Skip to main content

கொரிய தமிழ்ச் சங்கம் அமைத்த அறிவியலாளர்கள்!

Published on 20/05/2020 | Edited on 20/05/2020

 

korea tamil sangam


முன்னுரை
 

பூமிப்பந்தில் பன்னாட்டு தொடர்புகள் உருவாக கடல் ஒரு இயல்பான இணைப்புப் பாதையாக பயன்பட்டு வந்திருக்கிறது. கடல் சூழ்ந்த தமிழர் நிலம் பண்டைய காலம் தொட்டே தமிழ் வேந்தர்களும் தொழில்புரிவோரும் தத்தமது ஆளுகை மற்றும் தொழில் தொடர்பை விரிவாக்கம் செய்ய ஏதுவாய் அமைந்திருந்ததை வரலாறு எடுத்துக்கூறுகிறது. இன்று இணையம் போன்ற மென்-ஆற்றல் (soft power) உதவியுடன் வெளிவந்துகொண்டிருக்கும் தமிழ்-கொரியா மொழி மற்றும் பண்பாட்டு தொடர்புகள் தமிழ்நாட்டிற்கும் கொரியாவிற்குமிடையேயான வரலாற்றுத் தொடர்பை எடுத்துக்காட்டும் வாழ்வியல் கூறுகள் என்றால் அது மிகையாகாது.
 


கொரிய தீபகற்பத்தைச் சிறப்பாக ஆட்சி செய்த சோசோன் பேரரசின் இறுதிக்காலத்தில் நிலவிய உள்குழப்பத்தால் ஏற்பட்ட ஐரோப்பிய, சீன தலையீடு மற்றும் அதனைத் தொடர்ந்த சப்பானிய ஆக்கிரமிப்பு போன்றவை கொரிய மக்களின் வளமான வாழ்வைச் சிதைத்து அதைப் போராட்டமாக மாற்றியது. இரண்டாம் உலகப்போரின் முடிவில் விடுதலைபெற்ற இந்த நிலம் (1945) வல்லரசுகளின் முடிவின்படி தென்பகுதி முதலாளித்துவத்தைக் கொள்கையாகக் கொண்ட கொரிய மக்கள் குடியரசாகவும் (தென்கொரியா) வடபகுதியை பொதுவுடமை கொள்கையாகக் கொண்ட ஜனநாயக மக்கள் குடியரசாகவும் (வடகொரியா) பிரிக்கப்பட்டது. துயரமான அந்தப் பிரிவும் பின்னர் ஏற்பட்ட இரு கொரியாக்களுக்கிடையேயான போரும் ஒட்டுமொத்த கொரிய மக்களின் வாழ்வை மீண்டும் நெருக்கடிக்கும் துன்பத்திற்கும் உள்ளாக்கியது. சண்டை முடிந்தாலும் இரு கொரிய அரசுகளும் ஒட்டுமொத்த கொரிய தீபகற்பத்தின் ஆளுமையையைத் தத்தமது எனச் சொந்தம் கொண்டாடுகின்றன. பொருளாதார இடைவெளி பெரிதாகி தென்கொரிய பொருளாதாரம் ஆகச்சிறந்த ஆற்றலாக உருவெடுத்திருக்கும் இன்றைய சூழலிலும் இங்குள்ள மக்களின் ஒரு பகுதியினருக்கு இந்தப் பிரிவானது மிகவும் வருத்தம் தரும் நினைவாகவே இருக்கிறது. இங்கு தென்கொரியா என்றில்லாமல் கொரியா என்ற ஓட்டுமொத்த சொல்லே பயன்படுத்தபடுகிறது. இந்த வரலாற்று பின்னணியின் அடிப்படையிலே எமது சங்கத்தின் பெயரும் கொரிய தமிழ் சங்கம் என்று அமைகிறது.
 

korea tamil sangam

2000-2003களில் முனைவர் பட்ட ஆராய்ச்சிப் படிப்பிற்கு கொரியாவிற்கு வந்தவர்கள், பேரா. உத்திரகுமார், பேரா. வெங்கடேசன் மற்றும் பேரா. தண்டபாணி ஆகியோர்.


