூத்தும் அரங்கேறியது. குடிகாரர்களுக்கு அவர்கள் கேட்கும் அளவுக்கு கணக்கு வழக்கு இல்லாமல் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டன. உச்சவரம்பு எதுவும் கிடையாது. இதையறிந்த குடிகாரர்கள் பெரிய பெரிய பைகளில் மொத்தமாக சரக்குகளை அள்ளிச்சென்றனர். 
 


இது தொடர்பாக முகம் காட்ட விரும்பாத டாஸ்மாக் ஊழியர்கள் சிலர் நம்மிடம் பேசினர்.


''ஒரு மணி நேரத்திற்குச் சராசரியாக 70 டோக்கன்களுக்கு மதுபானங்களைக் கொடுக்க வேண்டும் என்றும், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை எழு மணி நேரம் கடையைத் திறந்து வைத்திருக்க வேண்டும் என்றும் டாஸ்மாக் அதிகாரிகள் எங்களுக்கு வாய்மொழியாகச் சொன்னார்கள். அதேநேரம், ஏற்கனவே ஒவ்வொரு கடையிலும் ஆகிவந்த சராசரி மது விற்பனை குறைந்து விடக்கூடாது. மற்றபடி மதுப்பிரியர்கள் எவ்வளவு கேட்டாலும் கொடுக்கும்படியும் சொல்லி விட்டனர். அதனால்தான் பல டாஸ்மாக் கடைகளில் 10 லட்சம் ரூபாய் வரைக்கும்கூட மதுபானங்கள் விற்பனை ஆகியிருக்கின்றன.
 

tasmac shops


ஏழு நாளைக்கு ஏழு நிறங்களில் டோக்கன் விநியோகம் என்பதெல்லாம் கண்கட்டி வித்தைதான். வரிசையில் வரும் நபர்களிடம் டோக்கன் கிடைக்காத பலரும் பணத்தைக் கொடுத்து தங்களுக்குத் தேவையான மதுபானங்களை வாங்கி வருமாறு சொல்லி, பெற்றுச்சென்றனர். மேலும், மீண்டும் யாராவது வழக்கு தொடர்ந்து கடைகளை மூடச்சொல்லி விடுவார்களோ என்ற பேச்சும் மதுப்பிரியர்களிடையே காண முடிந்தது. இதுவும் அபரிமிதமான விற்பனைக்குக் காரணம்,'' என்கிறார்கள் டாஸ்மாக் ஊழியர்கள். 


''ஒரு நபருக்கு அதிகபட்சமாக ஒரு ஃபுல் பாட்டில் என்று கணக்கிட்டாலும்கூட 1,000 ரூபாயைத் தாண்டாது. அதன்படி கணக்கிட்டாலும்கூட 500 பேருக்கு ஒரு ஃபுல் வீதம் விற்றிருந்தால் சராசரியாக ஒரு கடையில் 5 லட்சம் ரூபாய் வரை விற்பனை ஆகலாம். அதற்கு மேலும் விற்பனை ஆகியிருக்கிறது என்றால், ஏற்கனவே நீதிமன்ற வழிகாட்டுதலை மீறி பலருக்கும் கூடுதலாக மதுபானங்கள் விற்பனை ஆகியிருக்கிறது என்றுதானே அர்த்தம்?,'' என்கிறார்கள் டாஸ்மாக் பணியாளர்கள்.
 

http://onelink.to/nknapp


சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் மொத்தம் 186 மதுபானக் கடைகள் திறக்கப்பட்டிருந்தன. பல கடைகளில் மாலை 3 மணிக்கெல்லாம் 500 டோக்கன்களுக்கும் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டதால், ஷட்டர்கள் இழுத்து மூடப்பட்டன. வழக்கம்போல் குவார்ட்டர் பாட்டிலுக்கு 20 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை கூடுதல் விலைக்கும் மதுபானங்கள் விற்பனை ஆகின.
 

