Skip to main content

"விஜயபாஸ்கரை போல் ஒரு உத்தமர் உலகில் இல்லை... ஊழல் என்றால் என்ன என்பதே அவருக்கு தெரியாது.." - பெங்களூர் புகழேந்தி

Published on 17/11/2021 | Edited on 17/11/2021

 

l;

 

வடகிழக்கு பருவமழை ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து தமிழ்நாடு இன்னும் முழுவதும் மீளாத நிலையில், பல்வேறு அரசியல் சர்ச்சைகள் தற்போது அதிமுகவில் எழுந்துள்ளன. தனித்தனி அறிக்கைகள், தனியாகப் பேட்டி என அதிமுக ஒருங்கிணைப்பளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் செயல்பட்ட நிலையில், நேற்றுமுதல் (16.11.2021) இருவரும் ஒன்றாக மழை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்வது, நிவாரணம் வழங்குவது என அவர்களின் செயல்பாடுகளில் புதுவித மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இதுதொடர்பான கேள்விகளை நாம் அதிமுக முன்னாள் செய்தித்தொடர்பாளர் புகழேந்தியிடம் கேள்விகளாக முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடி பதில்கள் வருமாறு,

 

இந்த மழை வெள்ளத்தில் கூட ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனியாக செயல்படுகிறார்கள். நிவாரணம் வழங்குவது கூட ஆளுக்கு ஒரு இடத்தில் வழங்குகிறார்கள். இவர்கள் எப்படி கட்சியை ஒன்றாக வழிநடத்த முடியும் என்று சில நாட்களுக்கு முன்பு குற்றச்சாட்டு கூறியிருந்தீர்கள். ஆனால் இன்று கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புக்களை இருவரும் ஒன்றாகப் பார்வையிட்டதோடு, இருவரும் இணைந்தே நிவாரணம் வழங்கினார்கள். இதுதொடர்பாக பேசிய பன்னீர்செல்வமும், எங்களுக்குள் எந்தப் பிரிவும் இல்லை, ஒன்றாகவே செயல்படுகிறோம் என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

 

உங்களுக்கு ஒரு உண்மையைச் சொல்ல வேண்டும். சென்னையில் மழை பாதிப்பு பல்வேறு இடங்களில் இருந்தாலும் பன்னீர்செல்வத்தால் பல இடங்களுக்குச் சென்று பாதிப்புகளைப் பார்க்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. ஏனென்றால் மாவட்டச் செயலாளர்கள் அவருக்கு சென்னையில் ஒத்துழைப்பு அளிப்பதில்லை. சென்னையில் உள்ள மாவட்டச் செயலாளர்களை இபிஎஸ் தன்வசப்படுத்தியுள்ளார். பன்னீர்செல்வத்தால் வேளச்சேரி வேண்டுமானால் செல்ல முடியும். அங்குதான் அசோக் இருக்கிறார். மற்ற இடங்களுக்கு அவரால் செல்ல இயலாது. இதற்கும் நான் ஒரு உதாரணம் கூறுகிறேன். சில மாதங்களுக்கு முன்பு அதிமுக தலைமையகத்தில் சென்னையைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்ட நிலையில், பன்னீர்செல்வம் புதுவீட்டில் பால் காய்ச்ச வேண்டி இருந்ததால் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்று அறிவிக்கப்பட்டிருந்தது. நான் கூட அப்போது ஒரு பேட்டியில் கூறியிருந்தேன், ‘என்னப்பா 24 மணி நேரமுமா ஒரு தலைவர் பால் காய்ச்சுகிறார்’ என்று கேட்டிருந்தேன். இவர்களுக்குள் ஒற்றுமை இல்லை, அதை இவர்கள் மறைக்கப் பார்க்கிறார்கள். 

 

இவ்வளவு நாட்களாக தனித்தனியாக அறிக்கை வெளியிட்டவர்கள், தனித்தனியாக பார்வையிட்டவர்கள் தற்போது ஒரே இரவில் ஒன்றாக வருகிறார்கள், நிவாரணம் வழங்குகிறார்கள் என்றால் அதில் ஏதேனும் அரசியல் காரணம் இருக்கும் என்று எதிர்பார்க்கிறீர்களா? 