தமிழ் மக்களும் கொரியாவும்
 

1960-ற்கு பிறகு வளர்ச்சிப்பாதையில் செல்லத்தொடங்கியது தென்கொரியா. அதனால் கல்வி, வேலைவாய்ப்பு, மற்றும் தொழில் நிமித்தம் கொரிய மக்கள் பிறநாடுகளுக்கும் பிறநாட்டு மக்கள் இங்கும் வர தொடங்குகின்றனர். அவ்வாறே ஒரு முக்கிய நிகழ்வாக தமது பொறியியல் பணி நிமித்தம் இன்று மக்கள் அறிந்த தமிழர் கடல் மற்றும் பண்பாட்டு ஆய்வாளர் திரு. ஒரிசா பாலு அவர்கள் 1987-இல் கொரியா வருகிறார், தமிழ்-கொரிய மொழி, வாழ்வியல் மற்றும் பண்பாட்டு ஒற்றுமைககள் குறித்த பதிவுகள் வெகுஐனமக்களுக்கும் தெரிய தொடங்குகிறது. இக்காலகட்டத்தில் இயந்திரங்களை நிலைப்படுத்தும் பணிக்காக கொரிய பொறியாளர்களும் தமிழ்நாட்டிற்கு வந்த பதிவுகளும் உள்ளது. 1996-இல் சென்னையில் தொடங்கப்பட்ட ஃகந்தே (Hyundai) மகிழுந்து தொழிற்சாலை கொரிய-தமிழ் மக்கள் தொடர்பை மேலும் விரிவுபடுத்துகிறது. இங்குள்ள பல்கலைக்கழகங்களுக்கு முனைவர் பட்டம் பெற்ற தமிழ்நாட்டு ஆராய்ச்சியாளர்களும் வர தொடங்குகின்றனர். 2001- ஆம் ஆண்டில் தமிழ்நாட்டை சேர்ந்த பிரின்ஸ்-சாந்தி இணையரால் சக்ர இந்திய உணவகம் தலைநகர் தலைநகர் சியோலில் தொடங்கப்படுகிறது. 
 

korea tamil sangam


சங்க பதிவிற்கு உதவி புரிந்த கொரியா புரவலர்களுக்கு நன்றி தெரிவித்த தலைவர் இராமசுந்தரம்
 

korea tamil sangam


2000-2001-களில் சியோல் சக்ரா இந்திய உணவகத்தைத் தொடங்கிய தமிழ் இணையர்கள் பிரின்ஸ்-சாந்தி
 

korea tamil sangam


கொரிய சுஞ்சியாங்புக்தோ மாகாண அரசின் உதவியுடன் வெகுசிறப்பாக நடைபெற்ற தமிழர் திருநாள், கொரிய பொங்கல் – 2020
 

korea tamil sangam


தமிழ் கலை இலக்கிய சந்திப்பு - 2019 நிகழ்வில் கலந்துகொண்ட ஆய்வாளர் ஒரிசா பாலு, பொது ஆளுமை ஆளூர் ஷா நவாஸ் மற்றும் இந்திய தூதரகத்தின் தொழில்துறை செயலர் திருமதி ஜோஸ் அண்ட்ரோ கெல்த்தா.
 

korea tamil sangam


கொரிய மொழியிலான திருக்குறள் புத்ததகத்தை வெளியிட இந்தியத் தூதரகத்தில் வேண்டுகோள் 
 

korea tamil sangam


சக இந்தியச் சகோதரர்களுடன் நல்லுறவு. குரு நானக் பிறந்தநாள் விழா - 2019.

