Skip to main content

“விசாரணை நேர்மையாகத் தான் நடக்கிறது. ஆனால்...” - அமீர் விளக்கம் 

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
ameer about ed raid in his office and house regards jaffer sadiq issue

டெல்லியில் மத்திய போதைப் பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில், கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி 50 கிலோ ரசாயன வகை போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருள்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும், இதன் மொத்த மதிப்பு ரூ. 2 ஆயிரம் கோடி எனவும் தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்தப் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டது திரைப்படத் தயாரிப்பாளர் ஜாஃபர் சாதிக்குதான் என்பது தெரியவந்தது. அதே சமயம் கடத்தல் கும்பலுக்கு தலைவனாக ஜாஃபர் சாதிக் செயல்பட்டதும் உறுதியானது. இந்த வழக்கு விசாரணை தொடர்பாக ஜாபர் சாதிக் தேடப்பட்டு வந்த நிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் ஜெய்ப்பூரில் கடந்த மார்ச் மாதம் 9 ஆம் தேதி (09.03.2024) கைது செய்யப்பட்டு மத்திய போதைப் பொருள் தடுப்பு போலீசாரின் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையாகத் திரைப்பட இயக்குநரும், நடிகருமான அமீர், டெல்லியில் உள்ள போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி டெல்லியிலுள்ள தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் அமீர் தனது வழக்கறிஞருடன் கடந்த 2ஆம் தேதி (02.04.2024) ஆஜரானார். அப்போது அமீரிடம் 11 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து நேற்று (09.04.2024) சென்னை சாந்தோம் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை முதல் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் சென்னை தியாகராய நகர் ராஜன் தெருவில் உள்ள அமீர் அலுவலகம், சேத்துப்பட்டு முக்தார் கார்டனில் உள்ள அமீரின் வீடு ஆகிய இடங்களில் சோதனை நடந்தது. பின்பு அமீருக்கு மீண்டும் விசாரணைக்கு ஆஜராக போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் உத்தரவிட்டனர். 

இந்த நிலையில் என்.சி.பி விசாரணை, அமலாக்கத்துறை சோதனை குறித்து அமீர் பேட்டியளித்துள்ளார். மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற அமீர், செய்தியாளர்களிடம் பேசியதாவது, “ரெய்டில் சில ஆவணங்கள் எடுத்திருக்காங்க. என்ன ஆவணங்கள் என்பதை அவங்களே சொல்வாங்க. நான் சொல்வது சரியாக இருக்காது. இந்த விவகாரத்தில் நான் தொடக்க காலகட்டத்திலிருந்து சொல்லிக்கொண்டு வருவது, எந்த விசாரணைக்கும் தயாராக இருக்கிறேன் என்பது தான்.  சமூக வலைத்தளங்களில் என் மீது சுமத்தப்படுகின்ற குற்றத்திற்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இதை நிரூபிப்பேன். இறைவன் மிகப்பெரியவன். விசாரணை முடிந்து நிச்சயமாக இது குறித்து விரிவாக பேசுவேன். விசாரணை இன்னும் முடிவடையாத போது நான் எதுவும் பேசக்ககூடாது. விசாரணையை சிக்கலாகவும் மாற்றக்கூடாது. விசாரணை நேர்மையாகத் தான் நடக்கிறது. ஆனால் விசாரணைக்கு அழுத்தம் இருக்கிறதா? இல்லையா? என்பது எனக்கு தெரியாது” என்றார். 

சார்ந்த செய்திகள்

Next Story

நள்ளிரவு வரை நடந்த ரெய்டு - சிக்கலில் அமீர்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
ameer about ed raid and ncb investigation regards jaffer sadiq

