அதிமுக ஆட்சி இருப்பதாலேயே ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். ஆகியோரை அனுசரித்து அமைச்சர்களும், எம்எல்ஏக்களும், நிர்வாகிகளும் செல்கின்றனர். ஆனால் அவர்கள் இருவரையும் அதிமுக தொண்டர்கள் ஏற்கவில்லை என்றும், உண்மையான அதிமுக தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள் என்றும் தொடங்கப்பட்டதுதான் அமமுக. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுக தோல்வி அடைந்ததால் அமமுகவை அதிமுக தொண்டர்கள் ஏற்கவில்லை என்று அமமுகவில் இருந்து நிர்வாகிகள் பலர் விலகி வருகின்றனர்.
ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்கள் விரும்பும் தலைமை யார்? என்ற கேள்விக்கு நக்கீரன் இணைத்தளத்திற்கு பதில் அளித்துள்ளார் அதிமுக முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி.
''இன்றைக்கு அதிமுகவுக்கு ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்., தினகரன், சசிகலா என யாரும் தலைமை கிடையாது. யார் அந்த தலைமை என்றால், அந்த தலைமை பெயரை சொல்லி பல இடங்களில் வெற்றி பெற வேண்டும். எம்.ஜி.ஆர். பெயரை சொல்லி தமிழகம் முழுவதும் ஓட்டு கேட்டோம். ஜெயலலிதா பெயரை சொல்லி அதிமுகவினர் வாக்கு சேகரித்தனர். அதுதான் தன்னிகரற்ற தலைமை.
உடனே இவர்கள் எடப்பாடி பழனிசாமி இடைத்தேர்தலில் ஒன்பது தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை காப்பாற்றினார் என்பார்கள். இந்த ஒன்பது தொகுதிகளில் அதிமுக வெற்றி என்பது, ஆர்.கே.நகரில் தினகரன் வெற்றி பெற்றதுபோலத்தான். இப்போது ஆர்.கே.நகரில் தினகரனுக்கு என்ன வாக்கு கிடைத்தது என்பதை பாருங்கள்.
கட்சிக்குள் எல்லா முக்கியஸ்தர்களையும் அனுசரித்து, எல்லோரையும் அரவணைத்து போகிற தலைமைதான் இன்றைய தேவை அதிமுகவுக்கு. மிகப்பெரிய ஆளுமையான தலைவர் அதிமுகவை கட்டிக் காப்பாற்றுவதற்கு இன்று இல்லை. அது யதார்த்தமான சூழ்நிலை. அந்த இடத்திற்கு வருபவர்கள், ஒவ்வொரு இடத்திலேயும் ஒவ்வொரு பிரச்சனை, போட்டி, பொறாமை, விருப்பு, வெறுப்புகள் இருக்கும். நடுநிலையோட எல்லோரையும் அரவணைத்து, அனுசரித்து போகக்கூடிய ஒரு நபர் வரணும். அந்த தகுதி ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்., தினகரன், சசிகலாவுக்கு இல்லை. காலமும் தொண்டர்களும்தான் அந்த தலைமையை உருவாக்கும்.
செந்தில்பாலாஜி வந்தால் எடப்பாடி பழனிசாமி தனக்கு போட்டியாக நினைக்கிறார். அதனால் அவரை அதிமுகவுக்கு வரவிடவில்லை. கலைராஜன் வந்தால் ஜெயக்குமாருக்கு போட்டியாகும் என நினைத்து அவரை சேர்க்கவில்லை. என்னை அதிமுகவில் சேர்த்தால் கட்சியில் தனக்கான ஆதிக்கம் போய்விடும் என்று தங்கமணி, வேலுமணி நினைக்கிறார்கள். குறிப்பாக வேலுமணி நினைக்கிறார். தங்க தமிழ்செல்வன் அதிமுகவுக்கு வருவதை ஓ.பன்னீர்செல்வம் விரும்பவில்லை. மார்க்கண்டேயன் அதிமுகவுக்கு வரக்கூடாது என்று கடம்பூர் ராஜூ நினைக்கிறார். இப்படியே போனால் அதிமுக எப்படி அடுத்த தேர்தலில் வெற்றி பெறும். ஒவ்வொருவருக்கும் அந்த பகுதியில் சுயநலப்போக்கு உள்ளது. அவர்கள் நன்றாக வர வேண்டும் என்று நினைக்கிறார்களேயொழிய கட்சி நன்றாக வர வேண்டும் என்று நினைக்கவில்லை.
இவர்களின் இந்த செயல்பாடுகள் தொடர்ந்தால் கட்சி பலவீனமாகி ஆட்சி முடிந்தவுடன் கட்சி காணாமல் போய்விடும். ஆட்சிதான் தற்போது கட்சியை நடத்துகிறது. கட்சி ஆட்சியை நடத்தவில்லை. கட்சி பலமாக இருந்தால்தான் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியும்.
எம்.ஜி.ஆர். காலத்திலேயும், ஜெயலலிதா காலத்திலேயும் சில உதாரணங்களை சொல்கிறேன். ஓ.பன்னீர்செல்வத்தையும், தங்க தமிழ்செல்வனையும் ஒன்றாக ஜெயலலிதா வளர்த்து கொண்டுவரவில்லையா. எம்.ஜி.ஆர். காலத்தில் ஆம்.எம்.வி.யையும், கருப்புசாமி பாண்டியனையும், திருநாவுக்கரசரையும் வளர்த்து கொண்டுவரவில்லையா. இதுதான் எல்லோரையும் அனுசரித்து போவது. அந்த அணுகுமுறை இவர்களிடம் இல்லை''.