2002-இல் கொரியாவும்-சப்பானும் இணைந்து நடத்திய உலக கால்பந்து போட்டிகள் கொரியாவின் வளர்ச்சியை மேலும் உலகிற்கும் பறைசாற்றியது. கொரியாவில் நடைபெற்ற கால்பந்து போட்டிகள் கொரியா தேசம் பற்றி உலகிற்கு வெளிச்சம் பாய்ச்சியதன் காரணமாகவும், 1987 முதல் கொரியாவில் வந்து பணியாற்றிய தமிழ்நாட்டுப் பொறியாளர்கள் மற்றும் முனைவர் பட்டம் பெற்ற ஆராய்ச்சியாளர்கள் ஆகியோரின் மேலான உழைப்பின் பலனாகவும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பலரும் முதுகலை மற்றும் முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்பிற்கு வருகை தருவது வெகுவாக தொடங்கிற்று. 2003- ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டிலிருந்து குறுகிய அளவில் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் துறைகளில் முனைவர் பட்ட ஆராய்ச்சிக்கு வர தொடங்கிய மாணவர்கள் மற்றும் பொறியாளர்களின் எண்ணிக்கை இன்று பல நூறுகளாக அதிகரித்திருகிறது.
 

அறிவுசார் தமிழ்ச் சமூகம்    

இந்திய மற்றும் கொரிய நாடுகளுக்கிடையே முறையான தொழிலாளர் ஒப்பந்தம் இன்றுவரை ஏற்படுத்தப்படதாதன் காரணமாக குறைந்தபட்ச கல்வி தகுதியுடன் விளங்கும் சட்டப்படியான இந்தியத் தொழிலாளர்கள் என யாரும் இங்கு வருவதில்லை. இருந்தபோதிலும் கொரிய தொழிலகங்களுக்குத் தேவைப்படும் மனிதவளம் அதிகரித்ததால் இதர வகைகளில் தமிழ்நாட்டு/இந்திய தொழிலாளர்கள் இங்கு 2000-ஆம் ஆண்டு முதல் வருகை தருவது குறிப்பிடத்தக்கது. இருதரப்பு ஒப்பந்தங்கள் காரணமாக இலங்கை போன்ற நாடுகளிலிருந்து சட்டப்படியான தமிழ் தொழிலாளர்கள் குறுகிய அளவில் இருப்பது குறிப்பிடத்தக்கது. மேற்சொன்ன காரணங்களால், உயர் கல்விக்கும் தொழில்நுட்ப வேலைவாய்ப்பிற்கும் வருகை தரும் தமிழர்கள்தான் கொரிய தமிழ்ச் சமூகத்தின் இன்றியமையா அங்கத்தினர்களாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர, சமையல் தொழில்நுட்பம் பயின்ற சமையல் வல்லுனர்களும் இதில் அடக்கம். மேலும், தென்கொரியாவில் அனைத்து பகுதிகளிலும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழிலகங்களிலில் சுமார் 2000 தமிழர்கள் தனிநபர்களாகவும் குடும்பங்களாகவும் பரவி வாழ்கின்றனர்.
 


