பாலிவுட்டின் நான்கு பிரபலங்களுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. நகைச்சுவை நடிகர் கபில் சர்மா, நடிகர் ராஜ்பால் யாதவ், நடன இயக்குனர் ரெமோ டிசோசா மற்றும் நடிகையும் பாடகியுமான சுகந்தா மிஸ்ரா உள்ளிட்ட நான்கு பேருக்கும் மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளது.
அந்த மின்னஞ்சலில் “உங்கள் சமீபத்திய செயல்பாடுகளை நாங்கள் கண்காணித்து வருகிறோம். மேலும் ஒரு முக்கியமான விஷயத்தை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவருவது அவசியம் என நம்புகிறோம். இது ஒரு விளம்பர ஸ்டண்டோ அல்லது உங்களைத் துன்புறுத்தும் முயற்சியோ அல்ல. இந்த செய்தியை மிகுந்த தீவிரத்துடனும் ரகசியத்துடனும் நடத்துமாறு நாங்கள் உங்களை கேட்டுக்கொள்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பிஷ்ணு என்ற பெயரில் இந்த மின்னஞ்சல் வந்துள்ளது. இது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக மும்பையில் உள்ள அம்போலி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் இந்த மின்னஞ்சல் பாகிஸ்தானில் இருந்து வந்துள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இதனிடையே மிரட்டல் வந்த பாலிவுட் பிரபலங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னதாக சல்மான் கானுக்கு தொடர்சியாக கொலை மிரட்டல் வந்து பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்பு சமீபத்தில் சைஃப் அலிகான் கத்திகுத்து விவகாரம் இன்னொரு பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இப்போது இந்த கொலை மிரட்டல் பரபரப்பை கிளப்பியுள்ளது.