Skip to main content

“கவிதையை படித்துவிட்டு வைரமுத்துவுக்கு போன் செய்த கலைஞர்” - நக்கீரன் ஆசிரியர்

Published on 03/07/2023 | Edited on 03/07/2023

 

“The Kalaignar who called Vairamuthu after reading the poem” - Nakkheeran Editor

 

மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞரின் 100வது பிறந்தநாள் இந்த ஆண்டு முழுவதும் கொண்டாடப்படும் என முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதனையொட்டி தமிழகம் முழுவதும் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அம்பத்தூர் கிழக்கு பகுதி கொரட்டூர் - சுவாதி மஹாலில் அமைச்சர் சேகர்பாபு கலைஞர் நூற்றாண்டு விழாவை ஏற்பாடு செய்திருந்தார். அந்த விழாவில்  நக்கீரன் ஆசிரியர், நடிகர் நாசர், பேராசிரியர் அருணன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.

 

அதில் பேசிய நக்கீரன் ஆசிரியர், “1991 ஆம் ஆண்டு ஜனவரி 30 அன்று விடுதலை புலிகளுக்கு ஆதரவாக கலைஞர் செயல்படுகிறார் என்று அன்றைக்கு இருந்த ஜனாதிபதி வெங்கட்ராமன் மூலம் கலைஞரின் ஆட்சி இரவோடு இரவாக கலைக்கப்படுகிறது. அந்த ஆட்சி கலைக்கப்பட்டதை அடுத்து அதை கண்டித்து கவிஞர் வைரமுத்து கவிதை ஒன்று எழுதினார். அந்த கவிதையும் அடுத்த நாள் நாளிதழில் வருகிறது. கலைஞர் அந்த நாளிதழில் உள்ள கவிதையை படித்து வைரமுத்துவுக்கு தொலைபேசியில் அழைக்கிறார். கலைஞர் வைரமுத்துவிடம், ‘ஆட்சி கலைக்கப்பட்டதில் எனக்கு மிகப்பெரிய லாபம் இருக்கிறது’ என்று கூறியிருக்கிறார். ஏன் என்று கேட்ட வைரமுத்துவிடம் கலைஞர், ‘ஆட்சி கலைக்கப்படாமல் இருந்தால் இப்படி ஒரு கவிதை கிடைத்திருக்குமா’ என்று கூறியிருக்கிறார்.

 

அதே போன்று 2001 ஆம் ஆண்டு ஜூன் 30 அன்று இரவோடு இரவாக கலைஞரை கைது செய்த சம்பவம் அன்றைக்கு தமிழகத்தையே உலுக்கியது. அப்போது தான் டி.ஆர்.பாலுவின் ஆக்ரோஷமான கோபத்தை நேரில் இருந்து பார்த்தேன். தன்னுடைய தலைவனை கைது செய்தவுடன் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தின் வாயில் கதவுகளை தன்னுடைய வண்டியை வைத்து இடித்து கோபத்தை வெளிக்காட்டினார். இந்த மாதிரியான தொண்டன் இருப்பதால் தான் இந்த கட்சி இன்னமும் உரமோடு இருக்கிறது. இந்த மாதிரியான தலைமையில் இருக்கும் உழைப்பை கண்டு தான் மோடி, ஆளுநர் போன்றவர்கள் திமுகவை பார்த்து பயப்படுகிறார்கள்.

 

கலைஞரை கைது செய்த அன்று இரவு முதல் அடுத்த நாள் காலை வரை பரபரப்பாக இருக்கிறது. அதில் கைது செய்யப்பட்ட முரசொலி மாறன் வேப்பேரி காவல் நிலையத்தில் இருந்தார். அங்கு ஏற்பட்ட காயத்தை அடுத்து அவர் படுத்த படுக்கையாக இருந்து விட்டார். அப்போது நீதிபதி அசோக் குமார் வீட்டிலிருந்து கைது செய்யப்பட்டு கலைஞர் வெளியே வருகிறார். அந்த நேரத்தில் என்னுடைய தம்பி ஒரு துண்டுசீட்டை கலைஞர் கையில் கொடுத்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டார். துண்டுசீட்டை தனது கையில் வாங்கிய கலைஞர், ‘அநீதி வீழும் அறம் வெல்லும்’ என்று எழுதுகிறார். கைது செய்ததை அடுத்து டி.ஆர்.பாலு, முரசொலி மாறன் உள்பட அனைவரும் பரபரப்பாக இருந்த போதும் கூட ஒரு மனிதன் இந்த அளவுக்கு திண்மையோடு இருந்திருக்கிறார் என்பதற்கு இதெல்லாம் ஒரு உதாரணம்.