கொரிய தமிழ்ச் சங்கம் உருவாக்கம்
 

முற்றிலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு நிமித்தமாக இங்கு வந்த தமிழ் மக்களால் உருவான தமிழ்ச் சமுகம் பெரும்பாலும் இயல்பில் மிதக்கும் மக்கள் சமூகமாக (Floating papulation) இன்றுவரை தொடர்கிறது. அதாவது பணிக்கு வருவதும் ஒப்பந்தம் முடிந்தவுடன் தாய்நாடு திரும்புவதுமான நிலையே இன்றுவரை தொடர்கிறது. இலங்கையில் நிலவும் இனப் பிரச்சினையின் காரணமாக இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளிலிருந்து பல்வேறு தமிழ் மக்கள் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிற்குப் புலம்பெயர்ந்த தமிழர்கள் மற்றும் பிரிட்டனின் காலனியாதிக்க காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து ஆப்பிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், ரீயூனியன் தீவுகள், மாலத்தீவுங்கள் மற்றும் பிற நாடுகளுக்குச் சென்ற தமிழர்கள் அந்தந்த நாடுகளில் குடியுரிமை பெற்று நிலையான கட்டமைப்பாக வாழ்கின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இதனால் இயல்பாகவே இங்கு கொரிய தமிழ்ச் சங்கம் போன்ற நிலையான கட்டமைப்பை உருவாக்குவது சற்று கடினமாகவே இருந்து வந்தது. 1990 முதல் கொரியாவை அறிந்து இங்கு ஆராய்ச்சிப்பணிக்காக வந்து சென்ற மூத்தவர்கள் பலர், குறிப்பாக பேராசிரியர்கள் ஆண்டிக்காடு மாசிலாமணி சண்முகராஜ் மற்றும் அருண் ஆனந்த் பிரபு போன்றோர் கொரிய தமிழ்ச் சங்கம் அமைப்பதற்கு முதலில் தகுந்த மக்கள் தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என்று 2006-இன் முற்பகுதியில் கொரியாவிற்கு முனைவர் பட்ட ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்ள வந்த சங்கத்தின் இன்றைய தலைவர் முனைவர் இராமசுந்தரம் போன்றவர்களிடம் கூறிவந்தனர். களப்பணியைத் தொடங்கிய இராமசுந்தரம் கொரியாவில் நிரந்தர பணி செய்யும் வாய்ப்பு பெற்ற மூத்த உறுப்பினர்களையும், சுமார் 5 ஆண்டு காலம் வரை தங்கும் வாய்ப்புள்ள முனைவர் பட்ட மாணவர்களையும் இணைத்து தொடர்புகளை விரிவாக்கி, தமிழர் தொடர்பான வரலாறு, மற்றும் இடர்பாடுகள் குறித்து அவ்வப்போது இங்குள்ள தளங்களில் விவாதங்களில் பங்கெடுத்து சக இந்திய மக்கள் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் கருத்துகளை முன்வைக்க ஊக்கப்படுத்தியதன் விளைவாக அறிவார்ந்த தமிழ்ச் சமூகத்தின் இருப்பு வெளிக்கொணரப்பட்டது. மேலும் இதன் மூலம் ஆங்காங்கே தொடர்பு இல்லாமல் இருக்கும் தமிழர்களுக்கு தமிழரின் இருப்பு தொடர்பான செய்திகள் பரவியது, இதன் பலனாகச் செயற்பாட்டு ஆர்வமுள்ளோர் ஒருவருக்கொருவர் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டனர். இதனுடே முனைவர் பட்ட மாணவர்கள் மற்றும் தொழிலகங்களில் பணியாற்றும் நமது மக்களின் மன அழுத்தங்கள் மற்றும் தொடர்பான இடர்களுக்குத் தகுந்த மூத்தோர்களின் உதவி மற்றும் கருத்துரைகள் கிடைக்கப்பெற்று தீர்வு கிடைப்பது எளிதானது. அடுத்தபடியாக மக்களுக்கு வாழ்வியல் தகவல்களான கல்வி, குழந்தைப்பேறு, வங்கி நடைமுறைகள், மருத்துவம், குடிவரவு வழிமுறைகள், மக்களுக்கு ஊரிலிருந்து தேவைப்படும் முக்கியப் பொருட்கள், ஆவணங்கள் எடுத்துவருவதற்கு உதவுதல் மற்றும் பயண உதவி போன்ற செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது.
 