 

tasmac shops


இது தொடர்பாக சேலம் மாவட்ட மேலாளர் வேடியப்பனிடம் இரவு 10 மணியளவில் தொடர்பு கொண்டு கேட்டபோது, ''சேலம் மாவட்டத்தில் மதுபானங்கள் எவ்வளவு விற்பனை ஆனது என்ற புள்ளி விவரம் முழுமையாக வந்து சேரவில்லை. அடுத்த பதினைந்து நாட்களுக்குத் தேவையான சரக்குகள் இருப்பில் உள்ளன. தொடர்ந்து கடைகளுக்குப் போதிய அளவில் மதுபானங்கள் சப்ளை செய்யப்படும். சரக்குகள் தேவைப்படும் அளவுக்கு விற்பனை செய்யலாம். கட்டுப்பாடுகள் ஏதுமில்லை,'' என்றார்.


மது குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடும். கரோனா தொற்றுக்கும் அதிக வாய்ப்புள்ளதாக மருத்துவர்களே எச்சரித்துள்ள நிலையில், மதுபானமும், அதன்மூலம் கிடைக்கும் வருமானமும்தான் முக்கியம் என்கிறது எடப்பாடி பழனிசாமியின் அரசு. மதுக்கடைகளைத் திறப்பதில் மட்டுமே இந்த மின்னல் வேகத்தில் செயல்படுகிறது என வருத்தத்துடன் சொல்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். 



 

Next Story

சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு

Published on 12/01/2024 | Edited on 12/01/2024
Allotment of Additional Tokens at Registrar's Offices

பொங்கலை முன்னிட்டு சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆவணப் பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் (டோக்கன்கள்) ஒதுக்கீடு செய்யப்படும் என வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

தைப்பொங்கலை (15.1.2024) அடுத்து வரும் நாட்களில் அதிக அளவில் ஆவணங்கள் பதிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பொங்கலை ஒட்டிய விடுமுறை நாட்கள் முடிந்து அடுத்த வேலை நாளான 18.01.2024 முதல் 31.01.2024 வரையிலான காலத்தில் வரும் அனைத்து வேலை நாட்களிலும் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதலாகப் பதிவு டோக்கன்கள் வழங்குமாறு வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.

ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 டோக்கன்களும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதிலாக 300 டோக்கன்களும் வழங்கப்படும். மேலும் தற்போது வழங்கப்படும் 12 தட்கல் டோக்கன்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்த்தப்படும் என வணிகவரி மற்றும் பதிவுத்துறையின் செயலாளர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

பொங்கல் பரிசுத் தொகுப்பு; டோக்கன் வழங்கும் பணி தொடக்கம்!

Published on 07/01/2024 | Edited on 07/01/2024
Pongal gift set The Token Issue Begins
கோப்புப்படம்

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை அனைத்துத் தரப்பு மக்களும் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என்று கடந்த 2 ஆம் தேதி (02.01.2024) தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 5 ஆம் தேதி (05.01.2024) பரிசுத் தொகுப்புடன் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து, ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக நியாய விலைக் கடைகளில் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக ரொக்கமாக வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி மற்றும் சேலைகள் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி, தகுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிடும் வகையில், இன்று (07.01.2024) முதல் வீடு வீடாக டோக்கன் விநியோகம் செய்யும் பணி நடைபெறவுள்ளது. அந்த வகையில் இன்று முதல் வரும் 13 ஆம் தேதி (13.1.2024) வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும். அதே சமயம் விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு வரும் 14 ஆம் தேதி (14.1.2024) வழங்கிடவும், பொங்கல் திருநாளுக்கு முன்னதாக தகுதியான அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இப்பொங்கல் பரிசினைப் பெற்றிட அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அதிக எண்ணிக்கையில் நியாய விலைக் கடைகளுக்கு ஒரே நேரத்தில் வருவதை தவிர்த்திட நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டு டோக்கன் வழங்கப்படவுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் அக்குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசினைப் பெற்றுக் கொள்ளலாம். இப்பணிகளின் போது நியாய விலைக் கடை பணியாளர்களுக்குப் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.