சென்னை, கலைவாணர் அரங்கத்தில் விடுதலை போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் நல்லகண்ணுவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா இன்று (29.12.2024) நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “தோழர் இரா. நல்லகண்ணு 100 நூறு கவிஞர்கள் நூறு கவிதைகள்" என்ற நூலினை வெளியிட்டார். இந்நிகழ்வில் கலந்து கொண்ட கவிஞரும், எழுத்தாளருமான வைரமுத்து பேசுகையில், “சூரியனை 100 முறை சுற்றி வந்திருக்கிற ஒரே பெருமகன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் அவர் மட்டும்தான். இந்த பூமியில் 100 முறை சூரியனைச் சுற்றி வந்தார். பூமி என்னும் ஊடகத்தின் மீது நின்று கொண்டு அவரும் சூரியனை 100 முறை சுற்றி வந்திருக்கிறார்.
நான் 70 முறை சுற்றி வந்திருக்கிறேன். சிலர் 80 முறை சுற்றி வந்திருக்கிறார்கள். சிலர் 50 முறை, சிலர் 40 முறை. ஆனால் 100 முறை சுற்றி வரக் கூடிய வாய்ப்பு நல்லகண்ணு அய்யா அவர்களைப் போல எத்தனை பேருக்குக் கிடைக்கும் என்று தெரியவில்லை. நீங்கள் ஒருவரை வாழ்த்தும் பொழுது நூறாண்டு வாழ்க என்று கூறுவீர்கள். இவரை எப்படி வாழ்த்துவீர்கள். நீங்கள் விரும்பும் வரை வாழுங்கள் என்று வாழ்த்துங்கள். எளிமையில் பிறந்து எளிமையில் வாழ்ந்து வருபவர். எளிமை தான் இந்த உலகில் எளிமையானது. ஆடம்பரம் இல்லாத சொல் எளிமை.
உலகத்தில் முக்கியமான பொருள் காற்று என்றால் அது தான் இந்த உலகில் எளிமையானது. கடலை காட்டுக்குப் போவோம். கடலையை அவிப்போம். உப்பு இருக்காது. அதற்குக் கிராமத்தார் ஒரு மாற்று கண்டுபிடித்தார்கள் அது தும்பை குழை. கம்யூனிஸ்ட் கட்சி காந்தி என்ற உப்பைத் தேடியது நல்லகண்ணு என்ற தும்பை குழை கிடைத்தது. ஐஸ்டின் சொன்னான் காந்தி பற்றி இப்படி ஒரு மனிதன் இரத்தமும் சதையுமாக வாழ்ந்தான் என்று உலகம் நம்பாது என.... அதுபோல வாழ்ந்து வருபவர் நல்லகண்ணு.
தன்னல மறுப்பு, பொதுநல பொறுப்பு மூலம் வளர்ந்தவர். ஒருவன் இறந்தால் நான்கு மணி நேரம் தான் பேசப்படும். எனவே மனிதன் நன்றியை, புகழை எதிர்பார்க்காத மனிதன் தான் மகத்தானவன். இவர் பொதுச்செயலாளர் இவருக்கு இரண்டாயிரம், துணை செயலாளருக்கு மூன்றாயிரம். குடும்பச் சூழல் கருதி துணை செயலாளருக்கு அந்த தொகை. தேவைக்குத் தான் வாழ வேண்டும் அது தான் கம்யூனிசியம். இந்த உலகத்தில் மிகக் கொண்டாடிக் கூடிய பொருள் என்ன தெரியுமா?. எது தியாகம் செய்ததோ அதுதான் இன்றளவிற்கும் நிலைத்து நிற்கும் பாத்திரம். தன் தியாகத்தை மறந்து தன்னை சராசரி மனிதனாகக் காட்டிக் கொள்பவர் நல்லகண்ணு.
1967இல் கம்யூனிஸ்ட் தடை செய்யப்படாமல் இருந்திருந்தால் அன்று தமிழகத்தில் கம்யூனிஸ்ட் தான் ஆட்சியைக் கைப்பற்றி இருக்கும். நூறாண்டு வாழ்வது என்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா ? கணையம், கல்லீரல் செயல்பட வேண்டும்; குடும்பத்தில் உள்ளோர் சாகாமல் இருக்க வேண்டும்; நூறாண்டு வரை உலகம் நம்மோடு இணைந்து இருக்க வேண்டும். நல்லகண்ணு அவர்களே... தோழர்கள் இருக்கிறார்கள். சமூகம் இருக்கிறது. வாழுங்கள். நீங்கள் விரும்பும் வரை வாழுங்கள். இந்த சமூகம் எவ்வளவு வாழுமோ அவ்வளவு வாழுங்கள் என்று வாழ்த்துகிறேன்” எனப் பேசினார்.