தொடர்ந்த செயற்பாட்டினால், இன்றியமையா முன்னெடுப்பாக, தமிழர் அடையாளத்தை உலகிற்கு எடுத்துக்காட்டும் தமிழர் திருநாள் பொங்கல் கூடுதல்கள் பெரிய அளவில் கொரியா முழுதும் வாழும் தமிழர்களை ஒருங்கிணைத்து கொரிய மண்ணில் முதன்முதலாக 2016 முதல் ஒருங்கிணைக்கப்பட்டு மேலும் இந்தச் செயற்பாட்டுத்தளம் விரிவுபடுத்தப்பட்டது. குறிப்பாக, தை மாதம் நிலவும் கடும் குளிர் உள்ளிட்ட காலநிலை மற்றும் தொடர்பான போக்குவரத்து இடர்பாடுகள், பொங்கல் வைத்தல், கரும்பு கொணர்தல் மற்றும் தமிழர் உணவு பரிமாறுதல் போன்ற கடின அறைகூவல் விடும் கூறுகள் உரிய திட்டமிடுதலுடன் கையாளப்பட்டு தமிழர் திருநாள் தொடர்ந்து சிறப்பாக நடைபெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டது. இம்முறை நடைபெற்ற தமிழர் திருநாள் 2020 (கொரிய பொங்கல் -2020) கொரியாவின் நடுப்பகுதியில் ஆட்சிக்குரிய சுஞ்சியங்புக்தோ மாகாண அரசின் உதவியுடன் நடைபெற்றது. இவ்விடயம் இதுகாறும் சங்கம் எடுத்த உறுதியான செயற்பாடுகளின் பெறுமதியை தமிழ்கூறும் நல்லுலகிற்கு எடுத்துக்காட்டுகிறதென்றால் அது மிகையாது. அதே நேரத்தில் அறிவுத்தளத்தில் தமிழர்களை இனைக்கும்பொருட்டு 2016 முதல் தமிழ் கலை இலக்கிய சநதிப்பு கூடுதல்களை ஒருங்கிணைத்து தமிழரின் எழுத்து கலையார்வம் ஆகியவற்றை வெளிக்கொணர்ந்து கல்வி, பணி உள்ளிட்ட பல்வேறு தளங்களில் சாதிக்கும் தமிழர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த நிகழ்வுகளில் திரு ஒரிசா பாலு போன்ற தமிழர் தொன்மை ஆய்வாளர்கள் மற்றும் பொது தலைவர்கள் அழைத்துவரப்பட்டு தமிழுக்கு சேவையாற்றியோர் குறித்த நினைவு சொற்பொழிவுகளும் நடத்தப்டுகிறது. இங்கு கணினித்தமிழ் வேந்தர் மா. ஆண்டோ பீட்டர் குறித்த சொற்பொழிவை திரு. ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் நிகழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கொரியாவாழ் தமிழர்களுக்கும் தாய்த் தமிழ்நாட்டிற்கும் உறவுகளை ஏற்படுத்தும் வண்ணம் மேற்சொன்ன கூடுதல்களுக்கு பொதுவாழ்வில் இருக்கும் தலைவர்கள், மூத்த ஊடகவியலாளர்கள் மற்றும் எழுத்தாளர்களிடமிருந்து வாழ்த்துகள் பெறப்பட்டு நிகழ்வுகள் ஊடக குறிப்புகளும் நடுநிரோட்ட ஊடகங்களில் வெளிவர ஆவண செய்யயப்படுகிறது.
 

கொரிய சட்ட நடைமுறைப்படி குழு அமைத்து சட்டத்திட்டம் எழுதி பொது விவாதத்திற்கு வைத்து, அதனைப் பொது வெளியில் தொடர்பாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றி, அதன்பேரில் ஆளுமைக்குழு தேர்ந்தெடுக்க்கப்பட்டு சங்கம் 2019 முதல் முழு செயற்பாட்டுக்கு வந்தது. சட்டத்திட்ட வரைவை எமது செயளாலர் முனைவர் கு. இராமன் தலைமையிலான குழு இயற்றியது. குறிப்பாக இங்குள்ள நமது இந்தியத் தூதரகத்தில் சட்டத்திட வரைவு கொடுக்கப்பட்டு அறிவுரை பெறப்பட்டது. தூதரகம் சங்கத்தின் வேண்டுகோளை (தமிழ்நாடு அரசு வெளியிட்ட கொரிய மொழியிலான திருக்குறள் புத்தகத்தை இங்கு வெளியிடுவது உள்ளிட்ட) பரிசீலித்து உதவுகிறது என்பது இங்கு நன்றியுடன் குறிப்பிடத்தக்கது. இறுதியாகப் சங்க பதிவிற்காக இரண்டாண்டுகால ஆவண வேலைகள், சட்டப்படியான தேவைப்பாடுகள் நிறைவு பெற Bio CS Chungcheongbuk-do Korea நிறுவனத்தின் உரிமையாளர்களும் சங்கத்தின் புரவலர்களுமான திரு. Ryu Jae Hyung மற்றும் திருமதி. Kim Eun Seok மற்றும் ANC Tech Sunchon நிறுவனத்தின் முதன்மைப் பணிப்பாளர் திரு சாங் தோ சன் ஆகியோர் உதவி புரிந்தனர்.


