Skip to main content

“காங்கிரஸ் அழிகிறது, பாகிஸ்தான் அழுகிறது” - பிரதமர் மோடி விமர்சனம்

Published on 02/05/2024 | Edited on 02/05/2024
PM Modi criticized Congress and Pakistan

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து, கேரளா, கர்நாடகா போன்ற 89 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, மூன்றாம் கட்டத் தேர்தலை எதிர்கொண்டு பல மாநிலங்களில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

அந்த வகையில், மொத்தம் 26 மக்களவைத் தொகுதிகள் கொண்ட குஜராத் மாநிலத்தில் மே 7ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், குஜராத் மாநிலம், ஆனந்த் பகுதியில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், “2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற 24x7 வேலை செய்வேன் என்பது எனது உத்தரவாதம். 10 ஆண்டுகளில் 14 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுத்தோம். ஆனால், காங்கிரஸ் 60 ஆண்டுகளில் வெறும் 3 கோடி வீடுகளுக்கு கொடுத்தது. இன்று காங்கிரஸ் இந்தியாவில் பலவீனமடைந்து வருகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், இங்கு காங்கிரஸ் இறந்து கொண்டிருக்கிறது, அங்கே பாகிஸ்தான் அழுகிறது. பாகிஸ்தான் தலைவர்கள் காங்கிரஸுக்காக பிரார்த்தனை செய்கிறார்கள். அவர்கள் அடுத்த பிரதமராக ராகுல் காந்தி வேண்டும் என்று நினைக்கிறார்கள். 

காங்கிரஸ் பாகிஸ்தானின் சீடர் என்று நாம் நீண்ட காலமாக அறிந்திருப்பதில் ஆச்சரியமில்லை. இந்த வெளிப்பாடு பாகிஸ்தானுக்கும் காங்கிரசுக்கும் இடையிலான கூட்டுறவை அம்பலப்படுத்துகிறது. நாட்டின் எதிரிகள் விரும்புவது பலவீனமான இந்திய அரசாங்கத்தையே தவிர, வலிமையான அரசை அல்ல என்பது தெளிவாகிறது. 2014க்கு முன்பு இருந்த ஊழல் ஆட்சியையே அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் மோடியின் வலிமையான அரசு தலைவணங்குவதும் இல்லை, நிறுத்துவதும் இல்லை” எனப் பேசினார். 

சார்ந்த செய்திகள்