Skip to main content

ஜெயலலிதா இறந்த போது, கடைசி நேரத்தில் உங்களை அனுமதிக்காதது ஏன்..? - ஜெ.தீபா விளக்கம்!

Published on 11/06/2020 | Edited on 11/06/2020

 

kj


ஜெயலலிதாவின் சொத்துகள் யாருக்குச் சொந்தம் என்ற கேள்வி மிக நீண்ட காலமாகத் தமிழகத்தில் கேட்கப்படுகின்ற ஒரு கேள்வியாகத் தொடர்ந்து இருந்து வருகின்றது. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அந்தச் சொத்துத் தனக்குத்தான் என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்த நிலையில், சில வாரங்களுக்கு முன்பு ஜெயலலிதாவின் வீட்டை நினைவில்லமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் ஜெயலலிதாவின் வாரிசுகள் என்று தீபாவை நீதிமன்றம் அறிவித்தது. இந்நிலையில் இந்த வழக்குத் தொடர்பாகவும், எதிர்கால நடவடிக்கை தொடர்பாகவும் அவரிடம் பல்வேறு கேள்விகளை நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,
 


ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை நினைவில்லமாக மாற்றும் முயற்சியை அரசு மேற்கொண்டு வரும் சூழ்நிலையில், தற்போது நீதிமன்றம் உங்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஜெயலலிதாவுடன் அந்த இல்லத்தில் வாழ்ந்தவர் சசிகலா. இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 

எந்தக் கால கட்டத்தில் அவருடன் இருந்தார் என்பது மிக முக்கியம். ஜெயலலிதா பிறந்தது 1948ஆம் ஆண்டிம். அவர் சின்ன வயதில் இருந்து பாட்டி சந்தியா உடனும், அண்ணன் ஜெயகுமார் அவர்களுடன் தி.நகரில் இல்லத்தில் ஒரே குடும்பமாக சேர்ந்தே வாழ்ந்து வந்தார். அதன் பிறகு வாங்கிய போயஸ் கார்டன். பிறகுதான் அங்கே சென்றார்கள். 1982 முன்பு அவர் தீவிர அரசியலுக்கு வருவதற்கு முன்பு அனைவரும் கூட்டுக் குடும்பமாகவே வசித்து வந்தார்கள். அதன் பிறகு அவருக்கு அரசியல் ரீதியாக உதவியாளர்கள் மாறி மாறி வந்தார்கள். அதற்குப் பிறகு வந்தவர்கள் தான் சசிகலா. எனவே அவர் பிறந்ததில் இருந்து 35 ஆண்டுகள் வரை கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தவர்தான். எனவே தீவிர அரசியலுக்கு வந்த பிறகுதான் சசிகலா உடனான நெருக்கம் அதிகம் ஆனது. 

நீங்கள் போயஸ் கார்டன் வீட்டிற்குச் செல்ல ஆரம்பித்த காலகட்டத்தில் சசிகலாவின் உறவினர்கள் கூட அங்கே இருப்பார்களா?

90-களுக்குப் பிறகுதான் அவர்கள் வர ஆரம்பித்தது. நான் கூறுவது 80களில் நடைபெற்ற சம்பவம். அவர்கள் உறவினர்கள் இல்லாமல் நாங்கள் மட்டும் எத்தனையோ முறை அவர்களைத் தனியாகச் சந்தித்துப் பேசி உள்ளோம். 
 

 

 


ஜெயலலிதா தீவிர அரசியலுக்கு வந்த பிறகு அரசியல் ரீதியாக நிறைய எதிர்ப்புகளைச் சந்தித்த சமயத்தில் சசிகலா உறவினர்கள் தான் அவர்களுக்கு அரசியல் ரீதியாக உதவினார்கள் என்று சசிகலா குடும்ப உறுப்பினர்கள் தற்போது வரை கூறுகிறார்களே?

அவர்கள் அத்தை(ஜெ) உடன் இருந்ததை நான் மறுக்கவில்லையே. சசிகலா உறவினர்கள் எங்களுக்கு அறிமுகம் ஆனதே எங்கள் அத்தை மூலமாகத்தான். முதல் முறையாக அத்தை விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் இருந்த போதுதான் அவர்களை எல்லாம் மருத்துவமனையில் நான் பார்த்தேன். எனக்குத் தெரிந்து இதுதான் அவர்களுடனான எனது முதல் சந்திப்பு. அத்தைதான் அவர்களை எங்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். 

ஜெயலலிதா இறப்புக்குப் பிறகு கடைசி நேர காரியத்தைச் செய்யக்கூட என்னை அனுமதிக்கவில்லை என்று நீங்கள் ஏற்கனவே கூறியிருந்தீர்கள். ஆனால் உங்கள் சகோதரர் தானே எல்லா காரியங்களையும் செய்தார்? உங்களை மட்டும் புறக்கணிக்க என்ன காரணம் இருக்கிறது?
 

http://onelink.to/nknapp


இந்தக் கேள்விக்கு எனக்கும் கூட விடை தெரியவில்லை. என்ன காரணத்துக்காக புறக்கணித்தார்கள் என்று இன்று வரை எனக்குத் தெரியாது. அத்தையுடன் அவர்கள் 80களின் இறுதியில் இருந்து இருந்தார்கள். அதன்பிறகு 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். அதற்கான காரணம் இன்றைக்கு வரைக்கும் யாருக்கும் தெரியாது. மீண்டும் அவர்கள் வந்தாலும் இந்த வெளியேற்றம் என்பது யாரும் எதிர்பாராமலும், அதிர்ச்சியாகவும் இருந்தது. அதுபோலவே என்னை ஏன் புறக்கணித்தார்கள் என்பதும் மர்மமாகவே இருக்கிறது.