உணவுப் பொருள் ஏற்றுமதி என்ற பெயரில், இந்தியாவில் இருந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு போதைப் பொருள் கடத்திய புகாரில் டெல்லியில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, போதைப் பொருள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக்கையும் அவரது கூட்டாளியையும் என்சிபி அதிகரிகள் கைது செய்தனர். போதைப்பொருள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட ஜாபர் சாதிக்கிடம் தீவிர விசாரணை செய்த என்சிபி அதிகாரிகள் அவருக்கு நெருங்கிய வட்டாரத்தை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர். ஜாபர் சாதிக் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக ஜாபர் சாதிக்கின் நெருங்கிய வட்டாரத்தைச் சேர்ந்த தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகருமான அமீருக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பினர். அமீருடன் சேர்த்து அப்துல் பாசித் புகாரி, சையது இப்ராஹிம் ஆகிய 3 பேருக்கு டெல்லி என்சிபி அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர். அதன்படி, டெல்லி ஆர்.கே.புரம் 1-வது செக்டரில் உள்ள என்சிபி தலைமை அலுவலகத்தில் அமீர் தனது வழக்கறிஞர்களுடன் கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி ஆஜரானார். அவரிடம் 11 மணி நேரம் விசாரணை நடத்திய என்சிபி அதிகாரிகள், வாக்குமூலங்கள் பதிவு செய்துகொண்டதாக தகவல் வெளியாகியது. இதனிடையே, ஜாபர் சாதிக் போதைப் பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய வருவாயை சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்தது மற்றும் சட்டவிரோதமாக முதலீடு செய்தது போன்ற விவரங்களை பெற்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் தானாக முன்வந்து வழக்கு ஒன்று பதிவு செய்ததாக தகவல் வெளியானது. தொடர்ந்து, ஜாபர் சாதிக்கின் போதைப் பொருள் கடத்தல் தொடர்பான ஆவணங்களைக் கையிலெடுத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரு புறம் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.       

இந்த நிலையில், திடீரென கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி காலையிலேயே அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஜாபர் சாதிக் தொடர்புடைய சுமார் 35 இடங்களில் சோதனை மேற்கொண்டனர். இதில், சென்னை சாந்தோம் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக் இல்லத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் அமலாக்கதுறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதுமட்டுமல்லாமல் ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் இருந்த இயக்குநர் அமீர் வீடு மற்றும் தி நகர் பகுதியில் உள்ள அலுவலகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கும், இயக்குநர் அமீரும் நண்பர்கள் என்பதாலும், போதைப் பொருள் கடத்தலில் ஈட்டிய பணத்தை திரைப்படத்துறையில் ஜாபர் சாதிக் முதலீடு செய்தாரா என்ற கோணத்திலும் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகியது. அதேபோல், ஜாபர் சாதிக்குடன் சினிமா தொடர்பான வேலைகளில் ஈடுபட்டு வந்த கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் இல்லத்திலும், புரசைவாக்கம் பகுதியில் உள்ள அலுவலகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 

காலையில் தொடங்கிய அமலாக்கத்துறை சோதனை இரவு 12 மணி வரை சென்றது. சோதனை முடிவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாக தகவல் வெளியாகியது. அமலாக்கத்துறை சோதனை முடிந்த அடுத்த நாளே மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்புத் தொழுகையில் இயக்குநர் அமீர் பங்கேற்றார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த இயக்குநர் அமீர், ரம்ஜான் வாழ்த்துக்களை ரசிகர்களுக்கு தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பேசிய அமீர், ''11 மணி நேரம் என்.சி.பி விசாரணை நடந்தது உண்மைதான். வீடு, அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடந்ததும் உண்மை தான். சோதனை முடிவில் அமலாக்கத்துறை சில ஆவணங்களை எடுத்து சென்றுள்ளனர். அது என்ன ஆவணங்கள் என்று அவர்களே சொல்வார்கள். எந்த விசாரணைக்கும் நான் தயார் நிலையில் இருக்கிறேன். சமூக வலைத்தளங்களில் என் மீது சொல்லப்படுகிற குற்றச்சாட்டுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதை நிரூபிப்பேன். விசாரணை இப்போது நடந்து வருவதால் என்னால் மேற்கொண்டு எதுவும் பேச முடியாது. அமலாக்கத்துறை சோதனை இரவு 12 மணிக்குத்தான் முடிந்தது.

