Skip to main content

"விஜயகாந்த் அரசியலுக்கு சரிப்பட்டு வருவாரானு அப்போவே சந்தேகப்பட்டேன்..." - இயக்குனர் பேரரசு  

Published on 10/03/2019 | Edited on 10/03/2019

பேரரசு... 2005, 2006 ஆண்டுகளில் பேக் டு பேக் கமர்சியல் வெற்றிப் படங்கள் கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களை மசாலா நெடியில் தும்ம வைத்தவர். வசனங்களில், பாடல்களில், தன் படங்களில் இவர் கொடுக்கும் கேமியோ தோற்றங்களில் அந்தக் கால டி.ஆரை நினைவுபடுத்தியவர். விஜயுடன் இரண்டு சூப்பர்ஹிட் படங்கள், அஜித்துடன் ஒரு ஹிட் படம், விஜயகாந்த் அரசியலில் நுழைந்த பின் வந்த படம் என அப்போது லைம் லைட்டில் இருந்த இயக்குனர். அவரை சந்தித்து, ரிலாக்ஸாக பல விஷயங்கள் பேசினோம். அதில், விஜயகாந்த் குறித்தும் அவருடன் பணியாற்றிய அனுபவம் குறித்தும் பேரரசு பகிர்ந்தவை...

 

director perarasu



"நடிகர்களில் விஜயகாந்த் என்றால் எளிமை. அவரை தூரத்தில் பார்க்கும்போதுதான் நடிகர்னு பாப்போம். நெருங்கிட்டா அவர் நடிகரில்ல, நல்ல மனிதர். மக்களிடம் நெருங்கி உரிமையாகப் பழகுபவர். 'தருமபுரி' ஷூட்டிங் ஸ்ரீரங்கத்தில் நடந்தது. ஓப்பனிங் சாங் எடுக்கப்போறோம். விஜயகாந்த் சார் வருகிறார் என்றதும் பயங்கரமான கூட்டம் கூடிருச்சு. அவர் ஸ்பாட்டுக்கு வந்ததும் மக்கள் இன்னும் உற்சாகமாகிட்டாங்க. நாங்க, டீம்ல எல்லோரும் மக்களை கன்ட்ரோல் பண்ண முயற்சி பண்றோம். இருந்தாலும் ஆர்வத்துல ஒரு சிலர் நெருங்கி வர்றாங்க. எங்களால ஷூட்டிங் நடத்த முடியல.

விஜயகாந்த் சார், இதை பார்த்துட்டு அவரே நேரடியா இறங்கினார். மக்கள்கிட்ட உரிமையா போய், "ஏய்... கொஞ்சம் இருங்க... நாங்க இங்க வேலை பார்க்க வேணாமா? ஏய் ப்ளூ சட்ட, அமைதியா நில்லு, தள்ளிப்போ"னு இவர் பேசவும் மக்கள் அப்படியே கட்டுப்பட்டாங்க. வேறு எந்த நடிகர் இப்படி பேசியிருந்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டாங்க. ஆனா, இவரோட கம்பீரம், உரிமையாக அன்பாகப் பேசும் தன்மை, மக்களை கட்டுப்படுத்துச்சு. மற்ற நடிகர்கள்னா நாங்க அவுங்களை சுற்றி நின்னு காப்பாத்துவோம். ஆனா, இவர் எங்களை காப்பாத்துனாரு. அப்படி ஒரு தோரணை. ரொம்ப இயல்பானவர், எதார்த்தமானவர்.

 

vijayakanth in assembly



அவருக்கு நடிக்கத்தெரியாது. கோபம்னா கோபம், ஜாலியா இருந்தா முழுசா ஜாலியா இருப்பார். எனக்கு அப்போவே சந்தேகம், இப்படி இருக்காரே இவரு அரசியலுக்கு சரிப்பட்டு வருவாரா? அரசியல்னா அதுக்குன்னு சில குணங்கள் தேவை. குணத்தை மாத்திக்கணும், மாத்தி மாத்தி பேசணும். இவருக்கு அதெல்லாம் வராதேனு தோனும். அந்த அளவுக்கு உள்ள இருக்கிறதை அப்படியே பேசுறவரு. ஆனா, அரசியலுக்கு வந்தார், ஜெயிச்சார். இன்றைக்கு எல்லோரும் பேசுறாங்களே 'வெற்றிடம், வெற்றிடம்'னு... கலைஞர் மறைந்ததாலோ, ஜெயலலிதா அம்மா இறந்ததாலோ வெற்றிடம் ஏற்படல. உண்மையா, விஜயகாந்த் சாருக்கு உடம்பு முடியாதனாலதான் வெற்றிடம் ஏற்பட்டிருக்கு. இவர் சட்டசபைல நாக்க துருத்திக்கிட்டு நின்னாரு இல்லையா, அந்த எனர்ஜியோட இன்னைக்கு இருந்தா, பல பேர் கட்சி ஆரம்பிச்சுருக்க மாட்டாங்க."  

