Skip to main content

இந்திய மக்கள் தொகையில் ஏழு சதவீதம் பேரை கொல்லும் ஒரு வகை கொசுக்கள்.

Published on 25/04/2018 | Edited on 26/04/2018
malaria mosquitoes

கொசுக்கள் நம்மைத் தூங்கவிடாமல் ஊசி போடுவதுபோல் நம் இரத்தத்தை குடித்து கொண்டிருப்பதை உணர்ந்தாலே போதும், மக்கள் எல்லோரும் பீதியடைந்து எனக்கு டெங்கு வந்துவிடுமா அல்லது சிக்குன்குனியா வந்துவிடுமா என்று அஞ்சுகின்றனர். இதுவே பல ஆண்டுகளுக்கு முன்பு கொசுக்கள் கடித்தால் மக்கள் என்ன நினைத்து பீதியடைந்து கொண்டிருப்பார்கள் தெரியுமா?.. அவர்கள் பீதியடைய காரணமாக இருந்தது மலேரியாதான். தற்போது இந்த மலேரியா என்ற சொல்லை மக்கள் அதிகமாக பயன்படுத்தாமல் இருப்பதற்கு காரணம், அது ஒழிந்துவிட்டது.... என்று நினைக்காதீர்கள், அது இன்றும் நம்மை விடவில்லை,  பல நோய்கள் கொசுக்கள் மூலமாக பரவி வருவதனால் இந்த கொடிய மலேரியா பெயர் சற்று மறக்கப்பட்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.


கொசுக்களில் பல வகை உண்டு, அதில் ஒரு வகையான அனோபிலஸ் என்ற பெண் கொசு, மனிதனின் இரத்தத்தை உரிய வரும்போது மலேரியா ஒட்டுண்ணி உடம்பில் வேகமாக, இரத்த ஓட்டத்தில் கலந்துவிடுகிறது. அந்த ஒட்டுண்ணிகள் எல்லாம் இரத்த ஓட்டத்தின் வழியாக கல்லீரல் பகுதிகளுக்கு சென்று இனப்பெருக்கம் செய்து, பின்னர் சிவப்பணுக்களின் மீதும் இனப்பெருக்கம் செய்கிறது. இவ்வாறு அது இனப்பெருக்கம் செய்துகொண்டே இருப்பதால், உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்து. உடல்நிலை சரியில்லாமல் போகிறது. இது பரவக்கூடிய நோய். 
 

இந்த கொசு கடித்து, பத்து முதல் பதினைந்து நாட்களில் காய்ச்சல் பரவ ஆரம்பிக்கிறது. முதலில் சாதாரண காய்ச்சலாகவே இருக்கிறது. அதற்கு பின்னர் குளிர் காய்ச்சல் உடல் நடுக்கம், வாந்தி, மயக்கம், உடல் சோர்வு ஏற்படுகிறது. கடைசி கட்டமாக காட்டுத்தீயாக உடல் கொதிக்கும், ஒரு நாளிலேயே உடல் சரியாகிவிட்டது போன்ற உணர்வை அளிக்கும். ஆனால், ஒன்று அல்லது இரண்டு நாட்களில் காய்ச்சல் வந்துவிடும். இதுவே அதிகப்படியானால் மஞ்சள் தோல், கோமா, கடைசியில் மரணத்தில் முடியும். பல இறப்புகள் இப்படி கணக்கு இல்லாமல் போயிருக்கிறது. 
 

malaria patient


2016 ஆண்டின், படி  உலகில் மொத்தம் இரண்டு கோடியே 16 லட்சம் பேர் மலேரியாவால் பாதிக்கப்பட்டு இருந்திருக்கின்றனர், அதில் 4,45,000 பேர் இறந்துள்ளனர். அது போலவே 2015 ஆண்டின் படி, இரண்டு கோடியே 15 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 4,46,000 பேர் இறந்துள்ளனர். இந்த மலேரியாவால் உலகளவில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள் என்றால், கிழக்கு சஹாரா பாலைவன பகுதிகளில்தான். அதையடுத்து ஆசிய கண்டத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு என்றால் இந்தியாதான். இந்தியாவில் ஏழு சதவீதம் பேர் இந்த நோயால் இறக்கின்றனர். உலக நாடுகளில் மலேரியாவால் அதிக நோயாளிகள் இறப்பதில் இந்தியா நான்காம் இடத்தில் உள்ளது. முதலாம் இடத்தில் நைஜீரியா உள்ளது. இந்த மலேரியா நோயை ஒழித்து கட்ட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வருடா வருடம் ஏப்ரல் 25 ஆம் தேதி அன்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆண்டும் "ரெடி டூ பீட் மலேரியா" என்ற பெயரில் விழிப்புணர்வு நடத்திக்கொண்டிருக்கிறது. 2030ம் ஆண்டுக்குள் அனைத்து நாடுகளும் மலேரியாவை ஒழித்து காட்டுவோம் என்று மலேசியாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் உறுதியளித்துள்ளனர். அதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் ஒருவர்.