Skip to main content

"இந்த படம் ஒருவகையில் பிரிட்டிஷ் படைப்பென்றே சொல்லலாம்" - சந்தோஷ் நாராயணன் சிலிர்ப்பு!

Published on 11/06/2021 | Edited on 11/06/2021

 

vdbdbdb

 

தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'ஜகமே தந்திரம்'. இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் நடித்துள்ளனர். ஒய் நாட் ஸ்டுடியோஸ் சசிகாந்த் தயாரித்துள்ளார். இப்படத்தின் பணிகள் கடந்த ஆண்டின் தொடக்கத்திலேயே நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு மே மாதம் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டது. கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் படத்தின் வெளியீட்டில் சிக்கல் எழுந்தது. அதனைத் தொடர்ந்து, படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தயாரிப்பு தரப்பு முடிவெடுத்தது. இதனையடுத்து, ‘ஜகமே தந்திரம்’ படம் வருகிற 18ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில், படத்தின் இசை வெளியீடு குறித்த அறிவிப்பை படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டிருந்தார். அதன்படி, ‘ஜகமே தந்திரம் படத்தின்’ இசை ஆல்பம் ஜூன் 7 அன்று வெளியானது. இந்த ஆல்பத்தில் 8 பாடல்களும் 3 தீம் மியூசிக்குகளும் இடம்பெற்றுள்ள நிலையில், இப்படத்தின் இசை ஆல்பம் குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசியுள்ளார். அதில்...

 

“'ஜகமே தந்திரம்' படத்தின் இசைப்பணிகளுக்காக மிகப்பெரிய அளவில் நேரம் கிடைத்தது. உலக அளவில் பயணப்படும் படம் என்பதால் நிறைய மெனக்கெட்டேன். பல இடங்களில் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். இந்தப் படத்தின் இசை நம் மக்களுக்கு அந்நியமாக இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். இந்தப் படம் ஒருவகையில் பிரிட்டிஷ் படைப்பென்றே சொல்லலாம். அதிலும் பிரிட்டிஷ் பேண்ட் குழுவினர் மற்றும் இசை கலைஞர்கள், ஸ்காட்டிஷ் இசை கலைஞர்கள் என உலகம் முழுவதிலிருந்தும் பல திறமையாளர்களுடன் இணைந்து இப்படத்தில் பணிபுரிந்திருக்கிறேன். மதுரை நாட்டுப்புற இசையையும் இப்படத்தில் முயற்சித்திருக்கிறேன். ‘ஜகமே தந்திரம்’ படப்பிடிப்பிலும், கலந்துகொண்டேன். அதனால் படத்தில் இசை எப்படி காட்சிகளில் பொருந்தும், எது பொருந்தாது என்கிற தெளிவு கிடைத்தது. 

 

இந்த அனுபவமே புதுமையாக இருந்தது. ஒரு கலைஞனாக, பலவிதமான புதிய முயற்சிகளுக்கு இப்படத்தில் இடம் கிடைத்தது மிகப்பெரும் மகிழ்ச்சி. “ரகிட ரகிட...” பாடல் முதல்முறையாக எனது ஸ்டூடியோவிற்கு வெளியே பதிவுசெய்த பாடல். அந்தப் பாடலே ஒரு அனுபவத்தின் உணர்வின் வெளிப்பாடுதான். ரசிகர்கள் அந்த அனுபவத்தை உணர வேண்டும் என்று நினைத்தோம். படத்தின் மொத்த குழுவினருக்கும் எனது நன்றிகள். குறிப்பாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கு நன்றி. இப்படத்தில் அவருடன் இணைந்து நூற்றுக்கணக்கான புதிய முயற்சிகளை செய்தேன். அதனால் ‘ஜகமே தந்திரம்’ படத்திற்கு, காட்சிக்குத் தேவையான மண்ணின் இசையை, படத்தில் கொண்டுவந்துள்ளோம். ரசிகர்கள் படத்தைக் கொண்டாடுவார்கள் என நம்புகிறேன்" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்