Skip to main content

நிறைவேறிய நீண்டநாள் கனவு; பறிபோன இளம்பெண்ணின் உயிர்!

Published on 10/05/2024 | Edited on 10/05/2024
kerala woman passed away after eating Arali leaf while talking on phone with friends

கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம் அருகே அமைந்துள்ளது ஹதிப்பாடு. இப்பகுதியைச் சேர்ந்தவர் சுரேந்திரன். இவரது மகள் சூர்யா சுரேந்திரன். 24 வயதான இவர், பி.எஸ்சி நர்சிங் படித்து முடித்து மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றி வந்தார். ஆனால், அவருக்கு வெளிநாடு சென்று பணியாற்றுவதே பெரும் கனவாக இருந்தது. அதனால், அதற்கான வேலைவாய்ப்புகளைத் தேடி வந்தார்.

இந்த நிலையில், சூர்யா சுரேந்திரன் நினைத்தது போலவே லண்டனில் செவிலியராக பணியாற்றும் வேலை அவருக்கு கிடைத்தது. தான் நினைத்தது நடக்கவுள்ள மகிழ்ச்சியில் இருந்த சூர்யா, தனது சந்தோஷத்தை உறவினர்கள், நண்பர்களிடையே பகிர்ந்து வந்தார். வெளிநாடு கிளம்புவதற்கு முன்பு, அண்டை வீட்டார்களிடம் நற்செய்தியை சொல்லிவிட்டு மீண்டும் வீடு திரும்பும் வழியில் செல்போனில் உறவினர்களிடம் பேசிக் கொண்டே வந்துள்ளார். அப்போது, வீட்டின் முற்றத்தில் இருந்த அரளிப்பூவின் இதழை எதேச்சையாக எடுத்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது. செல்போனில் ஆர்வமிகுதியில் பேசிக்கொண்டு இருந்த சூர்யா தன்னிலை மறந்து  மரத்தில் இருந்த அரளிபூவை பறித்து சாப்பிட்டதாக குடும்பத்தினர் கூறுகின்றனர். அதன் பிறகு, தெரியாமல் சாப்பிட்ட அரளிப்பூ இதழை அவர் துப்பிவிட்டு லண்டன் செல்ல தயாராகியுள்ளார். இதையடுத்து, வீட்டில் இருந்து ஆட்டோ மூலம் கொச்சி விமானநிலையத்துக்குச் சென்றுள்ளார்.

அப்போது, செல்லும் வழியிலேயே சூர்யா சுரேந்திரன் பலமுறை வாந்தி எடுத்தும், செரிமான கோளாறு எனக் கடந்துச் சென்று கொச்சி விமானநிலையம் வந்தடைந்தார். தொடர்ந்து, ஆவணங்களை ஏர்போர்ட் ஊழியர்கள் சோதித்துக்கொண்டு இருக்கும்போது திடீரென செயவிலியர்  சூர்யா சுரேந்திரன் மயங்கி விழுந்துள்ளார். உடனே, அவர் அங்கமாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேரக்கப்பட்டுள்ளார். ஆனால், அங்கு போதிய வசதியில்லாத காரணத்தால் மேல் சிகிச்சைக்காக பருமலையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். அங்கு அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே, சிகிச்சையின் போது மருத்துவர்களிடம் பேசிய சூர்யா சுரேந்திரன், போனில் பேசியபடி, வீட்டு முற்றத்தில் இருந்த அரளிப்பூ இதழை எதேச்சையாக வாயில் போட்டு மென்றதாகவும், பின்னர் அதை துப்பிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதையே குடும்பத்தினரிடமும் கூறி சூர்யா சுரேந்திரன் உயிரிழப்பிற்கு காரணம் அரளிப்பூ என்று தெரிவித்துள்ளனர். எப்போதும் வகுப்பில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்ற சூர்யா சுரேந்திரன் ஆசைப்பட்ட வெளிநாட்டு வேலை கிடைத்த பொழுது இப்படியா நடக்க வேண்டும் என வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, சூர்யா சுரேந்திரனின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள், இதயம் நின்று போனதே மரணத்துக்குக் காரணம் என்ற தகவலை கூறியுள்ளனர். அரளியின் பூ, இலை, காய், வேர் ஆகியவற்றில் விஷம் உள்ளதாகவும், அதில் இதயத்தை செயல் இழக்கச் செய்யும் தன்மை உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், அரளிப்பூக்களால் உயிர்பலி ஏற்பட்டு இருப்பதாக கூறுவதால், உயிரிழந்த சூர்யா சுரேந்திரனின் உடல் உடற்கூறு ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்தவுடன்தான் இதுகுறித்து உறுதியான முடிவு எடுக்க முடியும் என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, செவிலியரின் மரணத்தை தொடர்ந்து, கோயில் பூஜைகளுக்கு புஷ்பாபிஷேகத்தின் போது உபயோகிக்கும் அரளிப்பூவிற்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது. அதற்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டு, 'செவிலியரின் மரணத்துக்கு அரளிப்பூதான் காரணம் என மருத்துவர்கள் உறுதியாக அறிவிக்காததால், தற்காலிகமாக அரளிப்பூவுக்கு விலக்கு ஏற்படுத்தவில்லை. உறுதியானால் நடவடிக்கை உறுதி..' எனத் தெரிவித்துள்ளது.

கேரளாவில் செவிலியர் ஒருவர் அரளிப்பூ சாப்பிட்டு மரணமடைந்ததாக கூறும் சம்பவம் பேசுபொருளாக மாறியுள்ளது

சார்ந்த செய்திகள்