Skip to main content

துப்புறவு பணியாளர் திறந்து வைத்த நவீன ஸ்மார்ட் கிளாஸ்! அசத்தும் அரசு பள்ளி!

Published on 23/07/2018 | Edited on 23/07/2018


 

முகநூல் நண்பர்கள் உதவியுடன் அரசு பள்ளியில் குளிர்சாதன வசதியுடனான ஸ்மார்ட் வகுப்பறை, துப்புரவு பணியாளரை கொண்டு தொடங்கிய அரசு பள்ளி ஆசிரியர்! 
 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒரு குக்கிராமம் கீழப்பாலையூர். இக்கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 

 

 

 

இந்த அரசு பள்ளியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக பணிபுரிந்தவர் ஆசிரியர் வசந்தன். அங்கு பணியாற்றியபோது அவரது முயற்சியால் நவீன  நூலகம், நவீன கழிப்பறை, ஸ்மார்ட் கிளாஸ் என  தனியார் பள்ளிகளுக்கு நிகராக தரம் உயர்த்தப்பட்டது. அவ்வாறு அவர் எடுத்து கொண்ட முயற்சியின் மூலம் ஜப்பானிலுள்ள முழுமதி அறக்கட்டளை மூலம் ஒரு லட்சமும், முகநூல் நண்பர் நாகராஜன் மூலம் 65 ஆயிரம் நிதியையும் சேர்த்து 1.65 ஆயிரத்தை அரசின் தன்னிறைவு திட்டத்தின்  மூலம், ஒன்றுக்கு மூன்று மடங்காக்கி 5 லட்சமாக ஆக்கினார் வசந்தன். 
 

இதனிடையே கடந்தாண்டு அருகிலுள்ள சி.கீரனூர் அரசு பள்ளிக்கு மாறுதல் செய்யப்பட்டார். ஆனாலும் தான் சேமித்த நிதி மூலம் கீழப்பாலையூர் பள்ளியில் தொடங்கிவைக்கப்பட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று தற்போது முழுமையடைந்தது. இந்நிலையில்  நவீன குளீருட்டப்பட்ட கணினி அறை, இணையதள வசதியுடன் கொண்ட 24 கணினிகள், அவற்றுக்கு தேவையான மேசை, நாற்காலிகளை வாங்கி, நவீன கணினி ஆய்வகத்தை உருவாகியது. 
 

அவ்வாறு உருவாக்கப்பட்ட கணினி ஆய்வகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. கடந்த 20 வருடங்களாக அப்பள்ளியின் வளாகத்தை சுத்தம் செய்தல், மாணவர்களுக்கு தண்ணீர் கொண்டு வருதல், ஒரு சில இரவு நேரங்களில் பள்ளியை பாதுகாக்கும் துப்புரவு பணியாளராகவும் பணியாற்றும் கோசலை அம்மாவின் கைகளால் ரிப்பன் வெட்டி நவீன கணினி ஆய்வகம் திறந்து வைக்கப்பட்டது. 

 

 

 

இதுகுறித்து கோசலை அம்மாளிடம் கேட்டதற்கு,
 

" கடந்த 20-வது வருசத்துக்கும் மேலாக இந்த பள்ளிகொடத்துல வகுப்பறை, வளாகத்தை சுத்தம் பன்றேன். படிக்கிற பசங்களுக்கு தண்ணீர் கொண்டு வருவேன். ஒரு சில இரவு நேரங்களில் பாதுகாப்புக்காக பள்ளிக்கொடத்துலேயே படுத்து கொள்வேன். எனக்கு கம்பூட்டர்னா என்னான்னு தெரியாது. அதுபத்தி அறியாத என்னை கூப்புட்டு கம்பூட்டர் ரூமை திறந்து வைக்க சொன்ன ஆசிரியர்களுக்கு நன்றி. நான் செய்யும் இந்த துப்புரவு பணியாளர் சேவைக்கு அரசானது ஆண்டு சம்பளமாக   1400 தான் தருகிறது. இதை வச்சிகிட்டு ஏதோ காலத்தை ஓட்றேன் என்றார்.
 

ஆசிரியர் வசந்தன் நம்மிடம், "கடந்த 2008ஆம் ஆண்டிலிருந்து இருந்து இப்பள்ளியில் பணிபுரிந்து வருகிறேன். பள்ளி மாணவ, மாணவிகளை பார்க்கும்போது அவர்கள்  உடுத்திய உடைகள், பள்ளியில் உள்ள போதிய வசதிகள் இல்லாதது போன்ற பல்வேறு காரணங்கள் என்னை வருந்த செய்தது. இதை மாற்ற வேண்டும் என்று முதல் முறையாக முயற்சி எடுத்ததும் எனக்கு கை கொடுத்தது எனது பள்ளி பருவ மாணவர்கள் மற்றும் முகநூல் நண்பர்கள் தான். 
 

அவர்கள் கொடுத்த நம்பிக்கையில் தான் நவீன கழிப்பறை, அனைத்து மாணவர்களுக்கும் சீருடை, வசதி குறைவாக இருக்கும் மாணவர்களுக்கு கல்வி செலவு உள்ளிட்டவைகளை செய்து வருகிறேன். கடந்த 2011 -ஆம் ஆண்டு வரை தொடக்கப்பள்ளியாக இருந்த இப்பள்ளி நடுநிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இது எனக்கு மேலும் நம்பிக்கை ஊட்டியது. 

 

 

 

பின்னர் முழுமதி அறக்கட்டளை சார்பாகவும், முகநூல் நண்பர் நாகராஜன் சார்பாகவும் கொடுக்கப்பட்ட 1.65 லட்சத்தை, அரசின் தன்னிறைவு திட்டத்தில் மூலம் ஒன்றுக்கு மூண்றாக்கி, 5 லட்சம் மதிப்பிலான நவீன குளிரூட்டப்பட்ட கணினி அறையை உருவாக்கியுள்ளேன். இந்த அறையை கடந்த 20 வருடங்களாக இப்பள்ளிக்காக உழைத்த துப்பரவு பணியாளர் கோசலை அம்மாளை கவுரப்படுத்தும் வகையில் அவரது கைகலால் திறந்தோம்" என்றார். 
 

மேலும் "இதுவரை பல்வேறு தொண்டு நிறுவனங்கள், முகநூல் நண்பர்கள் மூலமாக இப்பள்ளிக்கு சுமார் 15 லட்சம் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம் என்றும் வசந்தன் கூறினார்.
 

இந்நிகழ்வின்போது அதே ஊரை சேர்ந்த கணவனை இழந்து, மகன்களால் கைவிடப்பட்டு, அரசாங்க கட்டிடத்தில் வசித்து வந்த ஜானகி அம்மாளுக்கு முகநூல் நண்பர்கள் மூலம் பணம் திரட்டி 70,000 ஆயிரம் மதிப்பிலான வீடு கட்டி கொடுத்து அதுவும் திறந்து வைக்கப்பட்டது.

  
அரசு பள்ளியையும் தனியார் பள்ளிக்கு நிகராக மாற்ற பாடுபடும் ஆசிரியர் வசந்தன் போன்றோரின் சேவைகள் தொடர வேண்டும் என்று பொதுமக்கள் பாரட்டினர்.