Skip to main content

5154 சடலங்களை சுமந்த 515 கணேசன்.. பாராட்ட மறந்த தமிழகம்.. கௌரவித்த கர்நாடகம்...

Published on 28/09/2018 | Edited on 28/09/2018
515 ganesan

 

ஒரு தனி மனிதன் 46 ஆண்டுகளில் 5154 சடலங்களை சுமந்து இருக்கிறார் என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதா.. வேண்டாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. உண்மை தான்.. புதுக்கோட்டை வட்டம் ஆலங்குடி 515 கணேசன் தான் சடலங்களை சுமந்தவர்.. சுமந்து கொண்டும் இருப்பவர்..


பிணத்தை காரில் ஏற்றினால் காரை பிசாசுகள் வழிமறிக்கும்.. கார் ஓடாது என்று சொல்லப்பட்டு கொண்டிருந்த காலம் அது.. அந்த நேரத்தில் தொடங்கி இன்று வரை சடலங்களை இலவசமாக தன் சொந்த செலவில் ஏற்றிக் கொண்டு இருக்கிறார் கணேசன்...


அந்த அனுபவங்களை 515 கணேசனே சொல்கிறார்.. 1965 கால கட்டம் எனக்கு 15 வயது. நான் ஒரு காருக்கு கிளீனர். அப்ப ஆலங்குடியில 2 கார் இருந்துச்சு. யாராவது ஆஸ்பத்திரியில இறந்துட்டா அவங்களை இந்த கார்கள்ல ஏத்தமாட்டாங்க அதனால தள்ளுவண்டியில வச்சு தள்ளிகிட்டு போவாங்க. அதை பார்த்திருக்கேன். ஒரு நாள் ஒரு பெண் தன் கணவன் இறந்து அவரை தூக்கி போக முடியாம கதறிக்கிட்டு கிடந்ததை பார்த்தேன். மனசு வலிச்சது. அவங்களுக்கு உதவி செய்ய யாரும் இல்லை.


அப்பவே பழைய இரும்பு  வியாபாரம்  செய்து  சேர்த்து  வைத்திருந்த  காசுல  1968 ல ரூ.17 ஆயிரத்துக்கு (பதிவு  எண்)  டி.எம்.இசட். 515. கொண்ட  ஒரு கார் வாங்கினேன். அப்ப பெட்ரோல் லிட்டர் ரூ. 2.30. அந்தக்  காரை  அவசரத்துக்கு  மட்டும்,  யாருக்கிட்டையும்  வாடகை  வாங்காம ஓட்டனும் அப்புடிங்குறதுதான்  எனது  லட்சியம். 

 

515 ganesan


 

அதன்படி   பெரும்பாலும ஏழைகள், அனாதை பிணம் ஏத்துறது, விபத்து, பிரசவம்  இதுக்குத்தான் என்னை  அழைப்பாங்க. அனாதை பிணம், அழுகிய நிலையில கிடக்குறது, எழும்புக்கூடு இதெல்லாம் போலீஸார் அழைச்சா போவேன்.  அங்கே பெரும்பாலும் பிணத்தை  தூக்கி வண்டியில  போடுவதற்கே ஆள்  இருக்க மாட்டாங்க. இருந்தாலும் துரு நாற்றம் தாங்க முடியாம தூர ஓடிருவாங்க. அதெல்லாம் நானே  துணிச்சலா அள்ளிப் போட்டுக்கும்  வந்துருவேன். எத்தனையோ  அனாதை  பிணங்களை  நானே என் சொந்த செலவுல  குழிவெட்டி  அடக்கம் செய்திருக்கேன். யார்கிட்டயும் நானா  காசு கேட்கமாட்டேன்.  யாராச்சும்  மனசு  வச்சு  டீசல் போடுறதுக்கு  மட்டும்  காசு  கொடுப்பாங்க.


ஒரு தடவை  கீரமங்கலம் சுடுகாட்டுல போய் பிணத்தை  ஏத்திக்கும்  வரனுமுன்னு   போலீஸ்   அழைச்சாங்க.  இரவு நேரம்..  போனா   சுடுகாட்டுல  பிணம்  எரிஞ்சுக்கும் இருக்கு. பிரச்சினை என்பதால   போலீஸைப்  பார்த்ததும்  அங்கிருந்த  எல்லாரும்  ஓடிட்டாங்க. அப்புறம் என்ன செய்யுறது. நான்தான்  தண்ணிங்கொண்டு  வந்து  ஊற்றி  அணைச்சுட்டு அரைகுறையாக  எரிந்த  நிலையில இருந்த அந்த பிணத்தை நானே தூக்கி  காருல ஏத்திக்கும்வந்தேன்.