நிறைவுரை!
 

மேற்சொன்ன முயற்சிகளின் பலனாக திருவள்ளுவர் ஆண்டு 2051, 16 மாசி வெள்ளிக்கிழமை (28 பிப்ரவரி) சமகாலத்தில் 1990 முதல் கொரியாவையறிந்த தமிழ் மக்களின் வரலாற்று கனவான சட்டப்படியாக கொரியா அரசில் பதிவு செய்யப்பட்ட கொரிய தமிழ்ச் சங்க உருவாக்கம் நனவாகியது. பூமிப்பந்தில் தமிழ்நாடு கடைப்பிடித்த அரசியல், சமூக மற்றும் பொருளாதார கொள்கையின் விளைவால் அறிவியல் விஞ்ஞானிகளாலும் மற்றும் உயர் தொழில்நுட்பவியலாளர்களாலும் உருவான படித்த எளிய மக்களின் பிள்ளைகளால் அமைக்கப்பெற்ற கொரிய தமிழ்ச் சங்கம் தமிழரின் நல்லியல்புகளையும் பண்பாட்டையும் இவ்வுலகிற்கு அறியச்செய்து தமிழ்கூறும் நல்லுலகிற்குத் தொடர்ந்து பெருமை சேர்க்கும். தமிழ்நாட்டின் கடைநிலை குடும்பங்களிலிருந்து கொரியாவிற்கு வந்து உயர் கல்வி/அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி/உயர் தொழில்நுட்ப வேலை போன்ற பணிகளில் ஈடுபட்டிருக்கும் தமிழ்நாட்டின் சமுக-அரசியல் மற்றும் பொருண்மிய வளர்ச்சியின் அடையாமளாகத் திகழும் இளைஞர்களால் முற்றுமுழுதாக கட்டமைக்கப்பட்டது என்ற சிறப்பு உலகில் கொரிய தமிழ்ச் சங்கத்திற்கே உண்டு என்றால் அது மிகையாகைது. சங்கத்தின் அடிப்படை கட்டமைப்பு வேலையை முன்னின்று செய்த அறிவியலாளர் சங்கத்தின் முதல் தலைவராகத் தேர்ந்துடுக்கப்பட்டு பணி செய்யும் வாய்ப்ப்பும் வேறு எங்கும் எளிதில் கணக்கிடைக்காத ஒரு நிகழ்வு. எனவே, இயல்பிலே கொரிய தமிழ்ச் சங்கத்தின் செயல்பாடும் பொதுக்கோரிக்கைகளும் அறிவுத்தளம் எங்கும் விரிகிறது.
 

