ஒரு வீடு, அதில் வசிக்கும் நான்கைந்து பேர் என ஒரு சிறிய குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்த்து, அக்குடும்பத்தின் முன்னேற்றத்தை உறுதி செய்வதென்பதே மலைக்கவைக்கும் பொறுப்பாக இருக்கும் இன்றைய காலகட்டத்தில், ஒரு நாட்டினையே ஆட்சிசெய்து அதனை முன்னேற்றப்பாதையில் பயணிக்க வைப்பதென்பது அனைவருக்கும் உகந்த பணியாக இருக்க முடியாது. அவ்வாறு மக்களின் நம்பிக்கையைப் பெற்று ஆட்சியைப் பிடித்த பல தலைவர்கள் இந்த கரோனா காலகட்டத்தில் சிறப்பாகவும் சில தலைவர்கள் சற்று சுமாராகவும் செயல்பட்டனர் எனலாம். ஆண்டு முழுவதும் வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருந்த மக்களைச் சிறப்பாக மற்றும் சுமாராகக் கையாண்ட நிஜ பிக்பாஸ்களின் செயல்பாடுகள் பற்றிய ஒரு சிறு அலசலே இப்பதிவு.
ட்ரம்ப்;
தனது பதவிக்காலத்தில், தன் சொந்தநாட்டு மக்களாலேயே அதிகமாகக் கேலி செய்யப்பட்ட அமெரிக்க அதிபர் யார் என்று கேள்வி எழுப்பினால், ட்ரம்ப் என்கிற பதில் அதில் பெருமளவு இடம்பெறும் என்ற நம்பிக்கை பொதுமக்களிடையே காணப்படுகிறது. இந்த வருடம் நடந்துமுடிந்த அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போதே தான் வெற்றிபெற்றுவிட்டதாக ட்ரம்ப்பே செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். தேர்தல் முடிவில் அவர் பக்கம் வெற்றியில்லை என்று தெரிந்தவுடன், ட்விட்டரில் இஷ்டத்திற்கு ஆவேச அரசியல் கருத்துகளை அள்ளித்தெளிக்க அதை ட்விட்டர் நிர்வாகமே தவறு என்று குறிப்பிட 'ஆவேச மொமெண்ட்கள்' அனைத்தும் 'ஆக்வேர்ட் மொமெண்ட்டுகள்' ஆகிப்போனது. உலகமே கரோனாவுக்கு அஞ்சி லாக்டவுனை அமல்படுத்திக் கொண்டிருந்தபோது லாக்டவுனை ஒழிக்க வேண்டும் என்று மும்முரம் காட்டியவர் ட்ரம்ப். இத்தனைக்கும் உலகளவில் அதிகமாக கரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது அமெரிக்காதான்.
பழம்பெரும் ஜனநாயக நாடான அமெரிக்கா இந்த நான்கு ஆண்டுகளில் ட்ரம்ப்பின் பிடியில் வசமாகச் சிக்கியிருந்தாலும், முதல் மூன்று ஆண்டுகளும் நான்காம் ஆண்டுக்கான ட்ரைலர்கள் போல மாறிப்போயின. கரோனாவையும் தாண்டி கருப்பின மற்றும் சிறுபான்மையின மக்களுக்கு எதிரான ட்ரம்ப்பின் நிலைப்பாடு அமெரிக்கர்கள் மத்தியில் அமைதியற்ற தன்மையை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல், அமெரிக்காவின் பொருளாதார உற்பத்தி வரலாறு காணாத அளவு மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்ததும் ட்ரம்ப்பின் இந்தாண்டு ஆட்சியில் தான். தேர்தலில் அதிகாரப்பூர்வமாகத் தோல்வியடைந்தும், அவரது கட்சி மூத்த தலைவர்கள் சக உறுப்பினர்களும் அத்தோல்வியை ஒப்புக்கொண்டபோதிலும் ட்ரம்ப் ஜனநாயக தேர்தலைக் கொச்சைப்படுத்தி, தான் வெற்றிபெற்றுவிட்டதாகக் கூக்குரலிட்டார். ஆதாரங்கள் இன்றி கருத்துகளைத் தெரிவித்தது, சீனாவுடனான உறவில் விரிசலை ஏற்படுத்தியது, கரோனா தடுப்பில் கோட்டைவிட்டது, பொருளாதாரத்தை அதளபாதாளத்தில் தள்ளியது, தேர்தல் முடிவில் பிடிவாதம் காட்டியது என இவ்வாண்டு முழுவதும் அயராது பல காரியங்களைச் செய்த ட்ரம்ப், இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பாய், தண்டனை பெற்ற தனக்கு வேண்டியவர்களுக்கெல்லாம் தற்போது அவசர அவசரமாக மன்னிப்பும் வழங்கி வருகிறார்.
