Skip to main content

பாஜக ஆட்சியில் முக்கிய அமைச்சர்... விடுதலைப் புலிகளை ஆதரித்த தலைவர்... ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் முகங்கள்

Published on 29/01/2019 | Edited on 29/01/2019

முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சரான ஜார்ஜ் ஃபெர்ணாண்டஸ் இன்று காலை காலமானார். இவருக்கு 88 வயது ஆகிறது. இவர் கடந்த பல வருடங்களாகவே நோயுற்றிருந்தார், நியாபக மறதியால் அவதிப்பட்டார். கடந்த சில நாட்களாக பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார் என்று அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். 
 

george fernandes


அடல் பிஹாரி வாஜ்பாய், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் பிரதமராக இருந்தபோது ஃபெர்னாண்டஸ் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராகத் திறம்பட செயலாற்றியுள்ளார். இவர் 1930 ஜூன் 3ஆம் தேதி மங்களூருவில் பிறந்தவர். கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்த இவரை பெங்களூருக்கு பாதிரியார் படிப்பிற்காக 1946ஆம் ஆண்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். பின்னர், அந்தப் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு 1949ஆம் ஆண்டு பம்பாயில் சோஷியலிஸ்ட் ட்ரேட் யூனியன் இயக்கத்தில் சேர்ந்துள்ளார். இதன் பின்னர் இரயில்வேயில் வேலை பார்த்துக்கொண்டே படிப்படியாக அந்த அமைப்பிற்கே தலைவராகி பல போராட்டங்களை 1950-1960 கால கட்டத்தில் முன் நின்று நடத்தியிருக்கிறார். தொழிலாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தவராக இருந்த இவர், நேரடி அரசியலில் இறங்கினார். இவருடைய முதல் வெற்றியே மிகவும் வலிமையானது. காங்கிரஸ் கட்சியில் அப்போதிருந்த மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த எஸ்.கே.பாட்டீலை எதிர்த்து முதன் முதலாக தெற்கு மும்பை தொகுதியில் 1967ஆம் ஆண்டில் சம்யுக்தா சோஷியலிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றார். காங்கிரஸின் மிகப் பெரிய செல்வாக்குடைய வேட்பாளரைத் தோற்கடித்து வென்றதால் இவர், ஜெயண்ட் கில்லர் என்று அழைக்கப்பட்டாராம்.
 

படிப்படியாக அரசியலில் உயர்ந்து வந்த இவருக்கு தொழிலாளர்கள் மத்தியில் மிகப்பெரிய செல்வாக்கு இருந்தது. அகில இந்திய ரெயில்வே மென்ஸ் ஃபெடரேஷனின் தலைவராக இருந்திருக்கிறார். 1974ஆம் ஆண்டில் வரலாறு காணாத ஒரு ஸ்ட்ரைக் இந்தியா முழுவதும் உள்ள ரயில்வே ஊழியர்களால் நடத்தப்பட்டது. அதற்கு தலைமை தாங்கியவர் ஜார்ஜ் ஃபெர்ணாண்டஸ்தான். ஆங்கிலேயர்கள் ஆட்சியில் ஒரு ரயிலில் வேலை பார்க்கும் ஊழியர்கள், அந்த ரயில் ஒரு இடத்தில் தொடங்கி இறுதி ஸ்டேஷனில் போய் சேரும் வரை வேலை பார்த்தாக வேண்டும் என்கிற விதிமுறை இருந்தது. அதையே சுதந்திரம் பெற்றும் இந்திய ரயில்வேதுறை பின்பற்றி வந்தது. அந்த வேலை அளவை 12 மணிநேரங்களாக குறைக்க வேண்டும் என்று முதலில் கோரிக்கை வைக்க தொடங்கி, இறுதியில் 8 மணி நேரமாக குறைக்க வேண்டும் என்று அகில இந்திய ரெயில்வே மென்ஸ் ஃபெடரேஷன் கோரிக்கை வைத்தது. மேலும், மற்ற அரசுத்துறை ஊழியர்களுக்கு தரப்படும் ஊதியம்போன்று ரெயில்வேவுக்கும் தரவேண்டும் என்று இரண்டாவது கோரிக்கை வைத்து இந்தியா முழுவதும் உள்ள ரெயில்வே துறை ஊழியர்கள் பந்த்தில் இறங்கினார்கள். மே8 ஆம் தேதி தொடங்கிய இந்த போராட்டத்தில் 17 லட்சம் ஊழியர்கள் பங்கேற்று, 20 நாட்களுக்கு பின் இந்த போராட்டம் வாபஸ் வாங்கப்பட்டது. அப்போது இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திரா காந்தி இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கிய ஜார்ஜ் ஃபெர்ணாண்டஸ் மீது மிகவும் கோபத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
 

