Skip to main content

2 வருடங்கள் ஆகப்போகும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை... சொன்னதும்.. நடந்ததும்..

Published on 13/10/2018 | Edited on 13/10/2018

2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி நேரம் 8மணி. இந்தியாவின் வரலாற்றில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று கூறி நடப்பில் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் தாள்களை தடைசெய்யும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். திட்டம் அறிவிக்கப்பட்டபோது அதை ஒரு தரப்பினர் ஆதரித்தனர், ஒரு தரப்பினர் எதிர்த்தனர். ஆனால் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்ட சில நாட்களில் அதை ஆதரித்த மக்களில் சிலரே தீவிரமாக எதிர்க்க தொடங்கினர். இதற்கு காரணம் திட்டம் அமலுக்கு வந்த விதம் தான்.

 

nn

 

பழைய 500 மற்றும் 1000 ரூபாய்களின் மீது பணமதிப்பு இழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு 2 வருடங்கள் ஆகப்போகின்றன. அதன் தாக்கமோ இன்னும் அடங்கியபாடில்லை. அந்த திட்டத்திற்கு கூறப்பட்ட இலக்குகள் மற்றும் பொதுவாக பொருளாதாரம் மீதான அதன் தாக்கம் எப்படிப்பட்டது என்பதை மதிப்பிடுவது அவசியமான ஒன்று.

 

கடந்த 2017-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதியை பா.ஜ.க. கருப்பு பண எதிர்ப்பு நாளாகவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் வரலாற்றின் கருப்பு நாளாகவும் அனுசரித்தன. வழக்கம்போல அரசியல் கட்சிகள் மாறி மாறி குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றன. சற்று ஆராய்ந்து பார்த்தால் இந்த திட்டம் ஒரு வகையில் நன்மையையும், மற்றொரு வகையில் மிகப்பெரிய பாதிப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.

 

கருப்பு பண ஒழிப்பு, வரி செலுத்துவோர் எண்ணிக்கையை அதிகரித்தல், ஊழலுக்கு எதிரான முக்கிய நடவடிக்கை, பயங்கரவாத கும்பலிடம் நடமாடும் கள்ளப்பணத்தை தடுத்தல் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் என பல மிகபெரிய நோக்கங்களுடன் அமலுக்கு வந்தது பணமதிப்பிழப்பு நடவடிக்கை. குறிப்பிட்ட அனைத்து நோக்கங்களும் முழுமையாக வெற்றிபெறவில்லை. இருப்பினும் அரசாங்க அறிக்கைகளின்படி, வரி கட்டாமல் பணத்தை பதுக்கி வைத்தவர்களின் எண்ணிக்கை சற்று குறைக்கப்பட்டுள்ளதாகவும். வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வழக்கமான வருடாந்திர அதிகரிப்பை விட 80% அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

பொருளாதார மந்தநிலைக்கு பணமதிப்பிழப்பும், ஜி.எஸ்.டி.யும் முக்கிய காரணிகளாக பார்க்கப்படுகிறது. 2017-ல் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி) 5.7 சதவீதமாக வீழ்ச்சியடைந்த நிலையில், பொருளாதார மந்த நிலை உண்மையில் புறக்கணிக்கப்படவில்லை. 2017-18ல் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 7% ஆக குறைந்துள்ளது. 

 

nn

 

இந்தியாவை டிஜிட்டல் மயமாக்கல் பணமதிப்பிழப்பின் ஒரு முக்கிய அம்சமாக இருந்தது. அந்த முயற்சி ஓரளவு வெற்றி கண்டுள்ளது. பல அத்தியாவசிய பொருட்களை வாங்கும் இடங்களில் டிஜிட்டல் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. பெரும்பாலானோர் வேறுவழியின்றி டிஜிட்டல் பரிமாற்றங்களை நோக்கி திரும்பினர். ஆனால் டிஜிட்டல் பரிமாற்றங்களில் பல முறைகேடுகளுக்கு வாய்ப்புகள் உள்ளன. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சொன்னது போல இது பல இடங்களில் சட்டபூர்வ கொள்ளைக்கு வழிவகுத்துள்ளது. 

 


இன்று முறைப்படுத்தப்படாத நிறுவனங்களில் செல்லாகாசு மற்றும் ஜி.எஸ்.டி. ஆகியவை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்தியாவில் உள்ள மொத்த நிறுவனங்களில் 90% நிறுவனங்கள் முறைப்படுத்தப்படாத நிறுவனங்கள் என்பதும், 10% நிறுவனங்கள் மட்டுமே முறைப்படுத்தப்பட்ட நிறுவனங்கள் என்பதும் இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. வேலையின்மை, மந்தமான தொழில் என்று சிறு, குறு தொழில் நிறுவனங்களை வெகுவாக பாதித்துள்ளது பணமதிப்பிழப்பு நடவடிக்கை. 

 


பெருமளவில் கருப்பு பணம் பிடிபடும் என்று அரசு எதிர்பார்த்தது. ஆனால் 99% அளவிலான பணம் மீண்டும் வங்கிக்கு வந்தது. இது அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கள்ள பணம் ஒழியும், ஊழல் அகற்ற பணமதிப்பிழப்பு நடவடிக்கை உதவும் என்று காரணம் சொல்லப்பட்டது. நாளுக்கு நாள் கள்ள நோட்டுகள் பிடிக்கபடுகினறன, ஊழல் குறைந்ததாக எந்த புள்ளிவிவரமும் சொல்ல வில்லை. 

 

பொருளாதார மந்தநிலை, வேலை வாய்ப்பு, நடுத்தர, சிறு மற்றும் நுண் நிறுவனங்கள் ஆகியவற்றில் செல்லாகாசு பெரும் பாதிப்புகளை உருவாக்கியுள்ளது. இந்த திட்டம் சாதித்தது சில; ஆனால் சோதித்தது பல. ஒரு திட்டத்தினை அமல்படுத்துவதற்கு முன்னர் அதனுடைய விளைவுகளை அலசி ஆராய்ந்து அமல்படுத்துவது அவசியம் என்பதை இந்த திட்டம் எடுத்துக் காட்டியுள்ளது. மக்களுக்கு நன்மை புரியும் அனைத்து நிகழ்வுகளும் பாராட்டத் தக்கவையே. ஆனால் எந்த மாதிரி திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதை உணர்ந்து அரசு செயல்படுவதே அனைவருக்கும் நன்மை பயக்கும்.