 

கலைஞர் நகைச்சுவையில் எப்படி திறமையோடு இருந்தாரோ அதே போல் யார் எந்த மாதிரியான கேள்விகளை கேட்டாலும் அதற்கான பதிலை தருவார். இது போன்று கேள்விக்கு பதிலளிக்கும் மிகப் பெரிய தலைவர் என்றால், நான் பார்த்த வரையில் கலைஞர் ஒருவர் தான். 1990 ஆம் ஆண்டு அன்று பத்திரிகையாளர் ஒருவர் கலைஞரிடம், அதிமுக துவங்கப்பட்டதை பற்றி கேள்வி கேட்கிறார். அதற்கு கலைஞர், ‘தமிழில் ஒரு மரபு உண்டு. வார்த்தைகளின் முன்பு ‘அ’ வை சேர்த்தால் அந்த வார்த்தைக்கு அர்த்தமே மாறிவிடும். உதாரணத்திற்கு சுத்தம் என்று சொல்லுக்கு முன் ‘அ’ சேர்த்தால் அசுத்தம் என்று ஆகிவிடும். அதே போல், சிங்கம் என்ற வார்த்தைக்கு முன் ‘அ’ சேர்த்தால் அசிங்கம் என்று ஆகிவிடும். இப்படி நியாயம், மங்கலம் என்ற வார்த்தைகளுக்கு முன் ‘அ’ சேர்த்தால் அதன் பொருளே மாறிவிடும். அதே போல் சுயமரியாதை, மொழிப்பற்று, பகுத்தறிவு என்ற கொள்கைகள் கொண்ட தி.மு.க.வுக்கு முன் ‘அ’ சேர்த்தால் அதுதான் அதிமுக” என்று கூறினார்.

 

அதே போல் ‘நடிகை ஜெயலலிதா அரசியல்வாதி ஜெயலலிதா ஒப்பிடுக’ என்று கேள்வி கேட்கிறார்கள். அதற்கு கலைஞர், ‘அப்பொழுதும் நடிகை, இப்பொழுதும் நடிகை, இனி எப்பொழுதும் நடிகை’ என்று பதில் அளிக்கிறார். 1996 ஆம் ஆண்டில் பத்திரிகையாளர் ஒருவர் காந்தியும் கோட்சேயும் இப்போது இந்தியாவில் இருந்தால் என்னவாகி இருக்கும் என்று கேட்கிறார். அதற்கு கலைஞர், ‘காந்தியடிகளே கோட்சேவை அழைத்து தன்னை சுட்டுக் கொல்லும்படி கேட்டிருப்பார்’ என்றார்.

 

கலைஞரிடம் கேட்கப்பட்ட சில கேள்விகளையும், அவர் அளித்த பதில்களையும் சொல்கிறேன்;

 

கேள்வி : ஏழைகளுக்கு என்ன தான் இறைவன் வழங்கியிருக்கிறார்?


கலைஞர்: ஏழைகளை வழங்கியதே இறைவன் தானே. இன்னும் என்ன வழங்க வேண்டும்.


கேள்வி: தாஜ்மஹாலுக்கும் செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கும் உள்ள ஒற்றுமை என்ன?


கலைஞர்: தாஜ்மஹாலில் ஒரு கொடி மண்ணுக்குள், இங்கே ஜார்ஜ் கோட்டையில் ஒரு கொடி விண்ணோக்கி.


கேள்வி: தாங்கள் மீண்டும் முதல்வராக வர அர்ச்சனை செய்யவா?


கலைஞர்: பல ஆண்டுகளாக என்னை சில பேர் அர்ச்சனை செய்து கொண்டு தானே இருக்கிறார்கள். அந்த அர்ச்சனைகளை தாங்குவதிலே நான் முதல்வராகத் தானே இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.