கொல்கத்தாவிலுள்ள ஆர்ஜி கர் அரசு மருத்துவமனையில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் கடந்த 8ஆம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக போஸீஸ் விசாரணை மேற்கொண்டபோது சஞ்சய் ராய் என்பவரை கைது செய்தனர். இந்த சம்பவம் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அங்கு மருத்துவர்கள் பலரும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டு போராட்டம் நடித்தி வந்தனர். இதற்கிடையில் இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து ஏற்கனவே கைது செய்யப்பட்ட சஞ்சய் ராயை சிபிஐ அதிகாரிகளிடம் போலீஸார் ஒப்படைக்க, அவரின் குடும்பத்தினரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றர். அதோடு மட்டுமில்லாமல் சஞ்சய் வசிஷ்ட், அருணவா தத்தா, சவுத்ரி, ரீனா தாஸ், அபூர்ச பிஸ்வால் மற்றும் மோலி பானர்ஜி ஆகிய 5 மருத்துவர்களுக்கு சிபிஐ சமன் அனுப்பியுள்ளது.
நாடு முழுவதும் இந்த கொடூர சம்பவத்திற்கு நீதி கேட்டு பலரும் போராடி வருகின்றனர். அந்த வகையில் நேற்று இந்த சம்பவம் நடந்த மருத்துவமனை அருகே பலரும் கூடி நீதிகேட்டு போராட்டம் நடத்தினர். அப்போராட்டத்தின் போது, நாற்பதுக்கு மேற்பட்ட சமூக விரோதிகள் மருத்துவமனைக்குள் புகுந்து அங்குள்ள பொருட்களைச் சூறையாடினர். இது தொடர்பாக 9 பேரைக் கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதையடுத்து பல திரைப்பிரபலங்கள் இச்சம்பவம் தொடர்பாக பெண்களுக்கு பாதுகாப்பு குறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகை ரித்திகா சிங்கின் இன்ஸ்டாகிராம் பதிவில் “சொல்ல முடியாத அளவிற்கு கோபமும் ஆத்திரமும் வருகிறது. பெண்களுக்கு வெளியில் மட்டுமல்ல, சொந்த வீட்டுலும் அச்சத்துடன் வாழ வேண்டியுள்ளது. பெண்கள் பணிபுரியும் இடங்களில் அவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மாடர்ன் ஆடை அல்லது தலை முதல் கால் வரை ஆடை அணிந்திருக்கும் பெண்கள், வயதான பெண்கள், சிறுமிகள், சிறுவர்கள், மருத்துவமனையில் புதிதாக பிறந்த குழந்தைகள் உட்பட உண்மையிலேயே யாருக்கும் எங்கும் பாதுகாப்பாக இல்லாமல் இருக்கிறது. 31 வயதான மருத்துவர் 36 மணிநேரம் தொடர்ந்து வேலை செய்துவிட்டு ஓய்வு எடுக்கச் சென்றுள்ளார். அந்த சமயத்தில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு , துஷ்பிரயோகம் செய்யப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளார். அங்கு அவள் எத்தனை உயிர்களைக் காப்பாற்றி, தன் நாட்டு மக்களுக்குச் சேவை செய்திருப்பார் இறுதியில் இதுதான் அவளுடைய விதியா??? இந்த கொடூரமான சொல்ல முடியாத குற்றத்தை அவர்கள் செய்யும்போது, ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்க வேண்டிய அடிப்படை உரிமையை அவர்களிடமிருந்து பறிக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.