போரிஸ் ஜான்சன்;
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற வேண்டுமா என்பது குறித்து நடைபெற்ற மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பின் போது, பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறவேண்டும் என்று வலியுறுத்திப் பிரச்சாரம் செய்தவர் போரிஸ் ஜான்சன். அவர் இங்கிலாந்து பிரதமராகப் பதவியேற்க இந்தப் பிரச்சாரம் மிகமுக்கிய காரணம். இதுவரை பதவி வகித்த அத்தனை பொறுப்பிலும் சர்ச்சையைக் கிளப்பி வந்த இவர், இங்கிலாந்தின் பிரதமரான பின்பும் சர்ச்சைகளை விடாது பிடித்துக்கொண்டார். கரோனா இங்கிலாந்தில் தீவிரமாகப் பரவியதற்குக் காரணம் அங்கிருக்கும் மக்கள் அரசாங்கத்தில் விதிகளைச் சரியாகப் பின்பற்றவில்லை என்ற விமர்சனம் உலாவுகிறது. ஆனால், பிரதமரே இதனை அசால்ட்டாக கையாண்டதால்தான் மக்களும் அப்படி அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று போரிஸ் மீது விமர்சனம் வலுவாக இருக்கிறது.
பொது இடங்களில் அனைத்து மக்களுக்கும் தேவையாக இருந்த கரோனா டெஸ்ட் முகாம்களை எடுத்துவிட்டு, மருத்துவமனையில் மட்டும் இனி டெஸ்ட் எடுக்கப்படும் என்று மாற்றிய திட்டத்தால் பலர் அவதிக்குள்ளானர். கரோனா தீவிரம் அடையும் வரை எந்த ஒரு பெரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் பிரதமர் போரிஸின் அரசு எடுக்கவில்லை என்பதுதான் அவர்மீதான முக்கிய குற்றச்சாட்டு. இரண்டாவது லாக்டவுன் அவசியம் என்று ஆலோசகர்கள் சொன்னபோது அதனைக் கண்டுகொள்ளாமல் ஒரு மாதம் கழித்து கரோனா மீண்டும் தீவிரமடைந்த பின்பு லாக்டவுனை அமல்படுத்தினார். இதுமட்டுமல்லாமல் 300 வருடத்தில் இல்லாத அளவுக்குப் பொருளாதார வீழ்ச்சி, பிரெக்ஸிட் விவகாரத்தில் நீடிக்கும் இழுபறி ஆகியவை இவ்வாண்டு அவரது செயல்பாட்டில் எக்கச்சக்க சரிவுகளை ஏற்படுத்தியது எனலாம்.
ஜெய்ர் போல்சனாரோ;
அமெரிக்காவுக்கு அருகில் இருப்பதாலா என்னவோ அதிபர் ட்ரம்ப், பிரேசில் நாட்டு அதிபர் ஜெய்ர் போல்சனாரோ ஆகிய இருவரும் பல வகைகளில் ஒத்துப்போகின்றனர். கரோனா காலகட்டத்தில் பலரும் கதிகலங்கி, இதிலிருந்து தப்பிப்பது எப்படி என யோசித்தபோது, தனது ஆதரவாளர்களுடன் பேரணி நடத்தி, அதன் விளைவாக கரோனாவாலும் பாதிக்கப்பட்டார் ஜெய்ர் போல்சனாரோ. வைரஸால் பலர் பாதிக்கப்பட்டிருந்தாலும் பள்ளிகளைத் திறக்கவும், அலுவலகங்களைத் திறக்கவும் திட்டமிட்டார் ஜெய்ர் போல்சனாரோ என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். உலகத்தின் நுரையீரல் என்று சொல்லப்படும் அமேசான் காட்டை அழித்து அங்கு கார்ப்பரேட்களுக்கு அனுமதி கொடுத்து அதன் மூலமாக மக்களுக்கு வேலைவாய்ப்பைத் தேடித் தருவேன் என்று அவர் பேசியபோதே பிரேசில் மக்கள் யோசிக்கத் தவறிவிட்டனர் எனலாம்.
கரோனா வைரஸ் பரவல் என்பது ஊடகத்தின் ட்ரிக், வைரஸெல்லாம் ஒன்றுமில்லை என்று மக்களுக்கு அசட்டுத் தைரியம் கொடுத்து ட்ரம்ப்புக்கு டஃப் கொடுத்தார். பிரேசிலிய மக்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படாது, அதனால் அனைவரும் கண்டிப்பாகப் படிக்க வேண்டும் என்றெல்லாம் கரோனா தீவிரமாகப் பரவிய சமயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் பள்ளியைத் திறக்க இவ்வாறு பேசினார். இவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்க மற்றொரு பக்கம் கரோனா அச்சுறுத்தலைப் பயன்படுத்தி அமேசான் காட்டை அழிக்கும் பணிகளில் சிலர் மும்முரமாக இறங்கினர். இவ்வாறு, அசட்டுத் தைரியத்தால் கரோனாவை அதிகரிக்க விட்டது, அமேசான் காட்டின் அழிப்பைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காமல் அந்நாட்டு மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடம் விமர்சனத்திற்கு உள்ளானது என இவ்வாண்டைக் கழித்துள்ளார் ஜெய்ர் போல்சனாரோ.