அப்புறம்,..   ஒரு இடத்துல இரவு நேரத்துல காட்டுக்குள்ள அழுகிய நிலையில கிடந்த  சடலத்தை தூக்கச் சென்றபோது  அதை  திண்ணுக்கும்  இருந்த  நரிகளெல்லாம்  என்னைய  விரட்டிடுச்சு.. தப்பி ஓடிமரத்துல ஏறிக்கிட்டேன்.


 

515 ganesan




அதே மாதிரி  சென்னையில  இருந்து  ஒரு  பிணத்தை  ஏத்துறதுக்குப்  போயிருந்தேன். ஆலங்குடியில இருந்து  நான்  டீசல்  போட்டுக்கும்  வந்துட்டேன். பிணத்தை ஏத்திகிட்டு ஊருக்கு திரும்பி போக நீங்க  டீசல்  மட்டும் போடுங்க  ஊருக்கு போயிருவோம்னு சொன்னேன்.  அந்த அம்மாவிடம்  காசு  இல்லாம  அது போட்டிருந்த  தாலியைக்  கழற்றிக்  கொடுத்து  இதை  அடகு வச்சு  டீசல்  போட்டுக்கும்  வாங்கன்னாங்க….  மனசு  கொதிச்சுப்போச்சுய்யா…  இதுக்கா நம்ம கார் வாங்குனோம்? 


தாலிய வாங்கலையே..  அங்கேயே கடைக்கு கடை கொஞ்சம் வசூல் பண்ணிக்கிட்டு  டீசல்  போட்டுக்கும்  ஊர்  வந்து  சேர்ந்தோம். வம்பன் பண்ணைகிட்ட ஒரு பஸ் விபத்துல ஒருத்தர் செத்துட்டார். அவர் யாருன்னு தெரியல. அவரை என் கார்ல தான் கொண்டு வந்து அடக்கம் செஞ்சேன். அப்பறம் தான் செத்தவரு பாப்பான்விடுதி கருப்பையான்னு அடையாளம் தெரிஞ்சது. அப்பறம் நானே புதைச்ச சடலத்தை தோண்டி எடுத்து கொண்டு போய் அவங்க வீட்ல ஒப்படைச்சேன்.


அப்பறம் மேலாத்தூர்ல ஒரு பொண்ணு கிணற்றில் விழுந்து இறந்துடுச்சுன்னு தகவல் சொன்னாங்க. அதை ஏற்ற நான் காரோட போனேன். அப்ப அங்க நின்ன அவங்க சொந்தகாரங்க எங்க பொண்ணு  எப்ப சாகும்ன்னு பார்தியாடான்னு விரட்டி அடிச்சாங்க. அப்பறம் கொஞ்ச நேரத்துல அவங்களே வந்து என்னை அழைச்சுக்கும் போய் அந்த சடலத்தை ஏத்திவிட்டாங்க.


ஆலங்குடியில குஸ்ட்டம் வந்த பையன் ராசேந்திரன்னு ஒருத்தன் இருந்தான். அவன் என்கிட்ட சொன்னான். அண்ணே நான் செத்துட்டா என்னை யாரும் தூக்கமாட்டாங்க நீயாவது என்னை தூக்கி புதைச்சுடுண்ணேன்னு சொல்லி இருந்தான். அது போல ஒரு நாள் செத்துட்டான். அவங்க வீட்ல உள்ளவங்களே அவனை தொடல.. நான் தான் தூக்கி அடக்கம் பண்ணிட்டு வந்தேன்.


இது மட்டும் இல்லைங்க.. பிரசவம்ன்னாலும் என்னை அழைப்பாங்க. அவசரத்துக்கு நான் தான் போவேன். அதுக்கும் யார்கிட்டயும் காசு வாங்க மாட்டேன். ஆஸ்பத்திரியில கொண்டு போய் இறக்கிவிட்டுட்டு திரும்பி வரும் போது பஸ் இல்லாம காத்துகிட்டு நிக்கிற பயணிகளை ஏத்திகிட்டு அவங்க்கிட்ட டீசலுக்கு காசு வாங்கிடுவேன். மற்ற நேரங்கள்ல வீடு வீட்டுக்கு பழைய இரும்பு வாங்கி வியாபாரம் செஞ்சு அதில் வரும் லாபத்தை சேமிச்சு வச்சு டீசல் போட்டுக்குவேன்.


