இங்கிலாந்தில் நடந்துவரும் உலகக்கோப்பை தொடரில் நேற்றைய ஆட்டத்தில் இலங்கை, இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் கருணரத்னே, பெரேரா களமிறங்கினர். இருவரும் ஒற்றை இலக்கத்தில் அவுட்டாகி அடுத்தடுத்து அதிர்ச்சியளித்தனர். அதன் பிறகு நிதானமாக ஆடிய ஃபெர்னான்டோ 49 ரன்கள், மென்டிஸ் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 232 ரன்கள் மட்டுமே எடுத்தது இலங்கை அணி.
233 என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி மலிங்காவின் பந்துவீச்சில் சின்னாபின்னமானது. பேர்ஸ்டோவ், வின்ஸ், ஜோ ரூட், பட்லர் என 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார் மலிங்கா. இறுதியில் இங்கிலாந்து அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்த வெற்றி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துபதிவிட்டிருக்கும் இலங்கை அணியின் முன்னாள் வீரர் ரஸல், “டேய் மார்கன், எப்போ வந்தோம் ங்கறது முக்கியம் இல்ல டா, புல்லட் எப்டி எறங்குது ங்கறது தான் முக்கியம்” என்ற விஜய்யின் போக்கிரி பட வசனத்தை குறிப்பிட்டுள்ளார்.மேலும் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கும் அவர், பிகில் படத்தைக் காண ஆவலாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அவரின் இந்த ட்வீட் இப்போது வைரலாகி வருகிறது.