george


இதனையடுத்து 1975ஆம் ஆண்டில் அவசரக்கால கட்டம் இந்திராகாந்தியால் அமல்படுத்தப்பட்டபோது, இவர் அதை முழுமையாக எதிர்த்திருந்தார். அந்த காலகட்டத்தில் சீக்கியர் போன்ற மாறுவேடத்தில் அலைந்ததாகவும் கூறப்படுகிறது. ரயில்வே பாலங்களை டைனமைட் வைத்து தகர்த்தார் என்று 1976ஆம் ஆண்டு அவர் தேசதுரோக வழக்கில்  கைது செய்யப்பட்டார். 1977 ஆண்டில் இந்திரா காந்தி அவசரக்கால பிரகடணத்தை திரும்ப பெற்றுக்கொண்டபோதிலும் ஜார்ஜ் சிறையிலேயே இருந்தார். அந்த நிலையிலும் பிஹார் முஜாஃபார்பூர் தொகுதியில் சிறையிலிருந்துகொண்டே போட்டியிட்டு வெற்றியும் பெற்றிருக்கிறார். 

அதன்பின், ஜனதா கட்சி ஆட்சிக்கு வரும்போது, அதாவது மொராஜிதேசாய் பிரதமராக இருந்தபோது தொழில்துறை மத்திய அமைச்சராக இருந்துள்ளார். 1989-1990 கால கட்டத்தில் விபி சிங் பிரதமராக இருந்தபோது ரயில்வேதுறை மத்திய அமைச்சராக இருந்திருக்கிறார். அப்போது மங்களூர் முதல் பாம்பே வரை போடப்பட்ட ரயில்வே வழிபாதை திட்டம் மிகவும் பேசப்பட்ட ஒன்று. ஜனதா தள் கட்சியிலிருந்து பிரிந்து ஜார்ஜும், நிதிஷ் குமாரும் இணைந்து சமதா கட்சியை 1994ஆம் ஆண்டு உருவாக்கினர். தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவாராக இருந்திருக்கிறார். அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமாரக இருந்தபோது மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராகவும், மேலும் பல துறைகளில் அமைச்சராகவும் இருந்திருக்கிறார்.
 

