Skip to main content

"ஜெயலலிதா அமாவாசைக்கு அமாவாசை அமைச்சரை மாத்துனாங்களே யாராவது கேள்வி கேட்டாங்களா; திமுகன்னா தாண்டி குதிக்கிறீங்க..." - கோவி.லெனின் கேள்வி

Published on 15/12/2022 | Edited on 15/12/2022

 

gh

 

தமிழக அமைச்சரவையில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இவரின் இந்த அமைச்சரவை நுழைவை எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். குறிப்பாக எடப்பாடி பழனிசாமி அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில் இதுதொடர்பாக இலங்கைத் தமிழர் உரிமை மீட்புக்குழுவின் உறுப்பினர் கோவி.லெனின் அவர்களிடம் நாம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 

 

திமுகவில் மிக நீண்ட காலமாக உதயநிதி அமைச்சராவார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது பெரிய எதிர்பார்ப்புகளோடு அவர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். அவரின் இந்த வருகையை எப்படிப் பார்க்கிறீர்கள், திமுகவில் உதயநிதிக்கு எந்த மாதிரியான வரவேற்பு இருக்கிறது?

 

உதயநிதிக்குக் கட்சியில் வரவேற்பு என்பது எப்போதும் போல் நன்றாக இருக்கிறது. அவர் நாடாளுமன்ற பிரச்சாரத்துக்கு வந்து அனைத்து இடங்களுக்குச் சென்று பிரச்சாரம் செய்தார். அதில் கிடைத்த வெற்றியின் அடிப்படையில் அவருக்கு திமுக இளைஞரணி செயலாளர் பதவி தரப்பட்டது. அதன்பிறகு சட்டமன்ற தேர்தலின் போது அவர் செய்த கடுமையான பிரச்சாரம், அதனால் அவருக்குக் கிடைத்த ஆதரவு என அனைத்தையும் நாம் பார்த்தோம். குறிப்பாக ஒற்றை செங்கல்லை வைத்து அவர் அடித்து ஆடினார். எனவே கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களைக் கடந்து அனைத்துத் தரப்பு மக்களிடமும் அவருக்குச் செல்வாக்கு இருக்கிறது. எனவே அவர் பதவியேற்புக்குப் பிறகு அந்தத் துறையில் புதுப்புது திட்டங்கள் வருவதற்கு இது வாய்ப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். 

 

பாஜக தமிழகத்தில் வளர்ந்து வருவதாகச் சொல்கிறார்கள், இந்த நிலையில் உதயநிதியின் பதவியேற்பை வலதுசாரிகள் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள், குறிப்பாக அவரது தந்தையே பல ஆண்டுகள் அமைச்சராக வருவதற்குக் காத்திருந்த நிலையில் உதயநிதி வலுக்கட்டாயமாக வந்திருப்பதாக சில திராவிட இயக்க ஆதரவு நிலைப்பாடு உடையவர்களே கூறுகிறார்களே? அதைப்பற்றி என்ன நினைக்கிறார்கள்?

 

எந்த திராவிட இயக்கம் சொல்லியிருக்கிறார்கள், தமிழகத்தில் இருக்கின்ற எந்த திராவிட இயக்கமும் அப்படிக் கூறவில்லை. திமுகவை எப்போதும் குறை சொல்லுபவர்கள் அதனைத் தொடர்ந்து கூறிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் வெறும் வாயையே மென்றுகொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு அவலே தேவையில்லை. அந்த மாதிரியான நபர்கள் இதனைத் தொடர்ந்து குறை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். முதலில் உங்களுடைய முதல் கேள்விக்கு வருகிறேன். தமிழகத்தில் பாஜக வளர்ந்திருப்பதற்கு எந்த அளவுகோலை வைத்துள்ளீர்கள்.  ஆளாளுக்கு தினமும் எதையோ உருட்டிக்கொண்டு இருப்பதால் அவர்கள் தொலைக்காட்சிகளில் செய்திகள் வாயிலாக வருகிறார்கள். இதைத்தவிர அவர்கள் அதிகாரப்பூர்வமாக வாக்கு வங்கி உயர்ந்துள்ளது என்று எந்த ஆதாரமாவது உங்களிடம் இருந்தால் கொடுங்கள். நாங்கள் பாஜக வளர்கிறது என்று ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் அப்படி எந்த நிரூபிக்கப்பட்ட ஆதாரமும் இல்லை.