 

முன்பே கூறியபடி சில மாவட்டங்களில் மாவட்டச் செயலாளர்கள் இருவரும் வந்தால் எந்தப் பிரச்சனையும் இல்லை என்ற மனநிலையில் இருக்கும்போது அவர்கள் அங்கே செல்கிறார்கள். இவர்கள் டெல்டா பகுதியில் சுற்றுப்பயணம் செய்கிறார்கள். ஆட்சியில் இருக்கும்போது விவசாயிகளுக்காக என்னென்னவோ செய்ததாக கூறினார்கள். ஆனால் அங்கே இவர்கள் வெற்றிபெற்றார்களா? திருச்சயில் ஆரம்பித்து, நாகை, புதுக்கோட்டை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 34 தொகுதிகளில் இவர்கள் வெறும் 4 தொகுதியில் வெற்றிபெற்றார்கள். இதுதான் இவர்கள் விவசாயிகளுக்கு செய்த நலத்திட்டங்களின் மூலம் கிடைத்த வெற்றியா? அதுவும் வெற்றிபெற்ற அந்த நான்கு பேரும் யார் என்று பார்க்க வேண்டும். நன்னிலத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் வெற்றிபெற்றுள்ளார். 

 

அவர் ஒன்றும் பெரிய ஊழல் செய்துவிடவில்லை. அரசி, சக்கரை என சில பொருட்களில் 5 அல்லது 10 ரூபாய் மார்க்கெட் விலையைவிட கூடுதலாக கொள்முதல் செய்து விற்கப்பட்டுள்ளது. அவர் வெயிட்டான அமைச்சர் என்பதால் வெற்றி அவருக்கு எளிதாக கிடைத்தது. அடுத்து ஓ.எஸ். மணியன். மக்களால் கல்லைக் கொண்டு எறிந்து ஓடவிடப்பட்ட அவர், இன்றைக்கு வெற்றிப்பெற்றுள்ளார். அடுத்து ஒரத்தநாட்டில் வைத்திலிங்கம் வெற்றிபெற்றுள்ளார். அவர் கூட கடந்த தேர்தலில் தோல்வியடைந்ததால் வெற்றிபெற்றார் என்று வைத்துக்கொள்ளலாம். அடுத்து விராலிமலையில் விஜயபாஸ்கர் வெற்றிபெற்றுள்ளார். அவர் போன்ற ஒரு நல்ல மனிதரை இந்திய அரசியல் வரலாற்றில் பார்க்க முடியாது. ஊழல் என்றால் என்னவென்றே தெரியாத ஒரு மனிதர் அவர். வேலை மாற்றம், மருத்துவ பொருட்கள் வாங்குதல் என எதிலும் ஒரு பைசா கூட லஞ்சம் வாங்காத. அப்படி என்றால் என்ன என்றே தெரியாதவர் அவர். அவரும் அங்கே வெற்றிபெற்றுள்ளார். டெல்டாவில் உள்ள 34 இடங்களில் 30 இடங்களை இவர்கள் தலைமையில் பறிகொடுத்துள்ளனர். அதிமுக தோல்விக்கு இது மிக முக்கிய காரணமாக இருந்தது. 

 

நீங்கள் இவர்கள் இருவரும் பல இடங்களில் ஒன்றாகப் போகிறார்கள், நிவாரணம் வழங்குகிறார்கள் என்று ஆச்சரியமாக சொல்கிறீர்கள். ஆனால் இவர்கள் எப்படி செல்கிறார்கள், பிரச்சார வாகனங்களில் ஆறுதல் சொல்ல போகிறார்கள். நிவாரணம் வழங்க இவர்கள் செல்கிறார்களா அல்லது ஓட்டு கேட்க செல்கிறார்களா என்று தெரியாத வண்ணம் இவர்கள் நடவடிக்கைகள் இருக்கிறது. மழையில் என்ன செய்வது என்று தெரியாமல் அவனவன் தண்ணீரில் மிதந்து செல்கிறார்கள். ஆனால், இவர்கள் எவ்வித பொறுப்பும் இல்லாமல் ஜாலியாக பிரச்சார வாகனத்தில் செல்கிறார்கள். ஏன் உங்கள் கால்கள் சேற்றில் படாதா? அன்றைக்கு காமராஜ் வண்டி ஓட்டும்போது எடப்பாடி பழனிசாமி ஜாலியாக உட்கார்ந்திருந்தார். விஜயபாஸ்கர் மாட்டு வண்டி ஓட்டியபோது எடப்பாடி பழனிசாமி ராஜா மாதிரி அமர்ந்திருந்தார். இப்போது என்ன கேடு, அதே மாதிரியே செல்ல வேண்டியதுதானே, இவர்கள் யாருக்கும் மக்கள் மீது அக்கறை இல்லை, கட்சி மீதும் பற்று இல்லை. இவர்களுக்கு மக்கள் விரைவில் பதிலளிப்பார்கள்.