Skip to main content

“தமிழிசை திமுகவில் இணைந்துவிடுவாரா...?” - சிவ ஜெயராஜ் சவால்

Published on 16/12/2022 | Edited on 16/12/2022

 

dmk advocate siva jeyaraj talks about tamilisai and narendra modi 
 சிவ ஜெயராஜ் 

 

திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி கடந்த 14ம் தேதி இளைஞர் நலன்  மற்றும்  விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக ஆளுநர் மாளிகையில் பதவியேற்றுக்கொண்டார். அமைச்சர் உதயநிதி பதவியேற்புக்கு வாரிசு அரசியல் என எதிர்க் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், வழக்கறிஞரும் திமுக செய்தித் தொடர்பு இணைச் செயலாளருமான சிவ ஜெயராஜ் நக்கீரன் யூடியூப் சேனலுக்கு நேர்காணல் அளித்தார். அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்வி பதில்கள் கீழே.

 

சில அரசியல் கட்சிகள் குறுக்கு வழியில் அரசியல் செய்து ஆட்சிக்கு வர நினைக்கிறது என்று பிரதமர் மோடி பேசியிருக்கிறாரே?

 

dmk advocate siva jeyaraj talks about tamilisai and narendra modi 

இந்த நாட்டோட அதிகப்படியான அடுத்த கட்சி  எம்எல்ஏக்களை வாங்கி ஆட்சி அமைத்த கட்சி பாஜகதான். அதிகப்படியான வாக்குறுதிகள் தேர்தலில் கொடுத்துவிட்டு மக்களை நடுத்தெருவில் நிறுத்தியது பாஜகதான். அமெரிக்க டாலருக்கு இணையாக இந்திய மதிப்பு எவ்வளவு உள்ளது. பொருளாதாரத்தில் இந்தியா எத்தனையாவது  இடத்தில் உள்ளது என்பதைப் பார்க்க வேண்டும். நீங்கள் ஏழு  முறை குஜராத்தில் ஆட்சியில் இருக்கலாம். குஜராத்தை விட மருத்துவ வசதியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. இந்தியாவில் குஜராத்தில் மின்சார வசதி கொடுக்க முடியாத கிராமங்கள் இருக்கின்றன. தமிழகம்  தன்னிறைவு அடைந்த மாநிலம்.  தமிழகம் மருத்துவத்தில், சுகாதாரத்தில், கல்வியில்  தன்னிறைவு அடைந்ததற்குக் காரணம் கலைஞரும், ஸ்டாலினும், திராவிட மடல் ஆட்சியும்தான்.

 

அரசியலில் தலையிடவில்லை., ஆளுநர் வேலையை மட்டுமே பார்ப்பதாக ஆளுநர் தமிழிசை சொல்கிறாரே?

 

இந்திய அரசியலமைப்பு சட்டம்  201வது  பிரிவு தெளிவாகச்  சொல்கிறது. ஆளுநர்களின் அதிகாரம் பற்றி உச்சநீதிமன்றம் பேரறிவாளன் வழக்கில்,  "மாநில அமைச்சரவையின் சுருக்கெழுத்தார்தான் ஆளுநர்" என்று சொல்லுகிறது.  இவர்களுக்கு அரசியலும், அரசியலமைப்பு சட்டமும் தெரியவில்லை. தமிழிசை ரெண்டு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததால்   கவர்னர் பதவி கிடைத்தது. அதேபோன்று எல். முருகனுக்கு மத்திய அமைச்சர் பதவி. ஆளுநர்களை வைத்து இரட்டை அரசாங்கம் நடத்த நினைக்கிறார்கள். எழுத்துரிமை இல்லை, பேச்சுரிமை இல்லை என்று நினைத்தால் அரசியலுக்கு வந்து பேசுங்க. ஆளுநராக இருக்கும்போது ஆட்சியில் தலையிடக் கூடாது. தமிழிசையால் தெலுங்கானாவில் எதையும் செய்ய முடியவில்லை. தெலுங்கானாவில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார். அந்த நிலைமை ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் ஏற்படும்.

 

திராவிட மாடல்; கலைஞரின் மகன் ‘மாடல்’ எனும் சொல்லுக்கு மாற்றாக உரிய தமிழ்ச் சொல்லை வைக்க வேண்டும் என தமிழிசை கூறுகிறார்.

 

மாடல் எனும் சொல்லுக்கு உரிய தமிழாக்கம் செய்துவிட்டால் தமிழிசை திமுகவில் இணைந்து விடவா போகிறார். பாமர மக்களுக்கும் எங்கள் அரசினுடைய சாதனையை வெளிப்படுத்த, எங்க அரசின் மாடல் என்ன என்று புரிய வைக்கத்தான் திராவிட மாடல் என்று சொல்லுகிறோம். அவங்க அப்பா குமரி அனந்தன், சித்தப்பா வசந்தகுமார் என ஒரே  குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் அரசியலில் இருக்கிறார்கள். அவர் வாரிசு அரசியல் பற்றி பேசலாமா. ஓபிஎஸ் அவர் மகன்களான ரவீந்திர குமார், ஜெயபிரதீப் ஆகியோரை பக்கத்துல வச்சுக்கிட்டு திமுகவின் வாரிசு அரசியல் பற்றி பேசுகிறார். இந்தியாவில் எந்தக் கட்சி வாரிசு அரசியல் பண்ணல ஒரு கட்சியைக் காட்டுங்கள். வாரிசு அரசியலால் தமிழ்நாட்டுக்கும், மக்களுக்கும் என்ன பாதிப்பு இருக்கிறது; ஏதும் இல்லையே.