Skip to main content

எந்தக் கூட்டணிக்கும் விசுவாசம் இல்லாத பாமக! -திருமாவளவன் பேட்டி

Published on 19/02/2019 | Edited on 19/02/2019



2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக - பாமக கூட்டணி உடன்பாடு ஏற்பட்டது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நக்கீரன் இணையதளத்திற்கு கருத்து தெரிவித்துள்ளார். 
 

தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வை இடம்பெறுவதற்கான முயற்சிகள் நடந்ததாக கூறப்பட்ட நிலையில் அதிமுக - பாமக கூட்டணி உறுதி செய்யப்பட்டதை எப்படி பார்க்கிறீர்கள்?
 

இது எதிர்பார்த்ததுதான். இதில் அதிர்ச்சியடைய ஒன்றும் கிடையாது. வழக்கம்போல இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். எந்தப் பக்கம் பேரம் படிந்ததோ அந்தப் பக்கம் போயிருக்கிறார்கள். இது திமுகவுக்கும் தெரியும், அதிமுகவுக்கும் தெரியும். திமுகவிடம் பேசிக்கொண்டே அதிமுகவிடம் பேரத்தை உயர்த்துவம், அதிமுகவிடம் பேசிக்கொண்டே திமுகவிடம் பேரத்தை உயர்த்துவதும்தான் அவர்களுடைய அரசியல் யுத்தி. அந்த வகையில் அதிமுகவுடன் பேரம் படிந்ததால் அவர்களின் கூட்டணி உறுதியாகியுள்ளது. 

 

thol thirumavalavan

 

இது அதிமுக கூட்டணிக்கு பலம் சேர்ப்பது என்பதைவிட பலவீனமாகத்தான் அமையும். மாநிலத்தில் அதிமுக ஆளும்கட்சி. மத்தியில் ஆளும் கட்சி பாஜக. வழக்கமாக ஆளும் கட்சிக்கு எதிரான உளவியல் எப்போதும் மக்களிடம் இருக்கிறது. தமிழ்நாடு அரசு நிர்வாகத் திறன் இல்லாத ஆட்சியாக உள்ளது. மத்திய அரசைப் பொறுத்தவரையில் வெளிப்படையாக மோடி எதிர்ப்பு நிலை பல்வேறு காரணங்களால் இருக்கிறது. ஆகையால் மோடி எதிர்ப்பு நிலை, எடப்பாடி எதிர்ப்பு நிலை, அதோடு எந்தக் கூட்டணிக்கும் விசுவாசம் இல்லாத பாமக இணைப்பு இவையெல்லாம் சேரும்போது அதிமுக அணி பலவீனம் அடையுமே தவிர, பலம் பெறாது. 

 

aiadmk - dmk alliance


 

ஏற்கனவே பாமக வாங்கிய வாக்கு வங்கியை கணக்கு எடுக்கிறார்கள். அந்த வாக்குகள் திமுக, அதிமுக எதிர்ப்பு என்பதை காட்டி வாங்கின வாக்குகள். அந்த நேரத்தில் திமுகவில் உள்ள வன்னியர்கள், அதிமுகவில் உள்ள வன்னியர்கள், மாற்றம் வேண்டும் என நினைத்த அதிமுக - திமுக எதிர்ப்பு வன்னியர்களும் பாமகவுக்கு ஓட்டு போட்டார்கள். இப்போது அதிமுக கூட்டணி என்ற நிலையை அவர்கள் எடுத்தவுடனேயே மற்ற கட்சியைச் சேர்ந்த வன்னியர்கள் தற்போது பாமகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள். அதனால் அதிமுக அணிக்கு எந்த லாபமும் கிடையாது. ஏற்கனவே பெற்ற வாக்குகள் பாமகவுக்கு கிடைக்காது. 
 

திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் கேட்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது?
 

இன்னும் பேச்சுவார்த்தை முறையாக தொடங்கவில்லை. காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் வெளியாகிறது. கூட்டணி கட்சிகளை அழைத்துப் பேசும்போது நாங்கள் பேசுவோம். 
 

சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவதாக சொல்லியிருந்தீர்கள். திமுக தலைமை வேறு தொகுதியை ஒதுக்கினால் ஏற்பீர்களா? சிதம்பரம் தொகுதிதான் என உறுதியாக இருப்பீர்களா?
 

அப்படி ஒன்றும் கிடையாது. என்னுடைய சொந்தத் தொகுதி என்பதால் 1999, 2004, 2009, 2014 என தொடச்சியாக நான்கு முறை போட்டியிட்டுள்ளேன். சொந்த தொகுதி என்பதால் என்னுடைய விருப்பத்தை தெரிவித்தேன். இருந்தாலும் கூட்டணி தலைமையிடம் பேசித்தான் முடிவு செய்யப்படும். 
 

உங்கள் கூட்டணியில் இன்னும் யார் யார் எல்லாம் இணையலாம் என விரும்புகிறீர்கள்?
 

அது திமுகவுக்கான அதிகாரம் மற்றும் உரிமை. கூட்டணிக்கு பலம் சேர்க்க யாரிடம் பேச வேண்டும் என்ற கருத்தை நாம் சொல்ல முடியாது. அதனை திமுகதான் முடிவு செய்யும். 
 

விஜயகாந்த்தை பியூஸ் கோயல் சந்திப்பதாக கூறப்படுகிறதே?
 

இதுவும் எதிர்பார்த்த ஒன்றுதான். ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.