http://onelink.to/nknapp


எமது சங்கம் இங்குள்ள கொரியா மக்களிடம் இணைந்து தமிழர்-கொரிய உறவுகள் குறித்த கருத்தரங்குகளை நடத்துதல் போன்ற பணிகளைச் செய்கிறது. குறிப்பாக இங்குள்ள கொரியா மக்களின் கருத்துகளை உள்வாங்கி அவர்கள் உதவியுடனும் சங்கம் அமைக்கப்பெற்று நடைபெறுகிறது. குறிப்பாக கொரிய மக்கள் சங்கத்தின் புரவலர்களாக இருந்து அலுவலகம் அமைக்க கட்டணமிற்றி இடம் வழங்குதல் போன்ற பெரிய உதவிகளைச் செய்கின்றனர்.மேலும் இவ்வாண்டு தமிழக அரசால் நடத்தப்படும் உலக தமிழ்ச்சங்க நிகழ்வில் கொரிய தமிழ்ச் சங்கத்தை உறுப்பினராகச் சேர்த்து ஊக்கப்படுத்தியது என்பது உள்ளார்ந்த நன்றியுடன் பதிவு செய்யத்தக்கது. இதுகாறும் தமிழ்நாடு அரசிற்கும், தமிழ் வளர்ச்சித்துறைக்கும், மதுரை உலக தமிழ்ச்சங்கத்திற்க்கும் எமது நன்றிகளை உரித்தாக்குகிறோம். கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் கொரியா திறம்படச் செயற்பட்டு வருவதால் விரைவில் விரிவான பொது ஏற்பாடுகளுடன் கொரியா தமிழ்ச் சங்கத்தின் தொடக்க விழா தமிழ் கூறும் நல்லுலகின் வாழ்த்துகளுடன் நடைபெறுமென்றால் அது மிகையாகாது.

 

 

 

 

Next Story

1857 கி.மீ. சைக்கிள் ஓட்டும் போட்டியில் வென்ற கொரியத் தமிழர்

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
Korean Tamil wins cycling competition

உலகம் முழுவதும் தமிழர்கள் வேலைக்கு சென்றிருக்கிறார்கள். ஆனால், பணிபுரியும் நாட்டில் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்து, சாதனை புரிபவர்கள் மிகவும் சிலரே இருக்கிறார்கள். அப்படி பல துறைகளிலும் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் சாதனை புரிந்த தமிழர்களைக் கவுரவிக்க, தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் விழா நடத்தி விருது வழங்குகிறது.

2023 ஆம் ஆண்டுக்கான அயலகத் தமிழர் விருது வழங்கும் விழா 2024 ஜனவரியில், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது.  மூன்றாம் ஆண்டாக நடைபெற்ற இந்த அயலகத் தமிழர் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அறிவியல், தொழில், சமூக சேவை, விளையாட்டு என 8 பிரிவுகளின் கீழ் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்ட 14 அயலகத் தமிழர்களுக்கு விருதுகளை வழங்கினார். இதில் 58 நாடுகளில் இருந்து தமிழ் வம்சாவளியினர், அமைச்சர்கள், கல்வியாளர்கள், கவிஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 218 உலகத் தமிழ்ச் சங்கங்களைச் சேர்ந்த அயலகத் தமிழர்கள் பங்கேற்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விருதுபெற்ற 14 அயலகத் தமிழர்களில், அவர்களில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகேயுள்ள குதிரைகுத்தி கிராமத்தைச் சேர்ந்த முனைவர் குருசாமி ராமன் தனித்த சிறப்புடையவர். இவருக்கு விளையாட்டில் சாதனை புரிந்த தமிழர் பிரிவில், தமிழ்நாடு அரசின் கணியன் பூங்குன்றனார் விருது, தங்கப் பதக்கத்துடன் பாராட்டுப் பத்திரமும் வழங்கப்பட்டது.

Korean Tamil wins cycling competition

முனைவர் குருசாமி ராமன், கொரியாவில் 1857 கிலோமீட்டர் தூரமுள்ள சைக்ளிங் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் வெற்றிபெற்ற முதல் இந்தியத் தமிழர் என்ற பெருமையைப் பெற்றவர். இதன்மூலம், தமிழ்நாட்டுக்கும், கொரியாவில் வசிக்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.குதிரை குத்தி கிராமத்தைச் சேர்ந்த குருசாமி – மாரியம்மாள் தம்பதியின் மகனாக, பின்தங்கிய கிராமத்தில் பிறந்த முனைவர் ராமன் தென் கொரியாவில் உள்ள யெங்ணம் பல்கலைக்கழகத்தில் ஜினோமிக்ஸ் பிரிவில் ஆராய்ச்சியாளராகவும் உதவி பேராசிரியராகவும் தென் கொரியாவில் உள்ள யெங்ணம் பல்கலையில் கடந்த பத்து வருடங்களாக பணிபுரிகிறார். முனைவர் ராமன், மனைவி பொன் அருணா மற்றும் மகள் அதிராவுடன் தென் கொரியாவில் வசித்து வருகிறார்.