1992 ல ஆவணம் கைகாட்டியில பெரிய கலவரம் நடந்துச்சே அப்ப எந்த காரும் ஓடல. ஆனா நான் மட்டும் தான் துப்பாக்கி சூடுபட்டு கிடந்த 4 பேரை தூக்கி வந்து ஆஸ்பத்திரியில போட்டேன். அவங்க பிழைச்சுக்கிட்டாங்க. இப்பவும் எப்ப அவரசம்ன்னு அழைச்சாலும் போவேன்.


 

515 ganesan




முன்ன எந்த ஊருக்கு பிணம் ஏத்த வண்டி வேணும்ன்னாலும் ஆலங்குடி போலிசுக்கு ஒயர்லஸ்ல அழைச்சு சொல்லுவாங்க. அவங்க வந்து என்னை அழைச்சுகிட்டு போசங்க. இப்ப தான் செல்போன் வந்துடுச்சே..


இத்தனைக்கும் நான் ஒன்னும் பெரிய வசதியான குடும்பம் இல்லை தம்பி.. என்னோட 18 வயசுல கார் வாங்கி பிணம், ஏத்தினேன். 20 வயசுல எனக்கு கல்யாணம். அப்ப என் மனைவி தெய்வானை வீட்டுக்கு நான் பிணம் ஏத்துறவன்னு தெரியாது. கார் ஓட்றேன்னு நினைச்சிருக்காங்க. பிறகு தெரிஞ்சதும் கொஞ்சம் சங்கடப்பட்டாங்க. பிறகு இதனால என்ன தப்புன்னு உணர்ந்து எனக்கு எப்பவும் துணையா இருக்காங்க. அப்ப முதல் இப்ப வரைக்கும் வாடகை வீட்ல தான் இருக்கேன். சொந்தமா எதுவும் இல்லை.


5 பொண்ணுங்க 4 பொண்ணுங்களை படிக்க வச்சு கட்டி கொடுத்துட்டேன். 5 வது பொண்ணு இஞ்சினியரிங்க படிக்கிறாள். நான் அனாதை பிணங்களை ஏத்துறேன்னு என்னோட சொந்தங்கள் என்னை விட்டு ஒதுங்குச்சு. பிணம் ஏத்துறவன்னு ஏலனமா பேசினாங்க. உறவுகள் கூடி இருக்கிற இடத்துக்கு போனா ஒதுங்கி நின்னாங்க. நான் அதையெல்லாம் பெரிசா எடுக்கல. ஆனா என்னை நேருக்கு நேரா வெட்டியாண்ணு பேசின என் உறவுகளே பிறகு அவங்க வீட்டு சடலத்தை ஏத்தி வந்து போட்டதும் என்னிடம் மன்னிப்பு கேட்டு அழுதாங்க. 


ஒரு முறை என் உறவினர் ஒருத்தர் சொன்னார்.. டேய் கணேசா.. நாம் செட்டியார்டா.. நாம் ஆலயங்கள்.. அன்ன சத்திரங்கள் கட்டி வேண்டியவங்க. எத்தனை செட்டியார்கள் எத்தனை கோயில்கள் கட்டி இருக்காங்க. இந்த இனத்துல பிறந்துட்டு பிணம் தூக்குறியேன்னு என்னை பார்த்து கேட்டார்.. 


கோயில் கட்ட எத்தனையோ பேர் இருக்கீங்க. அதுல அவங்களுக்கு சந்தோசம் கிடைக்குதுன்னா.. எனக்கு அனாதை பிணங்களை சுமக்கிறதுல தான் சந்தோசம் கிடைக்குதுன்னு சொன்னேன். அத்தோட அவர் போயிட்டார். ஆனா இப்ப அவங்களும் என்னை மதிக்கிறாங்க. எனக்கு வருமானம் இல்லாம இருக்கும் போதெல்லாம் எந்த ஊருக்குள்ள என் கார் போனாலும் அந்த ஊர்ல இருக்கவங்க சோளம், கம்பு, கிழங்குன்னு எல்லா தானியங்களும் கொடுத்து என் குடும்பத்தை பசியின்றி பிழைக்க வச்சாங்க.


