Skip to main content

நிறம் மாறும் செங்கொடி தேசம் – வியட்நாம் பயணத் தொடர் பகுதி – 3

Published on 06/01/2024 | Edited on 06/01/2024
vietnam travel series part 3

இமிகிரேஷனுக்காக காத்திருந்தபோது நண்பர் தனது பாஸ்போட்டை தொலைத்துவிட்டு தேடினாருனு போன பகுதியில சொன்னேன்ல.. அப்பறம் என்ன ஆச்சு தெரியுமா?

பாஸ்போர்ட் காணல எனச் சொன்னபோது நாங்க அதிர்ச்சியாகி, “சார், நல்லா தேடிப்பாருங்க” என்றோம். “நல்லா தேடிட்டேன்.. காணோம்” என்றார் பதற்றத்தோடு. எங்க எல்லாருக்கும் பகீரென ஆனது. ஒரு நண்பர், “பிளைட்ல மிஸ்சாகி இருக்குமா?” எனச் சொல்ல.. “இருக்காதே... எதுக்கும் போய் பார்த்துடுவோம் வாங்க” எனச் சொல்லி நண்பருடன் வந்த வழியே திரும்ப ஓட்டமும் நடையுமாக சென்றோம்.

அந்த நிமிடங்களில் மனதுக்குள் பாஸ்போர்ட் இல்லைன்னா இவரை வெளியே விடுவாங்களா? விடமாட்டாங்களா? நம்மவூர் சிம் கார்டு இங்க எடுக்காது. நெட் கனெக்ட் செய்யவும் முடியல. வெளியே போனால்தானே யாரிடமாவது உதவி கேட்க முடியும். நமக்கு சீல் போட்டு வெல்கம் வியட்நாம்னு வரவேற்பாங்க. பாஸ்போர்ட் இல்லாத நண்பரை திருப்பி அதே பிளைட்ல அனுப்பிடுவாங்களா என மனதுக்குள் மின்னல் வேகத்தில் பலப்பல கேள்விகள் எழுந்துகொண்டே இருந்தன. 

vietnam travel series part 3

விமானத்தில் இருந்து இறங்கி நடந்து வந்த கேட் மூடியிருந்தது. அந்தப் பகுதியில் லேசான விளக்கு வெளிச்சம், மனித நடமாட்டமே இல்லாமல் அமைதியாக இருந்தது. அது இன்னும் திகிலை கூட்டியது. பலவித கேள்விகளோடும், குழப்பங்களோடும் திரும்பி இமிகிரேஷன் பகுதிக்கு வந்தபோது, நண்பரின் பாஸ்போட்டோடு அண்ணன் நின்றிருந்தார். அதனைப் பார்த்ததும் மரணப் படுக்கையில் இருந்து மீண்டு எழுந்ததுபோல் சந்தோஷம். அண்ணனிடம் விசாரித்தபோது, ஷோல்டர் பேக்கில் உள்ள ரகசிய ஜிப்பில் வைத்திருந்ததை கண்டுபிடித்து எடுத்ததைச் சொன்னார். சிலபல வசைப் பாடல்களுக்கு பிறகு அனைவரும் இமிகிரேஷனுக்காக லைனில் நின்றோம். 

‘நொய்பாய்’ சர்வதேச விமான நிலையத்தில், சென்னை, கொல்கத்தா விமான நிலையத்தில் நின்றிருந்த பாதுகாப்புப் படையினரில் 10ல் ஒரு பங்கு சதவிகிதத்தினரே பாதுகாப்பில் இருந்தனர். சர்வதேச விமான நிலையம் பரபரப்பு இல்லாமல் சாதாரணமாக இருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சீனா இமிகிரேஷன் அலுவலர்கள் அறை பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருந்தது. பல நிமிடங்களுக்கு பிறகு நம் முறை வந்தபோது, பாஸ்போர்ட், விசாவை வாங்கி பார்த்து பாஸ்போட்டில் சீல் குத்தியவர் தலைகுணிந்து மரியாதை செலுத்தி வியட்நாம் நாட்டுக்குள் நுழைய அனுமதி தந்தார். 

வியட்நாமுக்குள் நுழைந்ததும், அந்த நாட்டு சிம் கார்டு வாங்க வேண்டும், செலவுக்கு அந்நாட்டு கரன்சி வேண்டும் என்பதற்காக இந்திய ரூபாயை வியட்நாம் பணமாக மாற்ற வேண்டுமென விமான நிலையத்தின் உள்ளேயே இருந்த மணி எக்ஸ்சேஞ்க்கு சென்றோம். அங்குள்ள தகவல் அறிவிப்பு பலகையில் அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மன், இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட தேசத்தின் பணத்திற்கு வியட்நாம் நாட்டின் பண மதிப்பு எழுதி வைத்திருந்தார்கள். இந்திய ரூபாய்க்கு வியட்நாம் பணம் எவ்வளவு தருவார்கள் என்கிற அறிவிப்பு அந்த பலகையில் மட்டுமல்ல நாட்டின் எந்த இடத்திலும் இருந்த கரன்சி எக்ஸ்சேஞ்சிலும் இல்லை.  