ஏஞ்சலா மெர்கல்;
நெருக்கடி காலகட்டத்தில் திறம்படச் செயல்பட இவரைப் போன்ற ஒரு தலைவரை தற்போதைய காலகட்டத்தில் காண்பது அரிது. பொருளாதார நெருக்கடி, கடன் நெருக்கடி, அகதிகள் பிரச்சனை, கரோனா நெருக்கடி என எந்தவித அச்சுறுத்தல் வந்தாலும் அச்சமின்றி துணிவுடன் மக்களுக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதில் வல்லவர் என இவ்வாண்டில் பாராட்டப்பெற்றவர். மார்ச் மாதத்தில், கரோனாவின் தீவிரத்தை உணராமல் இருந்த பல உலக தலைவர்களுக்கு மத்தியில் இவர் ஜெர்மன் மக்களிடையே உரையாற்றும்போது, இந்தநோய் 60 சதவீதம் முதல் 70 சதவீதம் மக்களைத் தாக்கக் கூடும் என நடைமுறை உண்மையை எடுத்துரைத்ததுடன், மக்களுக்குத் தேவையான நம்பிக்கையையும் தனது அடுத்தடுத்த உரைகள் மூலம் விதைத்தார். பல்வேறு நாடுகளின் தலைவர்களும் கரோனா குறித்த தகவல்களை எவ்வாறு மக்களிடம் எடுத்துரைப்பது என பயந்துகொண்டிருந்த காலத்தில், இந்த தகவலைத் துணிச்சலாக அறிவித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி யதார்த்தத்தை உணர்த்தினார். கரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவரைச் சந்தித்த பிறகு மெர்கல் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டதன் மூலம் மற்ற தலைவர்களுக்கு ஒரு முன்னுதாரனமாக திகழ்ந்தார்.
ஜெர்மனிதான் கரோனா அச்சுறுத்தல் தீவிரமடையும் முன்பாகவே சமூக இடைவெளி மற்றும் தீவிரமான பரிசோதனை முறையை அமல்படுத்தியது. ஜெர்மன் விஞ்ஞானிகள் ஜனவரி மாத மத்தியில் நம்பத்தன்மையான பரிசோதனை முறையைச் செயல்படுத்தினர். இதன் மூலம் ஒரு வாரத்திற்கு 5 லட்சம் பரிசோதனைகள் வரை அந்நாட்டில் மேற்கொள்ள முடிந்தது. வேகமான ஆராய்ச்சிகள், அடுத்தடுத்த நடவடிக்கைகள் என கரோனாவைக் கட்டுக்குள் வைத்திருந்த ஏஞ்சலா மெர்கல், தற்போது அந்நாட்டில் கரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் மீண்டும் கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளார். இரண்டாம் அலை மற்றும் மூன்றாம் அலைகளில் சிக்கி ஐரோப்பியக் கண்டம் முழுவதும் திணறிக்கொண்டிருக்கும் நேரத்தில் இம்மாத தொடக்கத்தில் ஏஞ்சலா மெர்கல் ஜெர்மனி மக்களுக்கு ஆற்றிய உரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தனது வழக்கமான பாணியிலிருந்து சற்று விலகி உணர்வுபூர்வமாக அவர் ஆற்றிய அந்த உரையில், 'கிறிஸ்துமஸ்க்கு முன்னர் தங்கள் சமூக தொடர்புகளைக் குறைத்துக்கொள்ளுங்கள் இல்லையேல் உங்கள் அன்புக்குரியவர்களை இழக்கும் அபாயம் ஏற்படலாம்' என்றார். நிதி நெருக்கடி, பிரெக்ஸிட்க்கு பிறகான வணிக ஒப்பந்தங்கள், கரோனா தடுப்பு என இவ்வாண்டின் அனைத்துச் சோதனைகளையும் இரும்பு பெண்மணியாகத் திறம்படக் கையாண்டு உலக அரங்கில் பாராட்டுகளைப் பெற்றுள்ளார் ஏஞ்சலா மெர்கல்.
