விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீ என்ற சிறுமியை இரண்டு நபர்கள் கை, கால்களைக் கட்டி தீவைத்து எரித்துள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அவர்கள் இருவரையும் கைது செய்துள்ள நிலையில், கைது செய்யப்பட்டவர்களை அ.தி.மு.க.வின் பொறுப்புகளில் இருந்து கட்சித் தலைமை நீக்கியுள்ளது. இந்நிலையில் இந்தக் கொலை தொடர்பாக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பேசியதாவது, "விழுப்புரம் சிறுமி ஜெயஸ்ரீயை கை, கால்களைக் கட்டிப்போட்டு பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்துள்ளார்கள். இதற்கு முன்பகையைக் காரணமாகக் கூறுகிறார்கள். அ.தி.மு.க.வைச் சேர்ந்த இருவர் இதற்குக் காரணமாக இருக்கிறார்கள். சிறுமியின் காணொளியை நம்மால் பார்க்க முடியவில்லை. பார்த்தால் தூங்க முடியவில்லை. இந்த மாதிரியான ஒரு படுகொலையைச் செய்திருக்கின்ற நபர்கள் மீது அரசு எப்படியான நடவடிக்கை எடுத்து வருகின்றது என்று நாம் பார்த்து வருகிறோம். குழந்தைகள் மீதான வன்முறை என்பது குறிப்பாக இந்த அ.தி.மு.க. ஆட்சியில் அதிகப்படியான அளவில் நடைபெற்று வருகின்றது.
தனித்தனி செய்திகளாக அன்றாடம் இத்தகைய செய்திகளை நாம் பார்த்து வருகின்றோம். பெண் குழந்தைகள் மீது நடத்தப்படுகின்ற இந்தத் தாக்குதல் என்பது நம்மைப் பதைபதைக்க வைக்கின்றது. குழந்தைகள் மீது இத்தகைய வன்கொடுமைகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறார்கள். ஆளும் அரசு அதுதொடர்பாகப் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. எல்லாம் சில நாட்களில் சரியாகிவிடும் என்று அமைதி காக்கிறார்கள். சேலத்தில் சிறுமி ராஜேஸ்வரியின் படுகொலை இப்படித்தான் நடைபெற்றது. அவரின் தாயின் முன்பே அந்தச் சிறுமியின் தலை, கொய்து எடுக்கப்பட்டது. அந்தக் கொலையையும் இவர்கள் கண்டிக்கவில்லை.
சரியான நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை. இதன் நீட்சியாகத் தற்போது இந்தச் சிறுமியும் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதே போன்று தேனி அல்லி நகரத்தில் சிறுமி ராகவி இதே போன்று கொலை செய்யப்பட்டுள்ளார். இதில் பாதிக்கப்படுகின்ற சிறுமிகளின் குடும்பங்கள் எல்லாம் மிகவும் அடித்தட்டு கிராமத்து மக்கள். சாப்பாட்டுக்கே கஷ்டப்படுபவர்கள். இப்போது நடைபெற்றிருக்கின்ற இந்த விழுப்புரம் சிறுமியின் மரணம் என்பது மிகவும் அதிர்ச்சியான அதேசமயம் கண்டிக்கத்தக்க நிகழ்வாகும். அரசு பாரபட்சமாகச் செயல்படுகின்றது. இதனை மாற்றிக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்" என்றார்.