Skip to main content

WTC: உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா; தொடர் தோல்வியில் இந்தியா

Published on 11/06/2023 | Edited on 11/06/2023

 

WTC: World Cup winning Australia; India in a losing streak

 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதிய இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித் - ட்ராவிஸ் ஹெட் கூட்டணி சிறப்பாக ஆடி முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 469 ரன்களைக் குவித்தது. அதிகபட்சமாக ட்ராவிஸ் ஹெட் 163 ரன்களையும் ஸ்டீவென் ஸ்மித் 121 ரன்களையும் எடுத்தனர். இந்திய அணி சார்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்களையும் முகமது ஷமி, ஷர்துல் தாக்கூர் தலா 2 விக்கெட்களையும் ரவீந்திர ஜடேஜா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

 

அதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி தொடர் தடுமாற்றத்துடனே ஆடியது. முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 296 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக அஜிங்க்யா ரஹானே 89 ரன்களையும் ஷர்துல் தாக்கூர் 51 ரன்களையும் ரவீந்திர ஜடேஜா 48 ரன்களையும் எடுத்தனர். சிறப்பாக பந்து வீசிய ஆஸ்திரேலிய அணியில் பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்களையும் மிட்சல் ஸ்டார்க், ஸ்காட் போலண்ட், கேமரூன் க்ரீன் தலா 2 விக்கெட்களையும் நேதன் லயன் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 173 ரன்கள் முன்னிலை பெற்றது.

 

அதைத் தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்களை இழந்து 270 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்து இந்திய அணிக்கு 444 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக அலெக்ஸ் கேரி 66 ரன்களையும் ஸ்டார்க் மற்றும் லபுசானே தலா 41 ரன்களையும் எடுத்திருந்தனர். இந்திய அணி சார்பில் ஜடேஜா 3 விக்கெட்களையும் உமேஷ் மற்றும் ஷமி தலா 2 விக்கெட்களையும் சிராஜ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இதன் பின்  தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்களை இழந்து 164 ரன்களை எடுத்தது.

 

இந்நிலையில் கடைசி நாளான இன்று இந்தியா தனது பேட்டிங்கை தொடர்ந்தது. இந்தியா வெற்றி பெற 280 ரன்களும் ஆஸ்திரேலியா வெற்றி பெற 7 விக்கெட்களும் தேவைப்பட்டது. ஆஸ்திரேலியாவின் சிறப்பான பந்துவீச்சில் இந்திய அணியின் விக்கெட்கள் வேகமாக சரிந்தது. முதலில் கோலி தனது விக்கெட்டை பறிகொடுக்க அடுத்து ஜடேஜா, ஷர்துல் தாக்கூர் என தொடர்ச்சியாக விக்கெட்களை இழந்து பெவிலியன் திரும்பினர். இறுதியில் இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 234 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ட்ராவிஸ் ஹெட் தேர்வு செய்யப்பட்டார்.

 

இதன் மூலம் அனைத்து வகையான உலகக் கோப்பைகளையும் வென்ற அணி என்ற பெருமையை ஆஸ்திரேலியா பெற்றது.