Skip to main content

நாற்காலியை தேய்த்துவிட்டுப் போகும் ஆள் நானில்லை; கவிதை எழுதுவதே அரசியல்தானே - திமுக ஆண்டாள் பிரியதர்ஷினி பேட்டி

Published on 10/12/2022 | Edited on 10/12/2022

 

 

jkl


திமுகவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பல்வேறு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வந்தனர். அந்த வகையில் தமிழகத்தில் மிகவும் பிரபலமான பெண் கவிஞர்களில் ஒருவரான ஆண்டாள் பிரியதர்ஷினி திமுகவின் முக்கியப் பதவிகளில் ஒன்றான கழக மக்கள் செய்தித் தொடர்பு மாநிலத் துணைத் தலைவர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசியலில் அவரின் திடீர் நுழைவு எப்படி இந்தப் பொறுப்பை அவர் எப்படிப் பார்க்கிறார் என்பது குறித்தான கேள்விகளை நாம் அவரின் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 

 


உங்களை ஒரு கவிஞராகவும், ஒரு அரசு அதிகாரியாகவும் அனைவருக்கும் தெரியும். தற்போது திடீரென்று உங்களின் அரசியல் நுழைவு நடைபெற்றுள்ளது. இந்த அரசியல் வருகை என்பது எதார்த்தமாக நடைபெற்ற ஒரு நிகழ்வா இல்லை இளமைப் பருவத்திலிருந்தே கட்சியின் மீதிருந்த தொடர்பால் நடைபெற்றதா? உங்களின் அரசியல் வருகை என்பது எதனை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது?

 

நீங்கள் திடீரென்று என்கிற வார்த்தையைப் பயன்படுத்துவது எனக்குச் சற்று வியப்பாகக் கூட இருக்கிறது. எதுவும் திடீரென்று நடைபெற்று விடாது. நீங்கள் முதலிலேயே கூறியவாறு நான் கவிஞராகத் தெரியும் என்று சொன்னீர்கள். கவிதை எழுதுவதே மிகப்பெரிய அரசியல்தானே, அதுவும் இந்தக் காலத்தில் ஆண்கள் நிறைந்துள்ள இந்தத் துறையில் பெண்ணாக இருந்து அதில் பணியாற்றுவது என்பதே அரசியலின் ஒரு பகுதிதானே. நான் ஆண், பெண் என்று பார்க்கவில்லை. ஆனால் இதில் பணியாற்றுவது ஒரு சவாலாக இருப்பது என்பதே அரசியலின் ஒரு பகுதியாகப் பார்க்கிறேன்.

 

விளிம்பு நிலை மக்களுக்காகத்தான் நான் எப்போதும் பேசிக்கொண்டிருந்தேன், எழுதிக்கொண்டிருந்தேன். யாரெல்லாம் இவர்களை கைதூக்கி விடுவதற்காக நம்முடைய சமூகத்தில் போராடினார்களோ அவர்களைத்தான் நான் கொண்டாடிக் கொண்டிருக்கிறேன். அதனால் தான் என்னுடைய பெரியார், என்னுடைய அண்ணா, என்னுடைய கலைஞர்,என்னுடைய தளபதி என்று உரிமையோடு கூறி வந்திருக்கிறேன். எனவே அப்படித்தான் நான் இந்த நிலைக்கு வந்து சேர்ந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

 

கட்சியில் சேர்ந்த உடனே மிகப்பெரிய பொறுப்பு தரப்பட்டுள்ளது. கழக மக்கள் செய்தித் தொடர்பு மாநிலத் துணைத் தலைவர் என்ற பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

 

இது முழுவதும் நம்முடைய தலைவரின் கருணை, தாயுள்ளம் தான் காரணம். அவர் நம்முடைய செயல்களை எவ்வாறு பார்த்துக்கொண்டிருக்கிறார் என்பதற்கு இதுவே சாட்சியாக இருக்கிறது. அவர் நெருங்கிப் பார்த்துப் பேசியது கூட இல்லை, ஆனால் என்னுடைய கருத்துக்களைத் திராவிடம் சார்ந்து பேசுவதை நான் ஒருபோதும் கைவிட்டதில்லை. அதையெல்லாம் முதல்வரின் பார்வைக்குச் சென்றிருக்கிறது. எனவே இதையெல்லாம் உற்றுநோக்கித்தான் எனக்கு வாழ்நாளில் நான் கனவு காண முடியாத இந்த இடத்தைக் கொடுத்திருக்கிறார். இது மிகப்பெரிய பொறுப்பு, எத்தனையோ முன்னோடிகள் இந்த பொறுப்புக்களை வகித்துள்ளார்கள். எனவே அவரின் நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் என்னுடைய செயல்பாடுகளை அமைத்துக்கொள்வேன். 

 

பெரும்பாலும் பணி ஓய்வுக்குப் பிறகு வீட்டில் ரெஸ்ட் எடுக்கவே விரும்புவார்கள், ஆனால் அரசியல் என்பது பரபரப்பான பணியாக இருக்கும், திடீரென முக்கிய விஷயங்களில் கருத்துக் கேட்பார்கள், விவாதங்களில் கருத்து கூற அழைப்பார்கள், இதை எல்லாம் உங்களால் முழுமையாகச் செய்ய முடியும் என்று நம்புகிறீர்களா? 

 

என்னைப் பற்றி அறிந்த அனைவருக்கும் ஆண்டாள் பணியில் எப்படி இருப்பார் என்பது தெரியும். நான் நீங்கள் சொல்வது போல் அரசு அதிகாரியாக பணியாற்றியுள்ளேன். அரசு அதிகாரிகளில் சிலர் நாற்காலியைத் தேய்த்துவிட்டுச் செல்பவர்களும் உண்டு. ஆனால் ஆண்டாள் ஒருபோதும் அப்படிச் செய்ததில்லை என்பது என்னை அறிந்த அனைவருக்கும் தெரியும். ஆண்டாள் வேலை செய்வதற்கு எப்போதும் தயங்கியதில்லை, சுணங்கியதும் இல்லை. பணியை விருப்பப்பட்டே இதுவரை செய்து வந்திருக்கிறேன். 

 

அதிகமாக வேலை செய்கிறாய் என்றுதான் என்னிடம் சண்டை போடுவார்கள், இயங்கிக்கொண்டே இருப்பதுதான் திராவிடம் எனக்குக் கற்றுக்கொடுத்தது. பெரியார் அவர்கள் தான் வாழ்நாளில் கடைசிக் காலம் வரை இந்த நாட்டு மக்களுக்கு உழைத்தார். அண்ணா அவர்கள் அறுவை சிகிச்சை செய்யும் நேரத்திலும் ஒரு நூலினை வாசித்துவிட்டு வரவா என்று கேட்டார். அவர்கள் வழி வந்த நானும் அவர்களைப் போல் உழைப்பில் முழு ஈடுபாட்டோடு பணியாற்றுவேன்.