விசாரணை நேர்மையாக தான் நடக்கிறது. ஆனால் விசாரணைக்கு அழுத்தம் இருக்கிறதா என்பது எனக்கு தெரியாது. எப்போதும் போல என்னிடம் இருந்து வருகின்ற ஒரே வார்த்தை இறைவன் மிகப்பெரியவன்..’ என்று இயக்குநர் அமீர் நடைபெறும் விசாரணை குறித்து தகவல் தெரிவித்தார். முன்னதாக என்சிபி இரண்டாவது முறையாக நேரில் ஆஜராக இயக்குநர் அமீருக்கு சம்மன் அனுப்பியதாவும், அவர் நேரில் ஆஜராக அவகாசம் கேட்டதாகவும் தகவல் வெளியாகியது. ஆனால் இயக்குநர் அமீர், என்.சி.பி.யின் இரண்டாம் கட்ட விசாரணைக்கோ, என்னிடம் உள்ள சொத்து ஆவணங்களை அறிக்கையாக தாக்கல் செய்யவோ நான் எந்தவொரு கால அவகாசமும் கேட்கவில்லை எனத் தகவல் தெரிவித்துள்ளார். இதனிடையே, 2020 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையில் அமீர் பெயரிலும் அவரது குடும்பத்தினர் பெயரிலும் வாங்கப்பட்ட சொத்துக்கள் என்னென்ன, இந்த காலகட்டத்தில் வங்கி பரிவர்த்தனை என்னென்ன என்ற விவரங்களை அதிகாரிகள் திரட்டி விசாரணை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  இரண்டாவது முறையாக என்சிபி அதிகாரிகளிடம் இயக்குநர் அமீர் ஆஜராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கின் போதைப் பொருள் வழக்கை என்சிபி அதிகாரிகள் தீவிரமாக கையில் எடுத்து இருப்பது தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது.

Next Story

ஜாபர் சாதிக் விவகாரம் - மீண்டும் அமீருக்கு வந்த நோட்டீஸ்

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
jaffer sadiq case ncb notice to ameer

டெல்லியில் மத்திய போதைப் பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி 50 கிலோ ரசாயன வகை போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருள்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும், இதன் மொத்த மதிப்பு ரூ. 2 ஆயிரம் கோடி எனவும் தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்தப் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டது திரைப்படத் தயாரிப்பாளர் ஜாஃபர் சாதிக் தான் என்பது தெரியவந்தது. அதே சமயம் கடத்தல் கும்பலுக்கு தலைவனாக ஜாஃபர் சாதிக் செயல்பட்டதும் உறுதியானது. இந்த வழக்கு விசாரணை தொடர்பாக ஜாபர் சாதிக் தேடப்பட்டு வந்த நிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் ஜெய்ப்பூரில் கடந்த மார்ச் மாதம் 9 ஆம் தேதி (09.03.2024) கைது செய்யப்பட்டு மத்திய போதைப் பொருள் தடுப்பு போலீசாரின் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையாகத் திரைப்பட இயக்குநரும், நடிகருமான அமீர், டெல்லியில் உள்ள போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி டெல்லியிலுள்ள தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் அமீர் தனது வழக்கறிஞருடன் கடந்த 2ஆம் தேதி (02.04.2024) ஆஜரானார். அப்போது அமீரிடம் 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது. 

இந்நிலையில் சென்னை சாந்தோம் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை முதல் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் சென்னை தியாகராய நகர் ராஜன் தெருவில் உள்ள அமீர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். இந்தச் சோதனை நடக்கும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப். (C.R.P.F.) வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதே போன்று சென்னையில் தியாகராயர் நகர், வண்ணாரப்பேட்டை, மயிலாப்பூர், அயனாவரம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். 

இதற்காக சேத்துப்பட்டு முக்தார் கார்டனில் உள்ள அமீரின் வீட்டிற்கு அதிகாரிகள் சென்றிருந்தனர். அப்போது அவர் வீட்டுக் கதவு திறக்கப்படாததால் அமலாக்கத் துறை அதிகாரிகள் 20 நிமிடங்கள் காத்திருந்ததாக கூறப்படுகிறது. பின்பு கதவு திறக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், போதைப் பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக அமீரை மீண்டும் விசாரணைக்கு ஆஜராக போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், விசாரணைக்கு வரும்போது கடந்த மூன்று ஆண்டுகளாக பயன்படுத்திய வங்கி கணக்குகள், மூன்று ஆண்டுகளாக தன் குடும்பத்தின் பெயரில் வாங்கிய சொத்துகள் மற்றும் ஜாபர் சாதிக் உடன் தொழில் கூட்டாளியாக இணைந்ததற்கான ஆதாரங்கள் ஆகியவற்றை அமீர் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதனிடையே போதைப்பொருள் கடத்தல் தடுப்பு அமைப்பு, அமீருக்கு புதிதாக எந்த சம்மனும் அனுப்பவில்லை என்றும் ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கான நினைவூட்டல் கடிதம் மட்டுமே அனுப்பப் பட்டதாகவும் கூறப்படுகிறது.