பிரிந்து சென்ற அப்பாவின் ஏக்கத்தால் மனமுடைந்த சிறுமிக்கும், பெற்றோருக்கும் கொடுத்த கவுன்சிலிங் பற்றி குழந்தை வளர்ப்பு ஆலோசகர் ஆஷா பாக்யராஜ் நம்மிடம் விவரிக்கிறார்.
சிங்கிள் பேரண்டாக இருக்கும் அம்மா, தன் மகளை அழைத்து என்னிடம் வந்தார். மகள் ரொம்பவும் அக்ரஸிவ்வாக இருக்கிறாள், பெரிதாக பேச மாட்டிக்கிறாள், கான்செட்ரேட் செய்ய மாட்டிக்கிறாள், அவளுக்கு ஏதோ ஒரு பிரச்சனை இருப்பதாக தான் அம்மா என்னிடம் சொன்னார்.
அந்த குழந்தையிடம் நான் பேசுகையில், ரொம்பவே அழகாக பேசினாள். பிரச்சனைகளை முதலில் கூறாமல், கான்செட்ரேட் பிரச்சனை இருப்பதாக சொன்னாள். செக்சன் போக போக, அக்ரஸிவ் பற்றி பேச ஆரம்பித்தேன். அம்மா அப்பாவும், டைவர்ஸ் வாங்காமல் மூன்று வருடமாக பிரிந்து வாழ்கின்றனர். அப்பா, அவளிடம் அடிக்கடி போன் போட்டு பேசிக் கொண்டிருக்கிறார். அப்பாவுக்கும், மகளை ரொம்ப பிடிக்கிறது. இவளுக்கும் அப்பாவை ரொம்பவே பிடிக்கிறது. அப்பா அம்மாவுக்குள் சண்டை என்பதால், தன்னால் சரிபடுத்த முடியவில்லை. அப்பாவை ரொம்பவே மிஸ் பண்ணுவதாக சொன்னாள். அதனால், தான் அம்மா மேல் கோபம் வருவதாகவும் கூறினாள்.
அப்பாவை பற்றி அம்மாவிடம் பேச போனாலே, அம்மாவுக்கு பிடிக்க மாட்டிக்கிறது. அப்பா நியாபகம் வரும்போதெல்லாம், அம்மா மீது கோபம் வருகிறது. இதனால் தான் படிப்பிலும் கான்செட்ரேட் செய்ய முடியவில்லை என்றும் கூறினாள். இந்த விஷயம் பேசும் போது அவள், அப்பாவின் பிரிவினால் ஏக்கமாக இருந்தாள். இது பற்றி அம்மாவிடம் சொன்னேன். தன்னாலும், மீண்டும் சேர்ந்து வாழ முடியாது என்று சொன்னார். அது உங்கள் பெர்ஷனல் விஷயம், ஆனால் குழந்தைக்கு இது தான் பிரச்சனை என்றேன். உங்கள் பிரச்சனையை சரி செய்தால் தான், குழந்தை நன்றாக இருக்கும். அப்பா அம்மாவுக்குள் ஏற்பட்ட சண்டையினால், குழந்தைகள் எந்தளவுக்கு பாதிக்கப்படும் என்று இதற்கு முன்னாடி நடந்த கவுன்சிலிங் பற்றி அவரிடம் எடுத்து கூறினேன்.
குழந்தையின் மூலமாக அப்பாவை வரச் சொன்னேன். அம்மா அப்பா, இரண்டு பேரையும் ஒன்றாக வைத்து தான் பேச ஆரம்பித்தேன். அவர், தன் மனைவியின் முகத்தை பார்க்க கூட அவர் தயாராக இல்லை. பழைய இன்சிடெண்ட்டையே திருப்பி திருப்பி மாற்றி மாற்றி குற்றம்சாட்டி பேசினார்கள். கடைசி வரை அவர்கள் ஒன்றாக வாழ விருப்பப்படவே இல்லை. அந்த குழந்தையை அழைத்து பேசினேன். அப்பா அம்மா பிரிந்தது, பிரிந்தது தான். அவர்கள் சேர்ந்து வாழ விரும்பவில்லை எனப் பேசினேன். அதன் பிறகு, செக்சன் போக போக, இருவரும் சேர்ந்த வாழ சம்மதித்தார்கள். ஆனால், வேறு வேறு அறையில் பிரிந்து குழந்தைக்காக இருக்கிறோம். அவரவர் தனித்தனியாக சமைத்து, மற்றவர் விஷயத்தில் அவரவர் தலையிடக்கூடாது. ஆனால், குழந்தை என்று வரும்போது இரண்டு பேரும் பொறுப்பேற்க வேண்டும் என்பது போல பல கண்டிசன் போட்டு ஒரே வீட்டில் சேர்ந்து வாழ ஒப்புக்கொண்டார்கள். இதை சொன்னதுமே, அந்த குழந்தை அவ்வளவு சந்தோஷப்பட்டு அப்பாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தாள். அப்பா அம்மா எடுத்த முடிவை மதித்து அந்த குழந்தையும் நடந்துகொண்டிருக்கிறாள்.