Skip to main content

என்னது இது ஃபுட் பாலா!!! முதல் உலகக்கோப்பையில் பயன்படுத்தப்பட்ட பந்து இதுதான்

Published on 16/06/2018 | Edited on 26/06/2018

தற்பொழுது உலகம் முழுவதும் காய்ச்சல்தான். ஆம் கால்பந்தாட்ட காய்ச்சல். ஃபிபா கால்பந்து சம்மேளனம் நடத்தும் உலகக்கோப்பைதான் தற்பொழுதைய காய்ச்சலாக பரவியுள்ளது. உலகிலேயே அதிகம் பார்க்கப்படும், ரசிக்கப்படும் விளையாட்டாக இருப்பது கால்பந்துதான். இந்திய கால்பந்து அணி இன்னும் ஒரு முறை கூட தனது காலை உலகக்கோப்பையில் வைக்கவில்லை என்றாலும் இந்தியர்களால் அதிகமாக ரசிக்கப்படும் விளையாட்டாக கால்பந்தாட்டமும் இருக்கிறது.

 

 


இது 1930-ல் இருந்தே கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒலிம்பிக்கில் கால்பந்தாட்டம் இருந்தாலும்கூட ஃபிபா உலகக்கோப்பை என்பதில்தான் அனைவரது கவனமும் இதன்மீது பெரும்பாலும் இருக்கிறது. 32 நாடுகள் பங்கேற்கும் இந்த போட்டியில் 8 குரூப்களாக பிரிக்கப்பட்டு முதலில் குரூப் சுற்றுகள் நடைபெறும். அதிலிருந்து தகுதி பெரும் முதல் இரு அணிகள் கால் இறுதிக்கு முன் ஆட்டத்திற்கு போட்டி போடும். பின் அதிலே வெற்றி பெரும் அணிகள் காலிறுதியில் விளையாடும். அதிலே வெற்றி பெற்ற பின் அரைஇறுதி, கடைசியில் இறுதிப் போட்டியில் விளையாடும் அணிகளின் மேலே இந்த உலகமே கண்நோக்கியிருக்கும்.

தற்பொழுது 32 அணிகள் விளையாடுகிறது ஆனால் உலகக்கோப்பை தொடங்கிய 1930 ஆம் ஆண்டில் எத்தனை அணிகள் விளையாடியது, எத்தனை இடங்களில் விளையாடியது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?


 

foot ball


அப்பொழுதைய ஃபிபா தலைவராக ‘ஜுலஸ் ரிம்மெட்’ இருந்தார். அவரும் ஃபிபா சம்மேளனமும் ஒருங்கிணைந்து ‘உருகுவே’ (தென்அமெரிக்காவில் அமைந்துள்ளது) நாட்டில் உலகக்கோப்பை போட்டியை நடத்தினர். ஜூலை 13 முதல் 30 ஆம் தேதி வரை நடைபெற்ற போட்டியில் ‘அர்ஜென்டீனா, பிரேசில், பொலிவியா, சிலி, மெக்ஸிகோ, பாராகுவே, பெரு, அமெரிக்கா, பெல்ஜியம், பிரான்ஸ், ரோமானியா, யுகோஸ்லாவியா, உருகுவே’ என்று 13 அணிகள் பங்கேற்றனர். உருகுவேவில் உள்ள “ சென்டேனரியோ, பார்க் சென்ட்ரல், போசிடோஸ்” என்னும் இடங்களில் போட்டி நடைபெற்றது. 

சென்டேனரியோ கிரான் பார்க் சென்ட்ரல்  போசிடோஸ்

1930 ஜுன் 13 அன்று முதல் ஆட்டமானது பிரான்ஸ் – மெக்ஸிகோ இடையில் போசிடோஸ் மைதானத்தில் நடைபெற்றது. அதில் முதன் முதலில் உலகக்கோப்பையில் கோல் அடித்தவர் என்ற பெருமை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த “லுசிஎன்ட் லாரன்ட்” என்பவர்தான். அந்த போட்டியில் பிரான்ஸ் அணி 4  கோல் அடித்தது. மெக்ஸிகோ அணி 1 கோல் அடித்து தோல்வியுற்றது. அந்த போட்டியின் நடுவராக இருந்தவர் ‘டோமிங்கோ’. அவர் உருகுவே நாட்டைச் சேர்ந்தவர். அந்த போட்டியை காண நாலாயிரத்திற்கும் மேற்பட்டோர் மைதானத்திற்கு வருகை தந்தனர். மேலும் இந்த முதல் உலகக்கோப்பையில் மொத்தமாக 15 நடுவர்கள் பங்கேற்றனர்.  இந்த உலகக்கோப்பையில் நடந்த இறுதி போட்டியில் இரு அணிகளும் தங்களின் பங்காக ஒவ்வொரு பந்தை தரவேண்டும். இறுதிபோட்டியில் உருகுவே அணி அர்ஜென்டினா-வை 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இறுதிப்போட்டியில் ‘டோரடோ’ என்னும் உருகுவே வீரர் முதல் கோல் அடித்து அணியின் வெற்றிக்கு முதல் வடிவை கொடுத்தார். பின் ஆட்டம் முடிவில் உருகுவே அணி வெற்றி பெற்றது.

 

foot ball


 


இந்த பந்துகள் தற்பொழுது வரும் உள்ள பந்துகளை போல அழகாக இல்லை. இருப்பினும் இது வரலாற்று சிறப்பு மிக்க ஒன்றுதான். “ப்ளாடர்” என்று சொல்லப்படும் ஒன்று இல்லாமல் தற்பொழுது பந்துகள் வருகிறது. இந்த பந்து பழங்காலத்தில் தயாரிக்கப்பட்ட ஒன்று. இதனுள் “ப்ளாடர்” வைத்து அதனை தைத்து விடுவார்கள். இறுதி ஆட்டத்தில் இந்த பந்துகளைதான் வைத்து விளையாடினார்கள்.

இப்படிதான் முதன்முதலில் கால்பந்து உலகக்கோப்பை நடைபெற்றது.  கைபேசி, தொலைக்காட்சி, இணையம் என்று வாழ்ந்து கொண்டிருக்கின்ற நாம் எளிதில் இதை கண்டுகளிக்கின்றோம். ஆனால் பல ஆண்டுகளுக்கு முன் தோன்றி இன்று வரை இதன் காய்ச்சல் குறையாமல் இருப்பதென்பது இந்த விளையாட்டின் சிறப்பாக கருதப்படுகிறது. இதன் தொன்மையும், தன்மையும்தான் இன்று வரை ரசிகர்களை கவர்ந்துகொண்டிருக்கிறது.

 

 


தற்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கும் உலகக்கோப்பை கால்பந்தாட்டத்தில் பல முன்னணி அணிகள் இடம்பெற்றுள்ள நிலையில், பொறுத்திருந்து பார்ப்போம் இந்த மகுடம் சூடா கோப்பையை எந்த அணி வெல்லப்போகிறது என்று.