ஜெசிந்தா ஆர்டன்;
உலக வரைபடத்தில் தேடும்போது, ஆஸ்திரேலியாவின் அருகே தெரியும் ஒரு சிறுபுள்ளி நியூசிலாந்து. மக்கள் தொகை மிகவும் குறைவான மற்றும் பொருளாதாரத்தில் மிகப்பெரிய இலக்கை நோக்கி வளர்ந்து வருகின்ற இந்த குட்டி நாட்டை, கரோனா காலத்தில் உலகளவில் கவனம் பெற வைத்த பெருமை அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டனையே சாரும். இளம் வயது பெண் அரசியல்வாதி, பிரதமரான பின்பு ஒரு குழந்தைக்குத் தாயான ஜெசிந்தா ஆர்டன், தன்னுடைய கரோனா தடுப்பு நடவடிக்கையின் மூலம் நியூசிலாந்தை உலகிற்கான நோய்த் தடுப்பு நடவடிக்கை மாதிரியாக மாற்றினார். குறைந்தளவிலான மக்கள் தொகை அதனால்தான் அங்கு கரோனா பரவவில்லை என்றும் சிலர் கூறுகின்றனர். ஆனால், எந்தளவில் மக்கள் இருந்தாலும் வைரஸின் ஆபத்தை உணர்ந்து மிகவும் முன்னெச்சரிக்கையாகத் தனது அரசு இயந்திரத்தை இயக்கினார் ஜெசிந்தா.
பெருவாரியான உலக நாடுகள் லாக்டவுனில் இருந்தபோது, சிறப்பான நிர்வாகத்தால் தனது நாட்டு மக்களை இந்த பெரும் பாதிப்பிலிருந்து காப்பாற்றியது மட்டுமின்றி, பழுதடைந்து கிடந்த மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் வெகுவிரைவில் புத்துயிர் ஊட்டினார். இனி மைதானங்களுக்குச் சென்று நமக்குப் பிடித்த விளையாட்டுப் போட்டிகளை எப்போது விளையாடுவோம், அதை எப்போது ஆரவாரமாகக் கைதட்டி ரசிப்போம் என உலகநாடுகளின் மக்கள் கவலைப்பட்டுக்கொண்டிருந்த காலகட்டத்தில் நியூசிலாந்து மக்கள் ஜாலியாக ரக்ஃபி போட்டியை நேரடியாக மைதானத்தில் கண்டுகளித்துக் கொண்டிருந்தனர். அந்தளவிற்கு ஜெசிந்தாவின் அரசாங்கம் கரோனாவின் நெருக்கடியைச் சரியான நேரத்தில் சிறப்பாகக் கையாண்டு, நியூசிலாந்து மக்களின் நம்பிக்கையையும் பெற்றது. ஜெசிந்தாவின் இந்த மிகப்பெரிய உழைப்புக்குப் பலனாக, அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை அவருக்குப் பரிசாக அளித்தனர் அந்நாட்டு மக்கள்.
மூன் ஜே இன்;
ஜெசிந்தாவை போலவே தனது சிறப்பான செயல்பாடுகளால் மக்களைக் கவர்ந்து தேர்தல் வெற்றியைப் பரிசாகப் பெற்ற மற்றொருவர் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன். சீனாவுக்கு மிக அருகில் இருக்கும் தென்கொரியாவில், கடந்த பிப்ரவரி மாதம் முதன்முதலாக கரோனா தொற்று கண்டறியப்பட்டதிலிருந்து வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டது அந்நாட்டு அரசு. பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் பலனாக ஏப்ரல் மாதத்தின் மத்தியில் அந்நாட்டில் ஒரு நாள் சராசரி பாதிப்பு எண்ணிக்கை வெறும் 10 என்றானது. ஏப்ரல் 20 முதல் பொது முடக்கத்தில் சில முக்கியத் தளர்வுகளை தென்கொரியா அமல்படுத்தியது. இதன்படி பார்கள், நைட் கிளப்புகள், உள்ளரங்கு விளையாட்டுகள், தனியார் கல்வி நிறுவனங்கள் ஆகியவை இயங்கத்தொடங்கின. சார்ஸ் பரவல் கொடுத்த அனுபவம், தொழில்நுட்ப பயன்பாடு உள்ளிட்டவற்றைச் சரியாகப் பயன்படுத்தி துரிதமாக கரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவந்தது தென்கொரிய அரசு. அரசின் இந்த பணி மக்கள் மத்தியில் ஆளும்கட்சியின் செல்வாக்கை உயர்த்திப்பிடித்த நிலையில், இதன்பலனாக, அந்நாட்டில் நடந்த அதிபர் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியையும் பெற்றார் மூன் ஜே இன். தற்போது தென்கொரியாவில் கரோனா அடுத்த அலை துவங்கியுள்ளதாகக் கருதப்படும் சூழலில், இதனைக் கட்டுப்படுத்தவும் தற்போது ஆயத்தமாகி வருகிறது அந்த அரசு.