Next Story

கொரிய பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த பாஜக பிரமுகர்; ஆஸ்திரேலியா நீதிமன்றம் அதிரடி! 

Published on 26/04/2023 | Edited on 26/04/2023

 

australia overseas friends of the bjp leader balesh dhankhar related court judgement

 

ஆஸ்திரேலியாவில் உள்ள  சிட்னியில் வசித்து வரும் இந்திய வம்சாவளி தொழிலதிபர் பாலேஷ் தன்கர். பாஜக பிரமுகரான இவர்  'ஓவர்சீஸ் பிரண்ட்ஸ் ஆஃப் தி  பி.ஜே.பி' எனும் பாஜகவின் வெளிநாட்டு உறுப்பினர்களுக்காக அமைப்பை உருவாக்கி அதன் தலைவராகச் செயல்பட்டு வந்தவர். இந்நிலையில் பாலேஷ் தன்கர் வீட்டில் கடந்த 2018ம் ஆண்டு போலீசார் திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரது வீட்டில் பல பெண்களை பாலேஷ் தன்கர் பாலியல் வன்கொடுமை செய்து பதிவு செய்து வைத்திருந்த வீடியோக்களை போலீசார் கைப்பற்றினர். அந்த வீடியோவில் இருந்த பெண்களில் சிலர் சுயநினைவில்லாமல்  போதையில் இருந்துள்ளனர். அந்த விடீயோக்களில் இருந்தவர்களில் பெரும்பாலும் கொரிய நாட்டைச் சேர்ந்த  பெண்களாக இருக்கும் என போலீசார் கருதினர். இது மட்டுமின்றி பாலேஷ் தன்கர் மீது ஐந்து பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து தாக்கியதாக ம குற்றம் சாட்டப்பட்டது.

 

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு  இவ்வழக்கு சிட்னி நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில்  தற்போது அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட பாலேஷ் தன்கர் போதைப் பொருட்களை பயன்படுத்தி அதன் மூலம் பெண்களை பாலியல் கொடுமை செய்துள்ளார். இணையதளம் மூலம் பெண்களை வீட்டிற்கு வரவழைத்து  தனிமையில் இருந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில்  5 கொரிய பெண்களை தாக்கியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு வேலை தேடி வரும் கொரிய பெண்களை தன்னுடைய பாலியல் இசைக்கும் பயன்படுத்தி வந்துள்ளார். மேலும் பெண்களுக்கு மது அல்லது ஐஸ் கிரீமில்  மயக்க மருந்து கலந்து கொடுத்து தனது பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

 

இது குறித்து இவரிடம் தட்டிக்கேட்ட பெண்களை தாக்கியுள்ளார். மேலும் தனது படுக்கை அறையில் உள்ள கடிகாரத்தில் மறைத்து வைத்திருந்த ரகசிய கேமரா மூலம் பெண்களுடன் தனிமையில் இருக்கும் காட்சிகளையும், தன்னுடன் ஒத்துழைக்காத பெண்களை தாக்கும் காட்சிகளையும் அந்த கேமிரா மூலம் பதிவு செய்துள்ளார். இதன் பதிவுகளை போலீசார் கைப்பற்றியதன் அடிப்படையில் பாலேஷ் தன்கர் குற்றவாளி என்பது உறுதியாகி உள்ளது. மேலும் அவருக்கான தண்டனை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.