இதுவரைக்கும்  5154 பிணங்களை  ஏத்திருக்கேன். நான் தான்  இந்தியாவிலேயே  அதிகமாக ஏத்திருப்பேன்னு  நினைக்கிறேன். விபத்து, அவசர  நிலையில  ஏத்திக்கும் போனதுல  1000 பேர் பிழைச்சிருப்பாங்க… 2000 பேருக்கு  பிரசம்  நடந்திருக்கும். கார்  பழையதுதான்  பார்க்க  டப்பா  மாதிரிதான்  இருக்கும். இதுவரைக்கும் ஒரு  இடத்துல  கூட  பழுதாகி நின்றதில்லை. 20 கி.மீட்டரை 13 நிமிடத்துல ஓட்டுவேன். இதைவிட  என்ன  வேண்டும்.


இப்ப வச்சுருக்குறது 17-வது காரு. இது 2 வருடத்துக்கும் முன்னாடி ரூ. 40 ஆயிரத்துக்கு வாங்கினேன். எந்த  தொந்தரவும்  கிடையாது.  நல்லா ஓடுது.  இத்தனை ஆண்டுல இதுவரைக்கும் ஒரு இடத்துல கூட என்னுடைய  கார்  விபத்துக்குள்ளானதே இல்லை.  என்னுடைய காரைப்பார்த்தாலே  வழிவிட்டுருவாங்க. இப்ப சகல  வசதிகளோட  பிணம்  ஏத்துறதுக்கு வாகனங்கள்   வந்திருந்தாலும  என்னுடைய  காரும் ஓடிக்கிட்டேதான்  இருக்குது.
    

ஒரே கார்ல பிரசவத்துக்கும், பிணம் ஏத்தவும் போறதைப் பார்த்துட்டு ஒரு உடையார் இலவசமா ஒரு காரை கொடுத்து இதை பிரசவத்துக்கு ஓட்டுன்னு சொல்லி இருக்கிறார். எனக்குன்னு ஒரு குழி நிலம் கிடையாது. என்னுடைய உழைப்புதான்  மூலதனம். இன்றைக்கும் பழைய  இரும்புதான்  வியாபாரம்  செய்கிறேன்.  அதை  வச்சுத்தான்  காரை  பராமரிக்கிறேன்.        ஏழை  ஜனங்களுக்கு  இறுதிக்கட்டத்துல  உதவி  செய்யுறது  என்  வாழ்க்கையில்  ரொம்பவும் சந்தோஷமாக இருக்கு.  ஏழைகளுக்குத்தான்  உதவி  செய்யனும். பணகாரங்களுக்கு  உதவி  செய்ய  ஆள் நிறைய  இருப்பாங்க. என் உயிர் இருக்கும்வரை இதை செய்வேன் என்றார். 515 கணேசன். சில ஆண்டுகளுக்கு முன்பு நம்மிடம் இப்படிச் சொன்னார் 515 கணேசன் 2017 ல் இந்த சந்திப்பை நக்கீரனில் 2 பக்க செய்தியாக வெளியிட்டிருந்தோம். 


வயது முதிர்ந்தாலும் தன் சேவையை நிறுத்தவில்லை 515 கணேசன். தொடர்ந்து பழைய இரும்பு வியாபாரத்தை செய்து கொண்டே சேவைகளையும் செய்து தனது கடைசி கமளையும் திருமணம் செய்து கொடுத்தார். சுனாமி முதல் மழை வெள்ள பாதிப்பு வரை இயற்கை சீற்றத்தால் எந்த மாநிலத்தில் மக்கள் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு உதவ தனது 515 காரில் கிராமம் கிராமமாக சென்று நிவாரணப் பொருட்கைளை வாங்கி வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கி வருகிறார். கடந்த மாதம் கேரளாவுக்காக நிவாரணப் பொருட்கள் சேகரித்து நேரடியாக கொண்டு போய் கொடுத்தார். 


இத்தனை சேவைகளை செய்த 515. கணேசனுக்கு இதுவரை தமிழக அரசு எந்த பாராட்டும் கூட தெரிவிக்கவில்லை. ஆனால் பல தனியார் அமைப்புகள் விருதுகள் வழங்கியது. இந்த நிலையில் தான் கர்நாடகவில் உள்ள பாரத் விருச்சுவல் பல்கலைக்கழகம் 515 கணேசனின் சேவையை பாராட்டி டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. இந்த கௌரவ பட்டம் பெற்றதை தகுதியானவருக்கு கிடைத்த பட்டம் என்று புதுக்கோட்டை மாவட்ட மக்கள் வரவேற்றுள்ளனர்.  

 


 

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.