george fernandes


இவர் பாதுகாப்புதுறை அமைச்சராக இருந்தபோதுதான் கார்கில் போர் மற்றும் பொக்ரான் நியூக்ளியர் சோதனை முயற்சி நடைபெற்றது. இதுமட்டுமல்லாமல் அந்த கால கட்டத்தில், வெளிப்படையாகவே விடுதலை புலிகளுக்காக ஆதரவு தெரிவித்தார். விடுதலை புலிகளுக்கு நிதி சேகரித்தவர், அவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கியவர் போன்ற பல குற்றச்சாட்டுகள் இவர் மீது இருக்கிறது. விடுதலை புலிகளுக்கு தனது ஆதரவை காட்டியதை போன்றே திபெத் கிளர்ச்சியாளர்களுக்கும், ஆன்ட்டி பர்மா அமைப்புகளுக்கும் ஆதரவு தெரிவித்திருந்தார். இதுபோல சோஷியலிஸ்ட் தாக்கத்தை ஏற்படுத்தி வந்த இவருடைய அரசியல் வாழ்கையின் கறுப்புப்புள்ளியாக  2004ஆம் ஆண்டு பல ஊழல் குற்றச்சாட்டுகள் வந்தன. ஜார்ஜுக்கு மிகவும் அரசியலில் நெருங்கிய நண்பராக இருந்த ஜெயா ஜெட்லீ இவரது  பெயரை பயன்படுத்தி பலரிடம் கமிஷன்கள் வாங்கியது வெளியுலகத்துக்கு தெரியவந்தது. தன்னுடைய கட்சியின் துணைத்தலைவராக இருந்த நிதிஷ் குமாருக்கும் இவருக்கும் வருத்தம் ஏற்பட்டதால் கட்சிக்குள்ளே பல பிரச்சனைகள் வந்தது. மேலும் கார்கில் போரில் இறந்தவர்களுக்கு வாங்கிய சவப்பட்டியில் ஊழல் என்று அதிலும் இவருடைய பெயர் அடிபட்டது. இதனால் தனது பதவியை ராஜினாமா செய்தார் ஜார்ஜ் பெர்னாண்டஸ். இவருடைய சமதா கட்சியை மீண்டும் 2003ஆம் ஆண்டில் ஜனதா தள்(யுனைடட்) கட்சியுடன் இணைத்தார். ஆனாலும், அவருக்கு முஜாஃபார்பூர் தொகுதியில் சீட்டு கொடுக்கவில்லை. இதனால் அவர் சுயேட்சையாக போட்டியிட்டார். ஆனால் அந்தத் தேர்தலில் அவர் தோல்வியைத் தழுவினார். பின்னர், 2009 ஆகஸ்ட் 4ஆம் தேதி ராஜ்யசபா உறுப்பினரானார். 
 

இப்படி தொழிலாளர்களுக்காக பாடுபட்டவரும், எமர்ஜென்ஸியை எதிர்த்தவருமான ஜெயண்ட் கில்லர் ஜார்ஜ் பெர்னாண்டஸின் மறைவு இந்தியாவிற்கு பெரும் இழப்பாகும்.
 

 

 

 

Next Story

“ஸ்மிருதி இராணியை இழிவுபடுத்த வேண்டாம்” - ராகுல் காந்தி வேண்டுகோள்

Published on 12/07/2024 | Edited on 12/07/2024
Rahul Gandhi said that Don't insult Smriti Irani

கடந்த 2019 நாடாளுமன்றத்  தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அவரது குடும்பத் தொகுதியான அமேதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இராணி தோற்கடித்தார். அதேபோன்று இந்த முறையும் ராகுல் காந்தியை அமேதி தொகுதியில் தோற்கடிப்பேன் என்று ஸ்மிருதி இராணி சவால் விடுத்தார். ஆனால் கடைசி நேரத்தில் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிடாமல், காந்தி குடும்பத்தின் பாரம்பரிய தொகுதியான ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். 

அதே சமயம் அமேதியில் ஸ்மிருதி இராணியை எதிர்த்து ராகுல் காந்தி குடும்பத்தின் நம்பிக்கைக்குரிய நபரான கிஷோரி லால் சர்மாவைக் காங்கிரஸ் நிறுத்தியது. பின்னர் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்மிருதி இராணியைத் தோற்கடித்து கிஷோரி லால் சர்மா அமோக வெற்றிபெற்றார். இதனைத் தொடர்ந்து தோல்வியை ஒப்புக்கொண்ட ஸ்மிருதி இராணி, தொடர்ந்து அமேதி தொகுதி மக்களுக்காக பணியாற்றுவேன் என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியினர் ஸ்மிருதி இராணிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். 

இந்த நிலையில் ஸ்மிருதி இராணியை இழிவுபடுத்த வேண்டாம் என நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பக்கத்தில், “வாழ்க்கையில் வெற்றியும் தோல்வியும் சகஜம். அதனால் அந்த விஷயத்தில் ஸ்மிருதி இராணி அல்லது வேறு எந்தத் தலைவர்களையும், இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்துவதையும், கேவலமாக நடந்து கொள்வதையும் தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். மக்களை அவமானப்படுத்துவதும் அவமதிப்பதும் பலவீனத்தின் அடையாளம், வலிமை அல்ல” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