vietnam travel series part 3

நமது இந்திய பணம் 1 ரூபாய் அவர்கள் நாட்டு மதிப்புபடி 291.80 டாங். டாங் என்பது வியட்நாம் தேசத்தின் ரூபாயின் பெயர். இந்தியாவின் ஒரு ரூபாய்க்கு வியட்நாம் எக்ஸ்சேஞ்ச்சில் 291.80 டாங் தரவேண்டும். அவர்கள் தந்தது என்னவோ 240 டாங் தான். அமெரிக்கா டாலர் 1 ரூபாய்க்கு வியட்நாம் டாங் 24,332.50 தரவேண்டும், அவர்கள் தந்தது 24,000 டாங். அதாவது இந்திய ரூபாய்க்கு மிக குறைந்த தொகையே தருகிறார்கள். அமெரிக்கா டாலருக்கு சரியான தொகையை தந்தார்கள். நம்மிடம் இருந்த 100 அமெரிக்க டாலரை மாற்றியபோது 24 லட்சம் டாங் தந்தார்.

அந்நாட்டு கரன்சி வாங்கியதும், அருகிலேயே இருந்த மொபைல் கம்பெனி ஒன்றில் சிம்கார்டு விலை கேட்டபோது, ஒரு மாதத்துக்கு 100 நிமிடம் இன்டர்நேஷ்னல் கால்ஸ் பேசிக்கலாம், 2 ஜீ.பி நெட் பயன்படுத்திக்கொள்ளும் சிம்கார்டு நம்மவூர் பணத்துக்கு 1800 ரூபாய் என்றதும் ஒரே ஒரு சிம்கார்டு மட்டும் வாங்கிக்கொண்டு நாங்கள் வெளியே எங்களுக்காக காருடன் காத்திருந்தவருடன் கிளம்பினோம். 

வழுவழுப்பான அந்த சாலையில் வெண்ணையில் கத்தியை சொருகினால் எப்படி போகுமோ அப்படி போனது அந்த கார். நாங்கள் சென்ற காருக்கு முன்னே, பின்னே எந்த வாகனமும் இல்லை. ஏர்போட்டில் இருந்து நகரத்துக்குள் கார் சென்றபோது, ஊரடங்கு உத்தரவு போடப்பட்ட நகரம் போலவே இருந்தது தலைநகரம். ஒருநாட்டின் தலைநகரமே இப்படியொன்றால் மற்ற நகரங்கள் எப்படி இருக்கும் என நினைத்தபோது வியப்பாக இருந்தது.

vietnam travel series part 3

ஏர்போர்ட்டில் இருந்து 15 கிலோ மீட்டர் தாண்டியிருப்போம். யாருமே இல்லாத அந்தச் சாலையில், ட்ராபிக் சிக்னல் குறுக்கிட்டது. ரெட் லைட் எரிந்ததும் காரை நிறுத்திவிட்டார் வியட்நாமைச் சேர்ந்த இளைஞரான அந்த ஓட்டுநர். 30 நொடிகள் கடந்து பச்சை விளக்கு எரிந்த பின்பே கார் புறப்பட்டது. இப்படி ஐந்து இடத்தில் சிக்னல் குறுக்கிட்டது. ஓரிடத்திலும் ட்ராபிக் ரூல்ஸ்சை மீறவில்லை. யாருமற்ற சாலையில், இரவில் ட்ராபிக் ரூல்ஸ் மதிப்பதை பார்த்து ஆச்சரியமாக இருந்தது. ஏர்போர்ட்டில் இருந்து நாங்கள் தங்க வேண்டிய ஹோட்டல் 32 கி.மீ தூரம். இவ்வளவு தூரத்துக்கும் காரின் வேகம் மணிக்கு 60 கி.மீ வேகத்தை தாண்டவேயில்லை. அதைவிட ஆச்சர்யம், நாங்கள் தங்கும் இடம் வந்ததும் காரை விட்டு இறங்கி கார் கதவுகளை திறந்துவிட்டவர் நமது லக்கேஜ்களை எடுத்து தந்து ஹோட்டல் பணியாளரிடம் எங்களை ஒப்படைத்துவிட்டு தலைகுணிந்து நன்றி சொல்லிவிட்டு விடைபெற்றார். 

வியட்நாம் நாட்டின் சாலையில் பயணித்து, நாங்கள் தங்க வேண்டிய ஹோட்டலில் இறங்கியபோது, மனைவியும், நண்பர்களும் கேட்ட கேள்விகள் மனதில் ஓடியது. அவர்களுக்கு நான் சொன்ன பதில் என்ன தெரியுமா?

தொடர்ந்து பயணிப்போம்… 

நிறம் மாறும் செங்கொடி தேசம்! வியட்நாம் பயணத் தொடர் பகுதி – 2