ஓடும் வாகனங்களில் ஏறித் திருடும் திருடர்களையும் அவரது கூட்டாளிகளான சிஷ்யர்களையும் பற்றி சினிமா பாணியிலான த்ரில் வழக்கு குறித்து முதல் பெண் துப்பறிவாளர் மாலதி விவரிக்கிறார்.
தார்ப்பாய் முருகன் என்பவர் மதுரை வட்டாரத்தில் திருட்டுகளில் ஈடுபடுபவர். அவர் குறித்த படம் கூட வெளிவந்தது. இப்போது அவர் உயிருடன் இல்லை. லாரியில் விலையுயர்ந்த பொருட்களை ஏற்றி வரும்போது அதில் ஏறி, தார்ப்பாயை அகற்றி, பொருட்களை எடுத்து வெளியே வீசி, தானும் தப்பிப்பது அவருடைய பாணி. அவருக்கு பல சிஷ்யர்கள் இருந்தனர். இப்படி அவரால் பாதிக்கப்பட்ட ஒரு கம்பெனியினர், தங்களுடைய முக்கியமான ஒரு பொருள் திருடு போய்விட்டது என்றும் அந்த பொருளை மீட்டுத் தருமாறு நம்மிடம் புகார் கொடுத்தனர். லாரியில் ஒருவர் பாதுகாப்புக்கு அமர்ந்து வந்தபோதும் இந்த திருட்டு நடந்துள்ளது.
தார்ப்பாய் முருகனை சந்திக்க அப்பாவியான ஒரு நபரை நாங்கள் அனுப்பினோம். "ஒரு பொருளைக் காணவில்லை. எங்களுடைய சார் உங்களை சந்திக்க வேண்டும் என்று சொன்னார்" என அந்தப் பையன் அவரிடம் சொன்னான். நள்ளிரவில் சந்திப்பதாக அவர் பதில் கூறினார். தான் அந்தப் பொருளை எடுக்கவில்லை என்றும், தன்னுடைய சிஷ்யர்கள் இந்த வேலையைச் செய்திருப்பார்கள் என்றும் அவர் கூறினார். தார்ப்பாய் முருகனிடமிருந்து எனக்கு ஃபோன் வந்தது. எங்கு திருட்டு நடந்தாலும் தனக்கு தெரிவிக்குமாறும், தான் கண்டுபிடித்துத் தருவதாகவும் அவர் என்னிடம் கூறினார்.
அதன் பிறகு அந்தப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. எப்படிப் பயன்படுத்துவது எனத் தெரியாமல் புதைத்து வைக்கப்பட்டிருந்த அந்தப் பொருளை தார்ப்பாய் முருகன் கேட்டதும் அவருடைய சிஷ்யர்கள் எடுத்துக் கொடுத்தனர். இந்த வழக்கு எங்களுக்கு ஒரு த்ரில்லான அனுபவமாக இருந்தது. இதுபோன்ற வழக்குகளை இப்போது மிகவும் யோசித்து தான் நாங்கள் எடுக்கிறோம். ஏனெனில் இவற்றில் எதிரிகள் அதிகம். ஆனால் ரிஸ்க் இல்லாமல் எந்த வேலையும் செய்ய முடியாது.