‘ஜூன் 25 அரசியல் சாசன படுகொலை தினம்’ - மத்திய அரசு அறிவிப்பு

Published on 12/07/2024 | Edited on 12/07/2024
central govt said June 25 to be observed as Constitution black Day

1971 ஆம் ஆண்டு நடந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 352 தொகுதிகளையும், கம்யூனிஸ்ட்கள் 48 தொகுதிகளையும், ஜனசங்கம் 22 தொகுதிகளையும், காமராஜர் தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸ் 16 தொகுதிகளையும் கைப்பற்றியது. உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி போட்டியிட்டார். அவரை எதிர்த்து சோசலிஸ்ட் கட்சியின் தலைவர் ராஜ் நாராயணன் போட்டியிட்டார். இதில் ராஜ் நாராயனணை தோற்கடித்து ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தி வெற்றிபெற்றார்.

இந்த நிலையில், இந்திராகாந்தியின் வெற்றியை எதிர்த்து ராஜ் நாராயணன் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் இந்திராகாந்தியின் வெற்றி செல்லாது என்று கடந்த 1975 ஆம் ஆண்டு ஜூன்12 ஆம் தேதி அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.  நீதிபதி ஜக்மோகன்லால் சின்ஹ தேர்தலில் வெற்றிபெற இந்திராகாந்தி பல்வேறு முறைகேடுகளில் ஈட்டுப்பட்டுள்ளார். அதனால் அவரது வெற்றி செல்லாது என்று தீர்ப்பளித்தார். மேலும், தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டதால் அடுத்த 6 ஆண்டுகளுக்குத் தேர்தலில் இந்திராகாந்தி போட்டியிட முடியாது என்றும் உத்தரவிட்டார். 

நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை இந்த தீர்ப்பு ஏற்படுத்திய நிலையில், அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார் இந்திராகாந்தி. ஆனால் 1975 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் ஆண்டு அப்போதைய உச்சநீதிமன்ற நீதிபதி, கிருஷ்ண ஐயர் இந்திராகாந்தி மனுவைத் தள்ளுபடி செய்து அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தார். இதனால் இந்திராகாந்திக்கு நெருக்கடி அதிகரித்து, கட்டாயம் பதவி விலகி ஆக வேண்டிய சூழல் உருவானது.

இந்த சூழலில் 1975 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி நள்ளிரவில் இந்தியாவில் அவசரநிலை சட்டத்தை அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி அமல்படுத்தினார். இந்தியாவில் முதல்முறையாக எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டது. நாடுமுழுவதும் எதிர்க்கட்சிகள் கடும் நடவடிக்கைகளுக்கு உள்ளாகினர். எதிர்க்கட்சி தலைவர்கள் மீசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுச் சிறைப்படுத்தப்பட்டு சித்ரவதைகள் செய்யப்பட்டனர். பத்திரிக்கைகள் தனிக்கை செய்யப்பட்டது. இதனால் மக்கள், அரசியல் கட்சியினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். பலரும் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, இரண்டு ஆண்டுகள் கழித்து 1977-ம் ஆண்டு மார்ச் 21-ந் தேதி இந்தியாவில் அவசர நிலை பிரகடனம் திரும்பப் பெறப்பட்டது. பிற்காலங்கள் நாட்டில் எமர்ஜென்சி அமல்படுத்தியதற்காக மக்களிடம் இந்திராகாந்தி மன்னிப்பு கேட்டதாக  கூறப்படுகிறது. இன்றளவும் எமர்ஜென்சி கலத்தை இந்தியா நாட்டின் கருப்பு தினமாகப் பலராலும் விமர்சிக்கப்படுகிறது.

மத்தியில் ஆளும் பாஜக காங்கிரசுக்கு எதிராக எமர்ஜென்சி காலத்தையே முன்வைத்து மக்களிடம் பிரச்சாரம் செய்துவருகிறது. இந்த நிலையில்தான், ஜூன் 25 ஆம் தேதி அரசியல் சாசன படுகொலை தினமாக கடைப்பிடிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அவசர நிலையால் பாதிக்கப்பட்டோருக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 25 ஆம் தேதி அஞ்சலி செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.