 

உதயநிதி சட்டமன்ற உறுப்பினர், அவரை அமைச்சராக்குவது என்பது முதல்வரின் தனிப்பட்ட முடிவு. அதில் இவர்களுக்கு என்ன பிரச்சனை இருக்கிறது. ஜெயலலிதா அமாவாசைக்கு அமாவாசை அமைச்சர்களை மாற்றினார். யாராவது ஒருத்தராவது ஏன் என்று கேட்டார்களா? திமுக என்றதுமே ஆயிரம் கேள்வி கேட்கிறீர்கள். ஜனநாயகத்துக்கு விரோதமாக ஜெயலலிதா செய்தால் இரும்பு பெண்மணி என்பார்கள், ஆனால் ஜனநாயகப்பூர்வமாக சட்டமன்ற உறுப்பினராக உள்ள ஒருவரை அமைச்சராக்கினால் அதில் குற்றம் சொல்வார்கள். அவர் துறையில் ஏதாவது குறை இருந்ததை கண்டுபிடித்து அவரை விமர்சனம் செய்தால் அதை அரசியல் ரீதியான செயல்பாடு என்று கூட எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அவர் வருவதே தவறு என்று கூறுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். 

 

உதயநிதி அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில் அவரைப் பற்றிய விமர்சனங்கள் தொடர்ந்து எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக பாஜக, அதிமுக தலைவர்கள் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். இதற்கிடையே ஆத்தூர் பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி உதயநிதி அமைச்சராகப் பொறுப்பேற்றதைக் கடுமையாக விமர்சனம் செய்து பேசியுள்ளார். குறிப்பாகக் கலைஞருக்குப் பிறகு ஸ்டாலின், அவருக்குப் பிறகு உதயநிதி என்று முடிசூட்டு விழா நடைபெற்று முடிந்திருக்கிறது என்று கூறியுள்ளார். இவர் அமைச்சராகப் பொறுப்பேற்றதற்குப் பிறகு தமிழகத்தில் பாலாறும், தேனாறுமா ஓடப்போகிறது என்று பேசியிருந்தார். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

 

இவர் நான்கு வருடம் ஆட்சியிலிருந்தாரே அப்போது தமிழகத்தில் என்ன பாலாறும், தேனாறும், மஞ்சள் ஆறுமா ஓடுச்சு, அதைவிட இந்த ஆட்சி நல்லாதானே இருக்கிறது. அவர் ஆட்சியில் வெள்ளம்தான் தெருவில் ஓடுச்சு, இப்போது அதுவும் கூட ஓடவில்லை. வாரிசு அரசியலைப் பற்றிப் பேசுகிறார்கள், கலைஞர் அவருடைய மகன் ஸ்டாலின் என்று தொடர்ந்து கூறுகிறார்கள், அது உண்மைதான், உலகத்துக்கே தெரிந்த ஒன்று கலைஞர், ஸ்டாலின், உதயநிதி எல்லோரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் நான் மறுக்கவில்லை. 

 

எம்ஜிஆர் அதிமுகவை உருவாக்கியபோது ஜெயலலிதா அந்த கட்சியிலிருந்தாரா? இல்லை, 77ல் ஆட்சியைப் பிடிக்கும்போது அந்த கட்சியில் அவர் இருந்தாரா? இல்லை 80ல் இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கின்றபோது அந்த கட்சியில் அவர் இருந்தாரா? மூன்றாவது முறையாக 84ல் ஆட்சியை பிடிப்பதற்குள் அவர் எப்படி நாடாளுமன்ற உறுப்பினராக மாறி, கட்சியில் பெரிய பதவிகளைப் பெற்றார். 81ல் கட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளில் பதவிக்கு வருவதற்குப் பெயர் என்ன என்று சொல்லச் சொல்லுங்கள். அவர்கள் வாரிசு என்று பேசுவதற்கே தகுதியில்லாதவர்கள்.