தமிழ்நாடு - ஆந்திர எல்லையான ஆரம்பாக்கம் அடுத்த எளாவூர் சோதனைச்சாவடி வழியே ஆந்திராவில் இருந்து காரில் அதிகளவில் சென்னைக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக ஆவடி காவல் ஆணையரக திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அதன்படி போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் ஒன்றை மடக்கி சோதனை மேற்கொண்டனர். அதில் பண்டல் பண்டலாக கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து ஆந்திராவில் இருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட 40 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசார், அதனைக் கடத்தி வந்த ஒடிசாவைச் சேர்ந்த சந்தோஷ் நாய்க், கேரளாவை சேர்ந்த மித்தில்லா, கும்பகோணத்தை சேர்ந்த பாக்கியலட்சுமி ஆகிய மூவரையும் கைது செய்தனர். அதன்பின்பு அவர்கள் கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.