முழு வீடியோ பேட்டி...
 

                             

 

 

Next Story

விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்குவதில் தாமதம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
padma bhushan award will be presented to Vijayakanth in the next phase of the ceremony.

மத்திய அரசால், இந்திய குடிமகனுக்கான உயரிய விருதுகளாக பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் என மூன்று அடுக்குகளாக இந்த விருதுகள் இருக்கிறது. இந்த விருதுகளுக்காக மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, சமூக பணி, என பல்வேறு தளங்களில் சிறப்பாக பணியாற்றியவர்களை பரிந்துரை செய்யப்பட்டு பின்னர், விருது வழங்கும் குழுவால் தேர்வு செய்யப்படுகிறார்கள். 

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு கடந்த ஜனவரியில் அறிவித்தது. இதில் மறைந்த நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக அவருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

padma bhushan award will be presented to Vijayakanth in the next phase of the ceremony.

பத்ம விருதுகள் வழங்கும் விழா, டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (22.04.2024) நடைபெற்ற விழாவில் 3 பத்ம விபூஷன், 8 பத்ம பூஷன் மற்றும் 55 பத்மஸ்ரீ விருதுகளும் வழங்கப்பட்டன. அனைவருக்கும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கினார். இதில் பிரபல பாடகி உஷா உதூப் மற்றும் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி ஆகியோருக்கு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும் முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கும் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.

நேற்றைய விழாவில் மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படுவதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு விருது வழங்கப்படவில்லை. அதனால் அடுத்தடுத்த கட்ட விழாக்களில் விஜயகாந்துக்கு விருது வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

தேமுதிக ஒன்றிய செயலாளரை தாக்கிய அதிமுக ஒன்றிய செயலாளர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
AIADMK union secretary attacked DMK union secretary in Karur!

கரூர் மாவட்டத்தில் தேமுதிக  ஒன்றிய செயலாளரை கூட்டணியில் உள்ள அதிமுக ஒன்றிய செயலாளர் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் கடவூர் தேமுதிக தெற்கு ஒன்றிய  செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான ஆல்வின் என்பவர் பாலவிடுதி காவல் நிலையம் அருகே தன் கட்சி நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டு இருக்கையில் அவ்வழியே வந்த அதிமுகவைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் வேண்டுமென்றே ஆல்வின் இடம் வாய் தகராறு செய்துள்ளார்.

இதற்கு ஆல்வின் சாதாரணமாக பதில் அளித்ததையடுத்து ஏற்கனவே தேர்தல் பணப்பட்டுவடாவில் ஏற்பட்ட பகையில் அதிமுக கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளரும் மாவட்ட கவுன்சிலருமான ரமேஷ் நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து காவல் நிலையம் முன்பே கொலை செய்யும் நோக்கோடு ரமேஷ் ஆல்வினை தாக்கி உள்ளார். இதனால் படுகாயம் அடைந்த ரமேஷ் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட ஆல்வின் கூறுகையில், கொலைவெறி தாக்குதல் நடத்திய அதிமுக கவுன்சிலர் ரமேஷை மாவட்ட காவல்துறை கைது செய்திட வேண்டும். அவரை குண்டர் சட்டத்தில் அடைத்திட வேண்டும். அதிமுக, தேமுதிக கூட்டணியில் இருந்தும் அதிமுகவினர்  தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் தான் பெரும் அளவில் மன உளைச்சல் அடைந்ததாகவும் இதற்கு அதிமுக தலைமை பதில் சொல்லியே ஆக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிந்ததும் கூட்டணி முடிந்தது போல அதிமுகவினர் தங்கள் வேலையை காட்ட துவங்க உள்ளனர் என பாதிக்கப்பட்டவருடன் வந்த தேமுதிக நிர்வாகிகள் வேதனையுடன் புலம்பினர்.